மாலேகான் குண்டு வெடிப்பு : குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

17 ஆண்டுகளுக்குப் பிறகு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவித்துள்ளது சிறப்பு என்ஐஏ நீதிமன்றம்.

சுமார் 17 ஆண்டுகளுக்கு முன் 2008ஆம் ஆண்டில் நடந்த மாலேகான்குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவர் சாத்வி பிரக்யா, லெப்டினன்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித் ஆகியோர் பற்றி அதிகம் பேசப்பட்டது. சாத்வி பிரக்யா போபாலில் எம்.பியாக இருந்தார்.

2008ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் உள்ள பள்ளி வாசல் அருகே நின்றிருந்த பைக்கில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

என்ஐஏ சிறப்பு நீதிபதி ஏ.கே.லஹோட்டி, அனைத்து குற்றவாளிகளும் இன்று (ஜூலை 31)ஆஜராக வேண்டும் என கடந்த மே 8ஆம் தேதி உத்தரவிட்டார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பு வழக்கறிஞர்கள் 323 சாட்சிகளை விசாரித்தனர். அதில் 37 பேர் தங்களின் வாக்குமூலத்தை திரும்பப்பெற்றனர்.

என்ஐஏ விசாரணை

இந்த வழக்கில் லெப்டினன்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித், பாஜக நிர்வாகி பிரக்யா தாக்கூர், ஓய்வுபெற்ற மேஜர் ரமேஷ் உபத்யாய, அஜய் ரஹிர்கார், சுதாகர் திவேதி, சுதாகர் சதுர்வேதி மற்றும் சமீர் குல்கர்னி ஆகியோர் மீது சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் (UAPA) மற்றும் இந்திய தண்டனை சட்டம் (IPC) கீழ் வழக்குப் பதியப்பட்டது.

முன்னதாக மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு பிரிவினர் (ATS) இந்த வழக்கை விசாரித்தனர். ஆனால் 2011ஆம் ஆண்டு இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு (NIA) மாற்றப்பட்டது.

பட மூலாதாரம், Reuters

ATS மற்றும் NIA விசாரணையில் என்ன வித்தியாசம்?

முதலில் இந்த வழக்கை மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தான் விசாரணைக்கு கையில் எடுத்தனர். பிரக்யாவின் LML ஃபீரீடம் பைக்தான் வெடிபொருட்களை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்பட்டதாக ATS விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

வலதுசாரி பிரிவைச் சேர்ந்த அபினவ் பாரத் என்பவரிடம் இருந்து RDX வெடிபொருட்களை வாங்கியதாக லெப்டினன்ட் கர்னல் புரோகித் மீது குற்றம் சாட்டப்பட்டது.

காலப்போக்கில் என்ஐஏ இந்த விசாரணையை கையில் எடுத்தது. அதன்பிறகு நிறைய வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. ஏடிஎஸ் விசாரணையில் சில குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்தது என்ஐஏ. இருப்பினும் UAPA பிரிவு தக்கவைக்கப்பட்டது.

2016ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது என்ஐஏ

2016ஆம் ஆண்டு என்ஐஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், பிரக்யா தாக்கூர் மற்றும் ஷ்யாம் ஷபூ, பிரவீன் தகல்கி, ஷிவ்நாராயண் கல்சங்ரா ஆகியோருக்கு எதிராக எந்த சாட்சியங்களும் இல்லை என்றும், அவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இருப்பினும் ஷபூ, தகல்கி, கல்சங்ரா ஆகியோரை விடுவித்த என்ஐஏ நீதிமன்றம், பிரக்யா தாக்கூரை விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். குற்றப்பத்திரிகை கூறியது என்ன?

2018ஆம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி UAPA மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 7 பேர் மீது குற்றம் சாட்டியது சிறப்பு நீதிமன்றம். அவர்கள் மீது UAPA பிரிவு 16 (பயங்கரவாத பிரிவு) பிரிவு 18 (பயங்கரவாத சதி) மற்றும் ஐபிசி பிரிவு 120(B) (குற்றச் சதி), 302 (கொலை), 307 கொலை முயற்சி), 324 (காயம் ஏற்படுத்துதல்), 153(A) (இரு மதங்களுக்கு இடையே விரோதத்தை துண்டுதல்) ஆகிய பிரிவுகளும் சேர்க்கப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்டவர்களும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்:

. இந்து அமைப்பைச் சேர்ந்த அபினவ் பாரத்தின் பங்கு தெரியவந்தது.

. பிரக்யா சிங் தாக்கூர்

. மேஜர் ரமேஷ் உபத்யாய (ஓய்வு) (இவர் புனேவைச் சேர்ந்தவர். வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளித்ததாக குற்றச்சாட்டு)

. சமீர் குல்கர்னி என்கிற சானக்யா சமீர் (புனேவைச் சேர்ந்தவர். வெடிகுண்டு தயாரிப்பதறகான பொருட்களை சேகரிக்க உதவியதாக குற்றச்சாட்டு)

. அஜய் என்கிற ராஜா ரஹிர்கார் (புனேவில் அபினவ் பாரத்க்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டு)

. லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் (முக்கிய பயங்கரவாதி, தூண்டுதலாக இருந்தவர், RDX பெற உதவியுள்ளார்)

. சுவாமி அமிர்தானந்த தேவ்திர்த்தா (ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர், சங்கராச்சாரியாராக தன்னை அறிவித்துக்கொண்டவர், சதிக்கு காரணமானவர்)

. சுதாகர் ஓம்கர்காந்த் சதுர்வேதி என்கிற சானக்ய சுதாகர் (தானேவைச் சேர்ந்தவர், இவரிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், சதித் திட்டத்தில் தொடர்பு உடையவர் என ATS விசாரணை தெரிவிக்கிறது)

பிரக்யா மீதான புகார் என்ன?

பட மூலாதாரம், ANI

ATS தாக்கல் செய்த குற்றபத்திரிகையின் படி, குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பைக் பிரக்யா தாக்கூரின் பெயரில் பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.

அதன்பிறகு பிரக்யா கைது செய்யப்பட்டார். அவர் மீது மகாராஷ்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டம் (MCOCA) சுமத்தப்பட்டது. மேஜர் ரமேஷ் மற்றும் லெப்டினன்ட் கர்னல் புரோஹித்துக்கும் இடையிலான உரையாடல் கைப்பற்றப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. அதில் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பிரக்யா தாக்கூரின் பங்கு இருப்பது குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்பிறகு இந்த வழக்கு விசாரணை ஏடிஎஸ் இடம் இருந்து என்ஐஏவிடம் மாற்றப்பட்டது. இவரின் பெயரும் என்ஐஏ குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது.

2009 முதல் 2011ஆம் ஆண்டு வரை நடத்திய விசாரணையில் ஏடிஎஸ் தனது குற்றப்பத்திரிகையில் 14 பேரை குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்த்து சிறப்பு MCOCA நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

மே 2016ஆம் ஆண்டு என்ஐஏ இறுதி அறிக்கையை சமர்பித்தபோது 10 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்த குற்றப்பத்திரிகையில் பிரக்யா சிங் நிரபராதியாக அறிவிக்கப்பட்டார். இவர் மீது பதியப்பட்ட MCOCA நீக்கப்பட்டது.

பட மூலாதாரம், ANI

குற்றப்பத்திரிகையின்படி குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பைக் பிரக்யா பெயரில் இருந்தாலும் கல்சங்கராதான் குண்டுவெடிப்பு சம்பவம் நடப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை பயன்படுத்தியுள்ளான் எனக் கூறப்பட்டது.

பிரக்யா தாக்கூருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. அதன்பிறகு 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போபாலில் போட்டியிட்டு வென்றார்.

போபாலில் தேர்தலில் போட்டியிட்டபோது, மலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தன்மீது இருந்த குற்றச்சாட்டுகள் குறித்து அவர் தெளிவுபடுத்தினார். பிபிசி உடனான உரையாடலின்போது, தான் எந்த தவறும் செய்யவில்லை என்றாலும் மலேகான் சம்பவம் தன்னை துரத்துவதாக அவர் கூறினார்.

மத்திய பிரதேசத்திலேயே போபால் பாஜகவுக்கு சாதகமான ஒரு தொகுதியாக இருந்தது. 1989ஆம் ஆண்டு முதலே இங்கு பாஜகவினர்தான் வென்று வந்துள்ளனர்.

ஆனால், பாஜக பிரக்யா தாக்கூரை வேட்பாளராக நிறுத்திய அதே ஆண்டு, காங்கிரஸ் தனது திக்விஜய் சிங்கை வேட்பாளராக களமிறக்கியது.

இதுமட்டுமல்ல இதற்கு முன்நடந்த மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ்தான் வென்றிருந்தது.

2 ஆண்டுகளில் 2 குண்டுவெடிப்பு சம்பவங்கள்

2008 செப்டம்பரில் மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம், 2 ஆண்டுகளில் நடந்த 2வது சம்பவம் ஆகும். அதற்கு முன்பாக 2006ஆம் ஆண்டு செப்டம்பரில் ஷா-இ-பாரத் தினத்தன்று குண்டுவெடிப்பு நடந்தது.

இது இஸ்லாமியர்களின் முக்கிய தினமாக பார்க்கப்படுகிறது. மலேகானில் உள்ள பள்ளிவாசலில் 4 இடங்களில் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் 31 பேர் உயிரிழந்தனர், 312 பேர் காயமடைந்தனர்.

இந்த வழக்கு தற்போதுவரை தீர்வுகாணப்படவில்லை. சிலர் கைதுசெய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு