கிங்டம் விமர்சனம்: விஜய் தேவரகொண்டா இலங்கை தீவில் மறைந்த உண்மையை கண்டுபிடித்தாரா?

பட மூலாதாரம், X/@TheDeverakonda

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கிங்டம் படம் விஜய் தேவரகொண்டா நடிப்பில், கவுதம் தின்னனூர் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. கவுதம் தின்னனூர் கிரிக்கெட்டை மையமாக கொண்டு தெலுங்கில் வெளியான ஜெர்சி என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானார்.

விஜய் தேவரகொண்டா கல்கி படத்தில் கேமியோ பாத்திரத்தில் தோன்றிய பிறகு, வெளியாகியிருக்கும் அடுத்த படம் இது. இந்தப் படம் தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது.

ஒரு போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் சூரி (விஜய் தேவரகொண்டா) சிறு வயதில் வீட்டை விட்டு ஓடி போன தனது அண்ணன் சிவாவை ( சத்யதேவ்) தேடி செல்கிறார்.

அவரது அண்ணன் இலங்கையில் பழங்குடியினரின் தீவில் வாழ்ந்து வருகிறார். அந்த தீவில் சூரி ஒரு அண்டர்கவர் ஆபரேஷனுக்கு செல்ல தயாராகிறார். அந்த தீவில் உள்ளவர்களை வைத்து நடைபெறும் கடத்தல் தொழிலை எப்படி ஒழிக்கிறார், தன் அண்ணனை கண்டுபிடிக்கிறாரா என்பதுதான் படத்தின் சாராம்சம்.

பட மூலாதாரம், X@TheDeverakonda

‘சிறப்பாக நடித்துள்ள விஜய் தேவரகொண்டா’

தி இந்து தமிழ் நாளிதழ் வெளியிட்டுள்ள திரைப்பட விமர்சனத்தில் “முதல் பாதியில் கதையை நன்கு ‘செட்’ செய்தத்தில் இயக்குநர் கவுதம் தின்னனூர் கவனிக்க வைக்கிறார். அதீத ஹீரோயிசங்கள் பெரியளவில் எதுவுமின்றி ஓரளவு நம்பகத்தன்மைகளை காட்சிகளில் இடம்பெறச் செய்தது ரசிக்க வைக்கிறது. ஆனால், படத்தின் பிரச்னையே இரண்டாம் பாதியில்தான் தொடங்குகிறது. முதல் பாதியில் எந்த தொய்வுகளும் இன்றி நேர்கோட்டில் சென்று கொண்டிருந்த திரைக்கதை, இரண்டாம் பாதியில் தடுமாறத் தொடங்கிவிடுகிறது” என்று குறிப்பிடுகிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

விஜய் தேவரகொண்டாவுக்கு நடிகராக முக்கியமான படம் இது என்று குறிப்பிடும் தி இந்து தமிழ், ” போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்து பின்னர் இலங்கைக்கு சென்ற பின் அவருள் ஏற்படும் மாற்றம் என தன்னுடைய கதாபாத்திரத்துக்காக அதீத உழைப்பை கொட்டி நடித்திருக்கிறார். அவருடைய அண்ணனாக வரும் சத்யதேவும் நிறைவான நடிப்பு.” என்று குறிப்பிடுகிறது.

படத்தின் உண்மையான ஹீரோக்கள் இசையமைப்பாளர் அனிருத்தும், ஒளிப்பதிவாளர்கள் கிரிஷ் கங்காதரன், ஜோமோன் டி.ஜான் ஆகியோரும்தான் என்றும் குறிப்பாக படத்தின் தொடக்கத்தில் வரும் பிரிட்டிஷ் காலத்து காட்சியில் ஒளிப்பதிவு, பின்னணி இசை இரண்டும் அட்டகாசம் என்றும் தி இந்து தமிழ் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஒளிப்பதிவு, இசைக்கு குவியும் பாராட்டு

