பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், தினேஷ் குமார். எஸ்பதவி, பிபிசி தமிழுக்காக2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆண்டர்சன்–டெண்டுல்கர் டெஸ்ட் தொடரின் சிறப்பம்சமே யார் எந்த செஷனை வெல்வார்கள் என்ற எதிர்பாராத தன்மைதான். பும்ரா, பந்த் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில் அந்த பரபரப்பு இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது.

ஆனால், ஓவல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம், அந்த சந்தேகங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. மழை குறுக்கீடுகள் இருந்தபோதும் விறுவிறுப்பு குறையாத நாளாக நேற்று அமைந்தது.

வழக்கம்போல இந்த டெஸ்டிலும் இந்திய அணி டாஸை பறிகொடுத்ததால், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஓவல் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.

இந்த தொடரின் அனைத்து டெஸ்ட்களிலும் கில் டாஸை துரதிர்ஷ்டவசமாக கோட்டைவிட்டுள்ளார். கடைசி 15 போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக டாஸை இழந்துள்ளதை என்னவென்று சொல்வது?

இந்திய அணியில் ஷார்துல் நீக்கப்பட்டு, பேட்டிங் வரிசையை பலப்படுத்தும் விதமாக கருண் நாயருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டதால், ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டார். கம்போஜ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா உள்ளே கொண்டுவரப்பட்டார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

பேட்டிங்குக்கு சவால் விடுத்த மழை

மழை காரணமாக ஆடுகளம் பேட்டிங்கிற்கு சிம்ம சொப்பனமாக மாறியிருந்ததால், தொடக்க ஆட்டக்காரர்கள் சிரமத்துடன் இன்னிங்ஸை தொடங்கினார்கள்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் நட்சத்திரம் ஜெய்ஸ்வால், 2 ரன்னில் அட்கின்சன் பந்தில் LBW முறையில் ஆட்டமிழந்தார். நடுவர் அவுட் கொடுக்காத நிலையில், சக வீரர்களின் ஆதரவின்றி தனி ஒருவனாக மேல்முறையீடு செய்து விக்கெட்டை கேப்டன் போப் உறுதிசெய்தார்.

வழக்கமாக DRS எடுக்கும் போது, சொதப்பும் போப் நேற்று சரியாக செயல்பட்டது, ஸ்டோக்ஸ் உள்ளிட்ட இங்கிலாந்து அணி நிர்வாகத்துக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் இல்லாத நிலையில் அனுபவமற்ற இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் சரியான லைன் அண்ட் லெங்க்த் பிடிக்காமல் தாறுமாறாக வீசினார்கள். குறிப்பாக டங் முதல் ஓவரிலேயே அகலப்பந்துகளுக்கு 11 ரன்களை வாரிக்கொடுத்தார்.

ஒற்றை ரன்னுக்காக பறிபோன விக்கெட்

இந்த தொடரில் தொடர்ச்சியாக ஐந்தாவது டெஸ்டில் களமிறங்கிய வோக்ஸ், இந்திய அணியின் தூணாக விளங்கும் கேஎல் ராகுல் விக்கெட்டை கைப்பற்றினார். இல்லாத ஒரு கட் ஷாட்டுக்கு ஆசைப்பட்டு, ஸ்டம்புகளை பறிகொடுத்து ஏமாற்றத்துடன் ராகுல் வெளியேறினார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் ராகுல் ஏன் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இடம்பெற முடியவில்லை என்பதற்கு இதுபோன்ற ஷாட்கள் தான் காரணம்.

தொடக்க வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறிய நிலையில், சுதர்சன், கில் இருவரும் நல்ல பார்ட்னஷிப் அமைத்து நம்பிக்கையளித்தனர். டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்ற கவாஸ்கரின்(732) சாதனையை முறியடித்தார்.

ஆனால், தொடக்கம் முதலே ரன் ஓடுவதில் இருவருக்கும் இடையில் சரியான ஒத்திசைவு தென்படவில்லை. கடைசியில் அட்கின்சன் பந்துவீச்சில் அவசரப்பட்டு ரன் ஓட முயன்று, அவரது கையாலேயே ரன் அவுட்டாகி கில் வெளியேறினார்.

பட மூலாதாரம், Getty Images

நம்பிக்கை அளித்த சுதர்சன்

கில் இருந்த ஃபார்முக்கு கொஞ்சம் பொறுமையாக நின்றிருந்தால் நிச்சயம் பெரிய இன்னிங்ஸ் ஒன்றை விளையாடியிருப்பார். கடந்த டெஸ்டில் நம்பிக்கையளித்த சுதர்சன், நேற்று பிரமாதமாக பேட்டிங் செய்தார்.

கடினமான பந்துகளை லாவகமாக கணித்து தவிர்த்து, அடிக்க வேண்டிய பந்துகளை அடித்து ரன் சேர்த்தார். அவருடைய ஸ்ட்ரைட் டிரைவ் ஒன்று கோடு போட்டது போல நேர்க்கோட்டில் சென்று, மைதானத்தை ஆர்ப்பரிக்க வைத்தது.

மோசமாக பந்துவீசிக் கொண்டிருந்த டங், யாரும் எதிர்பார்க்காத படி இரண்டு அட்டகாசமான பந்துகளை வீசி சுதர்சனையும் ஜடேஜாவையும் பெவிலியனுக்கு அனுப்பினார். 108 பந்துகளை எதிர்கொண்ட சுதர்சன், 38 ரன்கள் எடுத்தார்; கடந்த டெஸ்டில் சதம் விளாசிய ஜடேஜா 9 ரன்னில் வீழ்ந்தார்.

உண்மையில், எவ்வளவு பெரிய பேட்டர் என்றாலும், அந்தப் பந்தில் தாக்குப்பிடித்திருக்க முடியாது. அப்படிப்பட்ட பந்துகள் அவை. அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்து, ஆட்டம் கைவிட்டு போய்விட்டது என்ற நினைத்த போது, கருண் நாயர் நம்பிக்கையுடன் விளையாடி அணியை மீட்டார்.

8 ஆண்டுகளுக்குப் பின் கருண் நாயரின் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

தொடக்கத்தில் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்துகளுக்கு கொஞ்சம் தடுமாறினாலும், போகப்போக சுதாரித்து விளையாடத் தொடங்கினார். குறிப்பாக அவருடைய சில டிரைவ்கள் கண்ணைக் கவரும் வண்ணம் இருந்தன.

கருண்–ஜுரெல் பார்ட்னர்ஷிப் மழை குறுக்கீடுகளையும் மீறி, அணியை சரிவிலிருந்து மீட்டது. நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ஜுரெல், அவசரப்பட்டு விளையாடி அட்கின்சன் பந்தில் ஸ்லிப்பில் புரூக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்ட இந்திய அணிக்கு, மீண்டும் ஒருமுறை வாஷிங்டன் சுந்தர் கைகொடுத்தார். கட்டுக்கோப்பாக விளையாடிய அவர், கருண் நாயருக்கு உறுதுணையாக நின்று அணியை மீட்டெடுத்தார்.

இங்கிலாந்து அணி இலக்கில்லாமல் பந்துவீசியதால், 30 எக்ஸ்ட்ரா ரன்களை விட்டுக்கொடுத்தது. பதற்றத்தை கட்டுக்குள் கொண்டுவந்து அபாரமாக விளையாடிய கருண் நாயர், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது முறை 50 ரன்களை கடந்தார்.

3149 நாட்களுக்கு பிறகு அவர் அடித்த அரைசதம் இது. கடைசியாக இதே இங்கிலாந்து அணிக்கு எதிராக முச்சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images

தொடர்ந்து கை கொடுப்பாரா கருண் நாயர்?

இங்கிலாந்தில் அட்கின்சன் தவிர வேறு யாரும் சரியாக பந்துவீசவில்லை. இந்திய அணி, இங்கிலாந்து பந்துவீச்சின் பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டது என்றுதான் சொல்லவேண்டும்.

ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் இருந்திருந்தால், நிச்சயம் இந்தியாவால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இதுபோன்ற ஆடுகளத்தில், மழை குறிக்கீடுகளை கடந்து 64 ஓவர்களில் 204 ரன்களை எடுத்திருக்க முடியாது.

இந்திய அணி இரண்டாம் நாளில், கிடைத்த அடித்தளத்தை நன்றாக பயன்படுத்தி பெரிய ஸ்கோர் ஒன்றை பதிவு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

சூரியன் துலக்கமாக வெளிப்பட்டு இந்தியாவுக்கு கைகொடுக்கும்பட்சத்தில் இந்திய அணி 350 ரன்களை கடக்க வாய்ப்புள்ளது.

அதேசமயம், நேற்றைய நாளின் தவறுகளை சரிசெய்துகொண்டு, இரண்டாம் நாளின் தொடக்கத்திலேயே இந்திய அணியின் விக்கெட்களை கைப்பற்ற இங்கிலாந்து நிச்சயம் வியூகம் வகுக்கும். 50 ரன்களை கடந்து விளையாடி வரும் கருண் நாயர், பெரிய இன்னிங்ஸ் விளையாடி, அணியில் தன் இடத்தை உறுதிபடுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

முதல் நாள் ஆட்டம் முடிவடைய சில ஓவர்கள் மட்டுமே இருந்த நிலையில், பீல்டிங்கின் போது வோக்ஸ் காயமடைந்துள்ளது, இங்கிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த டெஸ்டில் வோக்ஸ் மீண்டும் பந்துவீசுவதற்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அனுபவ வீரர் வோக்ஸ் பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டால், அனுபவமற்ற பந்துவீச்சாளர்களை கொண்டு பந்துவீசியாக வேண்டிய கட்டாயத்துக்கு இங்கிலாந்து அணி கேப்டன் போப் தள்ளப்படுவார்.

அட்கின்சன், டங், ஓவர்டன் ஆகிய மூவரும் மொத்தமாக 18 டெஸ்ட்கள் மட்டுமே விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, இந்தியா இரண்டாம் நாளில் ரன் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கலாம்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.கிரிக்கெட்டில் பேட்டர்களுக்கு இருக்கும் மனநெருக்கடி கற்பனைக்கு எட்டமுடியாதது. ‘ கிரிக்கெட்டைத் தவிர எந்தவொரு விளையாட்டிலும் தோல்வி அடைந்த ஒரு வீரன் களத்தை விட்டு உடனடியாக வெளியேற்றப்படுவதில்லை.

இது பட்டத்தை பறிகொடுத்த மன்னனின் சோகத்திற்கு நிகரானது.’ என்கிறார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் பிரயர்லி. 8 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடியாமல், கருண் நாயரின் கரியர் முடிந்திருந்தால் எவ்வளவு சோகமாக இருந்திருக்கும்?

முதல் 3 டெஸ்ட்களில் சரியான தொடக்கம் கிடைத்தும் பெரிய இன்னிங்ஸ் ஆடமுடியாத அவருக்கு, காலம் இன்னொரு வாய்ப்பை வழங்கியுள்ளது. இரு அணிகளும் தங்களுடைய மேட்ச் வின்னர் வீரர்கள் இல்லாமல் களமிறங்கிய ஓவல் டெஸ்டில், முதல் நாளில் இந்தியாவின் கை ஓங்கியுள்ளது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு