Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
அமெரிக்க வரிவிதிப்பால் தெளிவற்ற சூழல் : திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு என்ன பாதிப்பு?
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்2 மணி நேரங்களுக்கு முன்னர்
இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள 25 சதவீத வரி மற்றும் அபராதம், இந்திய ஜவுளித்துறையினரிடம் பெரும் குழப்பத்தையும், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த வரி விதிப்பில் இன்னும் மாற்றம் வருமென்று பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை இதுவே இறுதி வரி விதிப்பாக இருந்தாலும், தற்போதுள்ள நிலையில், வியட்நாமைத் தவிர, ஆடை ஏற்றுமதியில் போட்டியிடும் மற்ற நாடுகளை விட இந்தியாவுக்கான வரி குறைவாக இருப்பதால் அமெரிக்க ஆடைச்சந்தையை கைப்பற்றும் வாய்ப்பு இன்னும் நிறையவே இருப்பதாகவும் ஜவுளித்தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்தே நடைமுறைக்கு வருமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா–அமெரிக்கா இடையிலான பரஸ்பர வரி காலக்கெடு முடிவடையும் நிலையில், இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இதுவரையிருந்த 10 சதவீதம் என்பது 15 சதவீதமாக உயருமென்று இந்திய ஏற்றுமதியாளர்கள் அமைப்பினர் பலரும் எதிர்பார்த்த நிலையில், 25 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் அதிகரிக்கும் ஆடை ஏற்றுமதி
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் அனைத்துக்கும் 25 சதவீதம் வரியை அமெரிக்க அதிபர் விதித்துள்ளார்.இந்த வரி விதிப்பால் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதியாளர்கள் அனைவருக்குமே பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படும் நிலையில், இந்திய ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு மற்ற துறைகளை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஜவுளித்துறையினர் தெரிவிக்கின்றனர். அமெரிக்கா, இந்திய ஆடை மற்றும் நெசவு ஏற்றுமதிக்கு மிகப்பெரிய சந்தையாக இருப்பதால் இந்த வரி விதிப்பு கடினமான சவாலை உருவாக்குமென்று இந்திய நெசவுத்தொழில் கூட்டமைப்பு (CITI) தெரிவித்துள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
அமைப்பின் தலைவர் ராகேஷ் மெஹ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த ஜனவரி–மே இடையிலான 5 மாதங்களில் அமெரிக்காவுக்கான நெசவு மற்றும் ஆடைகள் ஏற்றுமதி, கடந்த ஆண்டு இதே காலத்தை விட 13 சதவீதம் ஆக அதிகரித்து, அதன் மதிப்பு 4.59 பில்லியன் டாலர் ஆக அதிகரித்துள்ளது. அபராதத் தொகை பற்றிய தெளிவின்மை, ஜவுளித்தொழிலை திட்டமிடுவதில் சிரமங்களை ஏற்படுத்துகிறது.” என்று கூறியுள்ளார்.
அமெரிக்க அரசின் ஜவுளி மற்றும் ஆடை அலுவலகத்தின் (OTEXA) புள்ளி விபரத்தின்படி, கடந்த 2024 ஆம் ஆண்டில் 12 மாதங்களில் 79.26 பில்லியன் டாலர் அளவுக்கு ஆடைகளை அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது. இதில் சீனா–21 சதவீதம், வியட்நாம்–19 சதவீதம், வங்கதேசம்–9.3 சதவீதம் ஆகிய அளவில் ஏற்றுமதி செய்திருந்தன. இந்த டாப் 10 நாடுகள் பட்டியலில், 5.9 சதவீதத்துடன் இந்தியா நான்காமிடத்தில் இருந்தது.
சி.ஐ.டி.ஐ. அமைப்பு குறிப்பிடும் 2025 ஜனவரி–மே இடையிலான 5 மாதங்களில், 31.70 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்கா ஆடைகளை இறக்குமதி செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் சீனாவை முந்தி, வியட்நாம் 19.9 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்தது. சீனாவின் ஏற்றுமதி 21-லிருந்து 15.4 சதவீதமாகக் குறைந்தது. அடுத்ததாக வங்கதேசம்–11.1 சதவீதம் மூன்றாமிடத்தில் உள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி 5.9 சதவீதத்திலிருந்து 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.சீனாவுக்கு அதிகளவில் அமெரிக்கா வரி விதித்துள்ள நிலையில், சீனாவின் அமெரிக்க ஏற்றுமதி வர்த்தகத்தைக் கைப்பற்றும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இருக்கின்றன. இந்நிலையில்தான் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் அனைத்துக்கும் 25 சதவீதம் வரியை அமெரிக்க அதிபர் விதித்துள்ளார். ஆனால் வரி விகிதங்களை ஒப்பிடுகையில், வியட்நாமைத் தவிர மற்ற நாடுகளை விட இந்தியாவுக்கான வரி விதிப்பு குறைவாக இருப்பது சாதகமாகவே கருதப்படுகிறது.
இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன், ”அமெரிக்காவின் புதிய வரி விதிப்புக் கொள்கையின்படி, இந்தியாவுக்கு வங்கதேசத்தை விட 10 சதவீதமும், கம்போடியாவை விட 11 சதவீதமும், இலங்கையை விட 5 சதவீதமும் குறைவாக வரி விதிக்கப்பட்டுள்ளது. சீனாவை ஒப்பிடும்போது, நமக்கான வரி 20 சதவீதம் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வியட்நாமுக்கு மட்டுமே நம்மை விட 5 சதவீதம் வரி குறைவு.” என்கிறார்.
இதில் இனிமேல் மாற்றம் வருமா என்பது உறுதியாகத் தெரியாத நிலையில், இதுதான் இறுதி நிலவரம் என்று வைத்துக்கொண்டாலும் கூட, இந்த வரி விதிப்பின்படி, இந்த நாடுகளுடன் நம்மால் போட்டியிட்டு, தற்போதுள்ள சந்தையைத் தக்க வைக்க முடியும் என்று கூறும் பிரபு தாமோதரன், இப்போதும் கூட, இதை விட அதிகமாக அமெரிக்க ஜவுளிச்சந்தையைக் கைப்பற்றவும் நிறையவே வாய்ப்புள்ளது என்கிறார்.
வரி விதிப்பால் உடனடியாக ஏற்படும் பாதிப்பை ஈடு செய்வது யார்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அமெரிக்காவின் புதிய வரி விதிப்புக் கொள்கையின்படி, இந்தியாவுக்கு வங்கதேசத்தை விட 10 சதவீதம் குறைவாக வரி விதிக்கப்பட்டுள்ளது.ஆனால் சீனா உட்பட அமெரிக்காவால் நம்மை விட அதிக வரி விதிப்புக்குள்ளாகியுள்ள போட்டி நாடுகளிடமிருந்து அமெரிக்க ஆடைச்சந்தையை கைப்பற்றுவதற்கு வெகுநாட்களாகும் என்று கூறும் தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (SIMA) தலைவர் எஸ்.கே.சுந்தரராமன், தற்போதைய நிலையில் உடனடியாக பாதிப்பை அதிகமாகச் சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறார்.
இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய சுந்தரராமன், ”மற்ற நாடுகளை ஒப்பிட்டால் நமக்கு வரி குறைவுதான். ஆனால் 10 சதவீதத்திலிருந்து உயர்த்தப்பட்டுள்ள இந்த 25 சதவீத வரியை அமெரிக்காவிலுள்ள சில்லறை விற்பனையாளர்கள், நுகர்வோர், இந்திய ஏற்றுமதியாளர்கள் என பல தரப்பினரும் பங்கிட வேண்டியிருக்கும்.”
“ஆடை ஏற்றுமதியில் கிடைக்கும் 15 சதவீத லாபத்தில், ஏற்றுமதியாளர்களுக்கு 8 சதவீத பங்களிப்பை வழங்கும்போது, லாபம் 7 சதவீதமாகும். அதிலும் 2 சதவீதம் அளவுக்கே, ஆடை உற்பத்தியாளர்களுக்கு லாபம் கிடைக்கும். வரி உயர்வால் இந்த உடனடி பாதிப்பு ஏற்படும் என்பதே இப்போதைய அச்சம்.” என்கிறார்.
முக்கியமாக கடந்த 60 நாட்களில் உற்பத்தியான ஆடைகளை ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்படும் என்று ஜவுளித்துறையினர் கருதுகின்றனர். சிஐஃஎப் முறையில் (Cost, Insurance and Freight) ஆடைகளை ஏற்றுமதி செய்திருந்தாலும், சுங்க வரியை வாங்குமிடத்தில் செலுத்தும் வகையில் அனுப்பியிருந்தாலும் தற்போது விதிக்கப்பட்டுள்ள 25 சதவீத வரியை, வாங்குபவர் ஏற்றுக்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனால் இதை உடனே சரி செய்ய வேண்டுமென்று ஜவுளித்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு (AEPC) அமைப்பின் பொதுச்செயலாளர் மிதிலேஷ்வர் தாக்கூர், “அமெரிக்கா, இந்திய ஆடை ஏற்றுமதியில் 33 சதவீத பங்கு வகிக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் ஆடை சந்தையில் 4.5 சதவீதமாக இருந்த இந்திய ஆடையின் பங்களிப்பு, 2024 ஆம் ஆண்டில் 5.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால் அபராதம், வரியால் இப்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இதை சரி செய்ய வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.
படக்குறிப்பு, போட்டி நாடுகளிடமிருந்து அமெரிக்க ஆடைச்சந்தையை கைப்பற்றுவதற்கு வெகுநாட்களாகும் என்கிறார் சுந்தரராமன்.விரைவாக இந்த வரி விதிப்பை மாற்றியமைக்க இந்திய அரசு முயற்சி எடுக்க வேண்டுமென்று பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வரும் நிலையில், இன்னும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக டிரம்ப் அறிவித்திருப்பது, ஜவுளித்துறையினர் உள்ளிட்ட ஏற்றுமதியாளர்கள் மத்தியில் ஒரு வித நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தற்போதுள்ள நிலை குறுகிய கால பாதிப்புதான் என்று கூறும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் திருக்குமரன், இதனால் யாரும் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை என்கிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய திருக்குமரன், ”விவசாயிகள் நலனுக்காக இந்திய அரசு எடுத்த சில நடவடிக்கைகளின் எதிரொலியாக அமெரிக்கா இந்த வரி விதிப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. ஒரு வகையில் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, நிரந்தரமாக இருக்காது என்று நம்புகிறோம். மிக விரைவில் இதில் ஒரு சுமூக முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
டிரம்ப் கூறியுள்ள வார்த்தைகளின் அடிப்படையில், இந்தியாவில் நடக்கவுள்ள அடுத்த கட்டப் பேச்சு வார்த்தையில் நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட்டு, அதன் பின்பே வரி விதிப்பு தொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்படுமென்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் நம்புவதாக திருக்குமரன் தெரிவித்தார்.
தற்போது அமெரிக்கா தரும் அழுத்தத்தைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த இந்திய அரசு முயற்சி எடுக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்துகிறார்.
கொரியாவுக்கும் இதேபோன்று அதிகமான வரியை விதித்த அமெரிக்கா, பேச்சுவார்த்தைக்குப் பின் அதைக் குறைத்திருப்பதை ஜவுளித்துறையினர் சுட்டிக்காட்டி, அதேபோல இங்கும் 15 சதவீதமாக வரி குறைய வாய்ப்புள்ளதாக நம்புகின்றனர்.
இரு நாடுகள் இடையிலான இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்குப் பிறகு, இந்த வரி சிக்கல் தீரும் என எதிர்பார்ப்பதாக இந்திய நெசவுத்தொழில் கூட்டமைப்பு தலைவர் ராகேஷ் மெஹ்ரா தெரிவித்துள்ளார்.
வியட்நாமுக்கான வரி குறைப்பு இந்தியாவை பாதிக்குமா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ‘திருப்பூர் ஆயத்த ஆடைத்துறைக்கும், வியட்நாமில் உற்பத்தியாகும் ஆடைகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது’இந்தியாவை விட பல்வேறு நாடுகளுக்கான வரி விதிப்பு அதிகமாக இருந்தபோதிலும், அமெரிக்காவுக்கு ஆடை ஏற்றுமதி செய்வதில் முதலிடம் வகிக்கும் வியட்நாமுக்கு இந்தியாவை விட குறைவாக வரி விதிக்கப்பட்டு இருப்பது பலராலும் கவலையுடன் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்திய ஜவுளித்துறையின் குறிப்பாக திருப்பூர் ஆயத்த ஆடைத்துறைக்கும், வியட்நாமில் உற்பத்தியாகும் ஆடைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதால் இந்திய ஆயத்த ஆடைத்துறைக்கு பாதிப்பில்லை என்று கூறப்படுகிறது.
”அமெரிக்க ஆடைச்சந்தையில் கணிசமான பங்களிப்பை அளித்து வரும் வியட்நாமுக்கு, நம்மை விட குறைவான வரி விதிக்கப்பட்டிருந்தாலும், வியட்நாம் உற்பத்தி செய்யும் துணி வகைகள் (Manmade Fibre) வேறு என்பது கவனத்திற்குரியது. இந்தியா பெருமளவில் பருத்தி ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்வதால், வியட்நாமுக்கான குறைவான வரி விதிப்பு, நேரடியாக நம்மைப் பாதிக்காது.” என்கிறார் இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன்.
இதே கருத்தைக் கூறும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் இணைச் செயலாளரும், தொழில்துறை சார்ந்த எழுத்தாளருமான குமார் துரைசாமி, இந்தியாவில் திருப்பூரிலும், தில்லியிலும் உற்பத்தியாகும் ஆயத்த ஆடைகளை அமெரிக்காவால் வேறு எங்கும் வாங்க முடியாது என்கிறார். சிறிய அளவிலான அதிக ஆர்டர்களை கையாள்வதில் திருப்பூர் தனித்திருப்பதாகக் கூறுகிறார் அவர்.
”ஆடை மட்டுமின்றி, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான வர்த்தகத் தொடர்புகள் அதிகம். அதனால் இந்த வரி விதிப்பு ஒட்டு மொத்த இந்திய ஏற்றுமதியாளர்களை பாதிக்கும் என்பதால், இந்த விஷயத்தில் இந்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி தீர்வு காணுமென்று நம்புகிறோம். வியட்நாம் அளவுக்கு அல்லது அதை விட நமக்கான வரி குறையவும் வாய்ப்புள்ளது. உலகம் முழுவதும் வரி விதிப்பு முறைகளை அமெரிக்கா மாற்றியுள்ள நிலையில், இந்த வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்புகளை முழுமையாக அறிந்து கொள்ள 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரையாகும்.” என்கிறார் குமார் துரைசாமி.
‘அமெரிக்கர்களின் வாங்கும் அளவு குறையுமென்று கணிப்பு’
படக்குறிப்பு, ‘இனி நடக்கும் பேச்சுவார்த்தையில், 5 சதவீதம் வரியைக் குறைக்க இந்திய அரசு முயற்சி எடுக்குமென நம்புகிறோம்.’ என்கிறார் பிரபு தாமோதரன்.வரி விதிப்பு குறையும் என்ற எதிர்பார்ப்புகள் ஒருபுறமிருக்கும் நிலையில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் பொருட்களின் மீது அமெரிக்கா விதித்துள்ள அதீத வரியால், அமெரிக்காவில் அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரித்து நுகர்வோரை பாதிக்கும் என்கிறார் தென்னிந்திய மில்கள் சங்கத்தலைவர் சுந்தரராமன்.
இதனால் அமெரிக்கர்கள் வாங்கும் பொருட்கள் அளவு குறைந்து, 10 ஆடை வாங்குபவர் 7 ஆடை மட்டுமே வாங்குவார் என்பதால் ஏற்றுமதியின் அளவு குறையுமென்கிறார் அவர்.
இந்த வரி விதிப்பு, சீனா பிளஸ் ஒன் என்றழைக்கப்படும் சீனாவின் ஏற்றுமதி சந்தையை கைப்பற்றும் நடவடிக்கையில் சிறு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
ஆனால் உலக அளவில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான ஆடை வர்த்தகம் எப்படி அமையுமென்று கணிக்கும்போது, சீனாவிலிருந்து இடம் பெயரும் விநியோகச்சங்கிலி, இந்தியாவுக்கு சாதகமாகும் என்று இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
”மூலப்பொருட்கள் வளம், உற்பத்திக் கட்டமைப்பு உள்ள இந்தியாவுக்கு இது சாதகமாகவே அமையும். இத்தகைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதே நிரந்தரமான வர்த்தகப் பாதுகாப்பை அளிக்கும் என்பதே ஆடை இறக்குமதியாளர்கள் (Buyer) மனநிலையாக இருக்கும். எதிர் பார்த்தபடி 15 –20 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருந்தால், ஏற்றுமதி இன்னும் அதிகரிக்கும். இனி நடக்கும் பேச்சுவார்த்தையில், 5 சதவீதம் வரியைக் குறைக்க இந்திய அரசு முயற்சி எடுக்குமென நம்புகிறோம்.” என்கிறார் பிரபு தாமோதரன்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு