நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்ந்தும் அந்தரத்திலேயே இருந்துவருகின்றது.

இதனிடையே உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. 

மனு, இன்று வெள்ளிக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள்; முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிரதிவாதியான இராமநாதன் அர்ச்சுனா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி செனானி தயாரத்ன, மனு மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யக் கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். 

அதன்படி, நான்கு வாரங்களுக்குள் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய நீதியரசர்கள் அமர்வு கால அவகாசம் வழங்கியுள்ளதுடன், அதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு அறிவித்துள்ளது. 

அதேவேளை இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தனது அரச மருத்துவர் பணியிலிருந்து விலகாது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியமைக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.