தினமணி நாளிதழ் வெளியிட்டுள்ள விமர்சனத்தில், “கதாநாயகிக்கு கொடுக்கப்பட்ட நேரமும் குறைவு, முக்கியத்துவமும் குறைவு! ஆனால் வந்த நேரத்தில் கதை கேட்கும் இடங்களை நிரப்பியிருக்கிறார். அடுத்ததாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐய்யப்பா பி. சர்மா, பி.எஸ். அவினாஷ் உள்ளிட்ட அனைவருமே தேவையான நடிப்பைக் கொடுத்துள்ளனர். வில்லனாக வலம் வந்த வெங்கிடேஷ் வி.பி. மிகக் கொடூர வில்லனாக மிரட்டுகிறார். சில முகம் தெரிந்த நடிகர்கள் வந்தாலும், பலர் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயம் இல்லாதவர்கள்தான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வேறு சில ஊடக விமர்சனங்களில் குறிப்பிட்டிருப்பது போலவே, தினமணியிலும் படத்தின் இரண்டாம் பாதி தொய்வாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

“முதல்பாதியில் ஒரு 30 நிமிடம் விறுவிறுப்பாகவும், கதைக்கு நேர்மையான நடிப்பு மற்றும் திரைக்கதையாலும் படம் நல்ல தளத்தை ஏற்படுத்திக்கொடுக்கிறது. ஒளிப்பதிவாளர்கள் கிரிஷ் கங்காதரன், ஜோமோன் டி ஜான் இருவரும் நல்ல வேலைபாட்டைக் கொடுத்துள்ளனர். சில காட்சிகளில் ‘கொஞ்சம் நல்லா இருந்துருக்கலாம்’ எனத் தோன்றினாலும், சண்டைக் காட்சிகள் அனைத்திலும் சிறப்பான வேலையைச் செய்துள்ளனர். சண்டைக்காட்சிகளையும் மிக நன்றாகவே உருவாக்கியுள்ளனர்” என்று தினமணி விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், X/@TheDeverakonda

‘இரண்டாம் பாதி தள்ளாடுகிறது’

தி இந்து ஆங்கில நாளிதழ், “எரிந்த சிவப்பு, பழுப்பு மற்றும் கருப்பு நிறங்கள் நிறைந்த நீரஜா கோணாவின் ஆடை வடிவமைப்பு, கதையின் தீவிரத்தை பிரதிபலிக்கிறது. அனிருத் ரவிச்சந்தரின் இசை அதன் பங்கை வகிக்கிறது, தேவைப்படும்போது படத்தை முன்னெடுத்துச் செல்கிறது. மௌனம் தேவைப்படும் இடங்களில் அதையும் அனுமதிக்கிறது. படத்தின் பெரும்பாலான நேரத்தில் விஜய் தேவரகொண்டா பேசுவதில்லை, எனினும் இதுவரை இல்லாத அளவிலான சிறப்பான நடிப்பை தந்துள்ளார். காட்டில் துரத்தி செல்லும் ஒரு காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரர் கதாபாத்திரமான ஷிவா, ஹீரோவாக சிறப்பாக காட்டுவதற்காக எழுதப்படாமல், அர்த்தமுள்ளதாக எழுதப்பட்டுள்ளது” என்று படத்தைப் பற்றி வெளியிட்டுள்ள விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், “இரண்டாம் பாதியில் படம் சற்று தள்ளாடுகிறது. சண்டைக் காட்சிகள் மேலும் வன்முறையாகவும், அடுத்த என்ன நடக்கும் என்று கணிக்கக் கூடியதாகவும் அமைகின்றன. க்ளைமாக்ஸ் காட்சிகள் அவசரமாக நடைபெறுவதாக தோன்றுகிறது. முந்தைய காட்சிகளில் மௌனமே பலமாக இருந்த நிலையில், இறுதியில் வாய்ஸ் ஓவரை அதிகமாக பயன்படுத்தியுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், X/@TheDeverakonda

தி டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள படத்தின் விமர்சனத்தில், ” இடம் பெயர்த்தப்பட்ட மக்கள் தங்கள் மூதாதையரின் ஞானம் கொண்ட ஒருவர் வந்து தங்களை ஒரு நாள் விடுவிப்பார் என்ற நம்பிக்கையை” வலியுறுத்துகிறது இந்தப் படம் என்று கூறுகிறது.

“சூரி கதாபத்திரத்தில் நடித்துள்ள விஜய் தேவரகொண்டா துயரத்தையும் பதில் கிடைக்காத கேள்விகளின் பாரத்தையும் ஏந்திக் கொண்டு சிறப்பாக நடித்துள்ளார். தனது சகோதரராக நடித்துள்ள சத்யதேவ் உடன் அவர் நடித்த காட்சிகள் படத்தின் சிறந்த காட்சிகள் ஆகும்” என்றும் அந்த விமர்சனம் குறிப்பிடுகிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு