Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், தினேஷ் குமார். எஸ்பதவி, ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
கம்பீர்–ஓவல் மைதான பராமரிப்பாளர் மோதல், ஸ்டோக்ஸ் விலகல் என ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று கடைசி டெஸ்ட் தொடங்குகிறது.
பெரும்பான்மை வீரர்கள் ஃபார்மில் இல்லாத போதும், இங்கிலாந்து அணி 2–1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதல் 5 இடங்களில், 4 இந்திய வீரர்கள் உள்ளனர். அதிக விக்கெட்கள் கைப்பற்றவர்கள் பட்டியலில், முதல் 5 இடங்களில் 3 இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இந்திய அணி சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தியும், சில தவறான முடிவுகள், விவாதத்துக்குரிய அணித் தேர்வுகள் காரணமாக தொடரில் பின்தங்கியுள்ளது.
304 ரன்கள், 17 விக்கெட்கள் உடன் இருமுறை ஆட்ட நாயகன் விருதை வென்ற கேப்டன் ஸ்டோக்ஸ், தோள்பட்டை காயம் காரணமாக விலகியிருப்பது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. வேலைப்பளு மேலாண்மையை கருத்தில்கொண்டு, அணி நிர்வாகம் பும்ராவுக்கு ஓய்வளித்திருப்பது, இந்திய அணியின் அனுபவமற்ற வேகப்பந்து வீச்சுப் படைக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜாவுடன் கை குலுக்குகிறார். பென் ஸ்டோக்ஸ் காயம்
மான்செஸ்டர் டெஸ்டில் வலியை பொருட்படுத்தாமல் ஸ்டோக்ஸ் உயிரைக் கொடுத்து பந்துவீசியதே, காயத்தின் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளது. கடந்த இரு டெஸ்ட்களில் 531 பந்துகளை வீசி, சோர்ந்துபோயிருக்கும் ஆர்ச்சருக்கும் சரியான லெங்த்தில் பந்தை தொடர்ச்சியாக வீசமுடியாமல் தடுமாறிய கார்ஸுக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது; மாற்று வீரர்களாக வேகப்பந்து வீச்சாளர்கள் டங், ஓவர்டன், அட்கின்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் மொத்தமாக 18 டெஸ்ட்கள் மட்டும் விளையாடியுள்ளனர். ஓவல் மைதானம், சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்காது என்பதால் டாசன் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பெத்தேல் அணியில் இணைந்துள்ளார். ரூட்டுடன் சேர்ந்து பெத்தேல் பகுதிநேர சுழற்பந்து வீசுவார் என எதிர்பார்க்கலாம்.
பும்ரா இல்லாத நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுப் படையை வழிநடத்த வேண்டிய பொறுப்பு முகமது சிராஜின் தோள்களில் இறங்கியுள்ளது. இந்த தொடரில் ஓய்வின்றி 4 டெஸ்ட்கள் விளையாடி, ஒட்டுமொத்தமாக 834 பந்துகள் வீசி, 14 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார் அவர். காயத்தில் இருந்து மீண்டுவந்துள்ள ஆகாஷ் தீப், நல்ல பவுன்ஸ் கொண்ட ஓவல் மைதானத்தில் சாதிப்பார் என நம்பலாம். அறிமுக டெஸ்டில் திணறிய கம்போஜ் நீக்கப்பட்டு, ரன்களை வாரி இறைத்ததால் நீக்கப்பட்ட பிரசித் கிருஷ்ணா மீண்டும் சேர்க்கப்படலாம். ஆல்ரவுண்டர் போர்வையில், கடந்த டெஸ்டில் அணியில் இடம்பெற்று 11 ஓவர்கள் மட்டுமே வீசிய, ஷார்துல் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு வழிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒருவேளை கம்பீர்–கில் கூட்டணி வழக்கம் போல, நீண்ட பேட்டிங் வரிசைக்கு முன்னுரிமை கொடுக்குமானால், ஷார்துல் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்வார். கடந்த டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 41 முக்கிய ரன்களை ஷார்துல் குவித்தது குறிப்பிடத்தக்கது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்திய அணியின் வலுவான பேட்டிங் வரிசை
இந்தமுறையும் ‘சைனாமேன்’ குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. ரிஷப் பந்த் விலகியதால், ஐந்தாவதாக இடத்தில் பேட் செய்யும் வாய்ப்பு மீண்டும் ஒருமுறை சுந்தருக்கு கிடைக்கவுள்ளது. இங்கிலாந்து அணியில் வோக்ஸ் தவிர மற்ற மூவரும் அனுபவமற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதால் இந்திய பேட்டர்களுக்கு பெரியளவுக்கு நெருக்கடி இருக்காது. காயத்தில் இருந்து மீண்டுவந்துள்ள வோக்ஸும் இந்த டெஸ்ட் தொடரில், எதிர்பார்த்தளவுக்கு இங்கிலாந்து அணிக்கு பங்களிக்கவில்லை. 4 டெஸ்ட்களில் 52.80 என்ற மோசமான சராசரியில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றுள்ளார். இடைக்கால கேப்டன் ஆலி போப், ஒரு முக்கியமான கட்டத்தில் அணிக்கு தலைமையேற்கவுள்ளார் . கிராலி–டக்கெட் இருவரும் ஃபார்முக்கு திரும்பியுள்ள நிலையில், நட்சத்திர வீரர் புரூக் பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார்.
இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. கேஎல் ராகுல் தொடங்கி ஜடேஜா வரை பிரமாதமான ஃபார்மில் உள்ளனர். 4 சதங்களுடன் 722 ரன்கள் குவித்துள்ள கேப்டன் கில்லுக்கு, டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் (974) குவித்த பிராட்மேனின் சாதனையை முறியடிக்க 252 ரன்கள் தேவைப்படுகிறது. ஓல்ட் டிராஃபோர்ட் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் அசத்திய சாய் சுதர்சன், மீண்டும் ஒருமுறை டாப் ஆர்டரில் கைகொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஒருவேளை பேட்டிங் வரிசையை பலப்படுத்த அணி நிர்வாகம் திட்டமிட்டால், ஷார்துல் நீக்கப்பட்டு அவரிடத்தில் கருண் நாயர் சேர்க்கப்படவும் வாய்ப்புள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் உளவியல் ரீதியாக உற்சாகம்
இன்றும் கடைசி இரண்டு நாள்களிலும் ஓவல் மைதானத்தில் மழை பெய்யும் என வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன. வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கும் இந்திய அணி, மழையையும் மனதில் வைத்து வியூகம் வகுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது. ஓவல் மைதானத்தில் 15 டெஸ்ட்களில் விளையாடியுள்ள இந்தியா, 2 இல் மட்டுமே வென்றுள்ளது. கடைசியாக 2021 சுற்றுப்பயணத்தில் இதே மைதானத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்தியா, 2023 WTC ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. ஓவல் மைதானம் பேட்டிங்கிற்கு சிம்ம சொப்பனமாக திகழும் என்பதால் டாஸ் வெல்லும் அணி, பந்துவீச்சை தேர்வு செய்யவே வாய்ப்பதிகம்.
தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டெழுந்து, தொடரை உயிர்ப்புடன் வைத்துள்ள இந்திய அணி, கூடுதல் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. வெற்றி பெறுவோம் என்ற மமதையில் களத்தில் லட்சுமண ரேகையை தாண்டிய இங்கிலாந்து அணி, தலைவன் இல்லாத நிலையில் உத்வேகத்தை தொலைத்துவிட்டு நிற்கிறது. பாய்காட் உள்ளிட்ட இங்கிலாந்து முன்னாள் ஜாம்பவான்களே ஸ்டோக்ஸ் தலைமையிலான அணியின் போலித்தனத்தை விமர்சித்துள்ள நிலையில், உளவியல்ரீதியாக இந்தியாவின் கை ஓங்கியுள்ளது. ஓல்ட் டிராஃபோர்ட் டெஸ்டில் கைகுலுக்க மறுத்த ஜடேஜா, சுந்தரை இங்கிலாந்து அணி நடத்திய விதம், உலகம் முழுக்க இந்திய அணிக்கு ஆதரவு வட்டத்தை அதிகரித்துள்ளது. எரிகிற அடுப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, கம்பீர்–மைதான பராமரிப்பாளர் இடையிலான வாய்த்தகராறு, டெஸ்ட் தொடரின் முடிவு மீது பலத்த எதிர்பார்ப்பை ஏற்றியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா, ஜூலை 27ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த போது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தருணம். இந்த தொடரின் முடிவு எப்படி அமைந்தாலும், இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான சிறந்த டெஸ்ட் தொடர்களில் ஒன்றாக வரலாற்றில் நிலைத்திருக்கும். அணித் தேர்வு, ஆட்ட வியூகம் தொடர்பில் விமர்சனங்கள் உள்ள போதும், கடினமான சூழல்களில் அணியை முன்னின்று வழிநடத்திய விதம், இளம் கேப்டன் கில்லின் தலைமைத்துவத்தை பறைசாற்றுகிறது. ஒன்றுக்கொன்று விஞ்சும் விதமாக ஒவ்வொரு டெஸ்டும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த தொடரின் கிளைமாக்ஸ் டெஸ்ட் அட்டகாசமான ஒன்றாக அமைந்து, ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடரை முழுமை பெற வைக்குமா? அதற்கு வானிலை ஒத்துழைக்குமா? இங்கிலாந்தின் தடித்தனத்துக்கு இந்திய இளம் படை சரியான பாடம் புகட்டுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு