நீதிபதியின் மீது புகார் எழுந்தால் என்ன செய்யலாம்? தனக்கு எதிரான புகாரை ஒரு நீதிபதி தானே விசாரிக்கலாமா?

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், சாரதா விபதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஒரு நீதிபதி தன் மீதான புகாரை தானே விசாரிக்க முடியுமா, நீதித்துறை அதை அனுமதிக்கிறதா? இந்த கேள்வி தற்போது எழுவதற்கு காரணம் இருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் மீது வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சில குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். நீதிபதி சுவாமிநாதன் சாதி பாகுபாட்டுடன், வலதுசாரி சித்தாந்த சார்புடன் செயல்படுவதாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஜூன் மாதம் புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கான சில வழக்கின் உதாரணங்களையும் குறிப்பிட்டு, இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கில், ஜூலை 24ம் தேதி நீதிபதி சுவாமிநாதன் இருந்த அமர்வின் முன் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆஜரானார். அப்போது அவரிடம், நீதிபதி சுவாமிநாதன் சாதி பாகுபாட்டுடன் செயல்படுகிறார் என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா என்று வழக்காடு மன்றத்தில் வாய்மொழியாக கேட்கப்பட்டது. இதற்கு வாய்மொழியாக அதே இடத்தில் பதில் அளிக்க மறுத்த வாஞ்சிநாதன், எழுத்துப்பூர்வமாக கேள்வி கேட்பின் பதில் அளிப்பதாக கூறினார்.

அதன் பின், வாஞ்சிநாதனுக்கு எழுத்துப்பூர்வமாக கேள்வி கேட்கப்பட்டது. நீதிபதி சுவாமிநாதன் வழங்கிய எழுத்துப்பூர்வ ஆவணத்தில், “வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவரது நடத்தை காரணமாக பார் கவுன்சிலிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது கவனத்துக்குரியது. இடைநீக்கம் திரும்பப் பெற்ற பிறகு அவர் தனது நடத்தையை மாற்றிக் கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் தனது நடத்தையை மாற்றிக் கொள்ளவில்லை. அவர் நீதித்துறையை தொடர்ந்து அவதூறு செய்து வருகிறார். சமூக ஊடகம் முழுவதும் அவர் வீடியோக்கள் உள்ளன. நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பது வேறு, நீதிபதிகளை புறங்கூறுவது வேறு” என்று கூறி பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் மேற்கோள்காட்டப்பட்டன.

“இதை வைத்து பார்க்கும் போது வழக்கறிஞர் வாஞ்சிநாதனின் நடத்தை நீதிமன்ற கிரிமினல் அவமதிப்புக்கான அடிப்படை முகாந்திரம் (prima facie) கொண்டுள்ளது. எனவே, நீதிபது சுவாமிநாதன் தனது நீதிபரிபாலனையில் சாதி பாகுபாட்டுடன் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டில் உறுதியாக இருக்கிறீரா என்ற கேள்வி அவரிடம் கேட்கப்படுகிறது” என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

நான்கு நாட்கள் கழித்து ஜூலை 28ம் தேதி இந்த கேள்விக்கான பதிலை எழுத்துபூர்வமாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேரில் ஆஜராகி சமர்ப்பித்திருந்தார். பிறகு இந்த விவகாரம் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மாற்றப்பட்டது.

பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன், “ஜூலை 24ம் தேதி என்னிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு நான் கூறியது போல எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளேன். இன்று (திங்கட்கிழமை)புதிதாக ஒரு வீடியோவை காட்டி அதற்கு விளக்கம் அளிக்க கோரினார்கள். அது குறித்தும் என்னிடம் எழுத்துபூர்வமாக என்னிடம் கேளுங்கள், பதில் தருகிறேன் என்று கூறினேன். பிறகு வழக்கு உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மாற்றப்பட்டது” என்றார்.

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஜூலை 28ம் தேதி பதில் வழங்கும் முன், மற்றொரு முக்கிய நிகழ்வு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள எட்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஜி ஆர் சுவாமிநாதன் தன் மீதான குற்றச்சாட்டை தானே விசாரிக்கக் கூடாது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உச்சநீதிமன்றத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் அதன் மீது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி முடிவு எடுப்பதே சரி, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது எந்த நடவடிக்கையையும் நீதிபதி சுவாமிநாதன் கைவிட வேண்டும் என்று கோரியிருந்தனர். மேனாள் நீதிபதிகள் கே சந்துரு, அரி பரந்தாமன், விமலா உள்ளிட்ட எட்டு பேர் விடுத்த கூட்டறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், Chennai Highcourt

படக்குறிப்பு, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்விதிகள் என்ன கூறுகின்றன?

ஒரு நீதிபதி தன் மீதான வழக்கை தானே விசாரிக்கக் கூடாது என்று அரசியல் சாசனத்தில் அல்லது சட்டத்தில் எழுத்துப்பூர்வமாக சொல்லப்படவில்லை. ஆனால் நீதித்துறையின் அடிப்படை கோட்பாடுகள் இதை அனுமதிப்பதில்லை.

மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் பிபிசி தமிழிடம் இது குறித்து பேசுகையில், “ஒரு நீதிபதி தன் மீதான வழக்கை தானே விசாரிக்கக் கூடாது. அப்படி விசாரிக்கக் கூடாது என்பது மரபல்ல, இயற்கை நீதியின் விதிகள் ஆகும். அந்த விதிகளின் படி ( Natural justice principles in administrative law) நியாயமான நீதி விசாரணையை உறுதி செய்ய இரண்டு விசயங்கள் முக்கியம் – ஒன்று ஒரு நீதிபதி தான் சம்பந்தப்பட்ட புகாரை தானே விசாரிக்கக் கூடாது (Nemo Judex in Causa Sua), அதே போன்று யார் ஒருவரும் அவரது பக்க நியாயத்தை கேட்காமல் தண்டிக்கப்படக் கூடாது (Audi Alteram Partem)” என்கிறார்.

இவை உலகில் பெரும்பாலான நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட கோட்பாடுகள் ஆகும். இவற்றில் சிற்சில மாற்றங்களை ஒவ்வொரு நாடும் கொண்டிருக்கலாம்.

இதற்கு அர்த்தம் நீதிபதி மீது யாரும் புகார் கொடுக்கக் கூடாது என்பதல்ல என்று அவர் மேலும் விளக்குகிறார். “சம்பந்தப்பட்ட புகாரை தலைமை நீதிபதி (உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றம்) விசாரிக்க கோரலாம். தலைமை நீதிபதியே Master of Roster, அதாவது எந்த வழக்கை யார் விசாரிக்கலாம் என்று முடிவு செய்யும் அதிகாரம் அவரிடமே உள்ளது” என்றார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ன கூறுகிறது?

இந்தியாவில் அரசியல் சாசனத்தில் அல்லது சட்டத்தில் எழுத்துப்பூர்வமாக ஒரு நீதிபதி தன் மீதான விசாரணையை விசாரிக்கக் கூடாது என்று இல்லை என்றாலும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்று இந்த விவகாரம் குறித்து விரிவாக விளக்குகிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் கீழ் நீதிமன்றங்களையும் பிணைக்கும் நம் நாட்டில், சி.ரவிச்சந்திரன் ஐயர் vs நீதிபதி ஏ எம் பட்டாசார்ஜி (1995) வழக்கின் தீர்ப்பு இந்த விவகாரத்தில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

சி.ரவிச்சந்திரன் ஐயர் எதிர் நீதிபதி ஏ எம் பட்டாசார்ஜி (1995) வழக்கில் பம்பாய் உயர்நீதிமன்றதின் தலைமை நீதிபதியாக இருந்த பட்டாசார்ஜி மீது அவர் எழுதிய சில நூல்களுக்கான கட்டணம் பெறுவது தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.

பம்பாய் பார் கவுன்சில் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. இது போன்ற வலியுறுத்தல்கள் கூடாது என்றும் முறையான விசாரணை வேண்டும் என்றும் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இதுபோன்ற முக்கியமான விஷயங்களை பொது அல்லது ஊடக விசாரணைக்கு பதிலாக “உள் நடைமுறை” கொண்டு கையாளுவதன் மூலம் நீதித்துறை அதன் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

124 (4) மற்றும் (5) பிரிவுகளின் கீழ் (நீதிபதிகளை) நீக்குவதற்கு, நாடாளுமன்றம் உட்பட எந்தவொரு வெளி அதிகார அமைப்பையும் அணுகுவதற்கு முன்னர் எடுக்கப்பட வேண்டிய முதல் படியாக இந்த உள் நடைமுறை இருக்கும் என்றும் கூறியது.

“ஒரு நீதிபதிக்கு எதிரான எந்தவொரு புகாரும் ஒரு உள் நடைமுறையால் ஆராயப்படும் என்று அரசியலமைப்பு கருதுகிறது, இது இந்திய தலைமை நீதிபதி அல்லது சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியால் தொடங்கப்பட்டு மேற்பார்வையிடப்படும்.

குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நீதிபதி, தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தனிப்பட்ட முறையில் விசாரிப்பதோ அல்லது நடத்துவதோ அனுமதிக்கப்படாது.

நீதித்துறை ஒழுக்கத்தைப் பாதுகாக்கவும், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் இந்த செயல்முறை பக்கச்சார்பற்றதாகவும், நியாயமானதாகவும், ரகசியமாகவும் இருக்க வேண்டும்.” என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதே தீர்ப்பை மேற்கோள் காட்டி ஓய்வுபெற்ற நீதிபதிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “ஒரு நீதிபதியின் நடத்தை குறித்து யாராவது மனு அளிக்க விரும்பினால் அதை இந்திய தலைமை நீதிபதிக்கு நேரடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தலைமை நீதிபதி ஒரு விசாரணை தேவை என்று கருதினால் அவர் ‘in-house’ (உட் குழு) விசாரணைக்கு உத்தரவிடலாம்.

அந்த விசாரணை குழு குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறது என்று கருதினால் மட்டுமே, அந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியும். இதுதான் தற்போது உள்ள நடைமுறையாகும். சமீபத்தில் அலஹாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது.

எனவே, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அனுப்பிய புகாரின் மீது தலைமை நீதிபதியிடமிருந்து நடவடிக்கை ஏதும் இல்லாத நிலையில், நீதிபதிகள் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுப்பது முதிர்ச்சியற்றதாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தனர்.

இந்த அறிக்கையை மேனாள் நீதிபதிகள் கே.சந்துரு, அரி பரந்தாமன், சி டி செல்வம், அக்பர் அலி, பி கலையரசன், எஸ் விமலா, கே கே சசிதரன், எஸ் எஸ் சுந்தர் ஆகியோரின் ஒப்புதலோடு அவர்கள் சார்பாக நீதிபதி சந்துரு தாம் வெளியிடுவதாக கூறியிருந்தார்.

ஆனால் ஓய்வுபெற்ற நீதிபதி கே கே சசிதரன் இந்த விவகாரத்தில் தான் ஒப்புதல் தரவில்லை என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை நேரடியாக அவரிடம் உறுதி செய்யமுடியவில்லை.

பட மூலாதாரம், மேனாள் நீதிபதி கே.சந்துசந்துரு

நீதிபதி யஷ்வந்த வர்மா வழக்கு என்ன?

உச்சநீதிமன்ற “உள் நடைமுறை”க்கு உதாரணமாக தற்போது நடைபெற்று வரும் நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கு சுட்டிக்காட்டப்படுகிறது.

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் அரசு இல்லத்தில் இந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி இரவு தீப்பற்றி எரிந்த சம்பவத்தின் போது, அங்கிருந்து பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டுக்காக பணம் இருந்தது அவர் மீதான குற்றச்சாட்டாகும்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அதை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா நியமித்தார். நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இல்லத்துக்கு சென்று விசாரணையை தொடங்கிய குழு, விசாரணையின் முடிவில் நீதிபதி வர்மாவை பதவிநீக்கம் செய்ய பரிந்துரை செய்திருந்தது.

இதற்கிடையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா, அலஹாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருந்தார். உச்சநீதிமன்ற விசாரணையை எதிர்த்து அவர் வழக்கு தொடுத்துள்ளார்.

பட மூலாதாரம், PTI

படக்குறிப்பு, நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கறிஞர் வாஞ்சிநாதனின் புகார்

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன், கடந்த ஜூன் மாதம் இந்திய தலைமை நீதிபதியிடம் 15 அம்ச புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அதில் நீதிபதி சுவாமிநாதன் ‘சாதி பாகுபாட்டுடனும் தத்துவார்த்த சார்புகள் கொண்டும் நீதி வழங்குவதாக’ குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார். அவரது தீர்ப்புகளில் வலதுசாரி சார்புத்தன்மை வெளிப்படுவதாக வாஞ்சிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதே போன்று, 2024-ம் ஆண்டு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி இந்த புகாரை அளித்திருந்தார். கோவிலில் எச்சில் இலைகள் மீது உருண்டு நேர்த்திக் கடன் செலுத்தும் வழக்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற அமர்வு விதித்த தடையை நீக்கி, அந்த வழிபாட்டுக்கு நீதிபதி சுவாமிநாதன் அனுமதி வழங்கியிருந்தார்.

“இது தனக்கு ஆன்மிக பலத்தைத் தரும் என பக்தர்கள் நம்புகிறார்கள்” என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். “அது தனிப்பட்ட ஒருவரின் ஆன்மிகத் தேர்வு. பாலினம், பாலியல் தேர்வு ஆகியவற்றுடன் ஆன்மிகத் தேர்வும் ஒருவரின் தனியுரிமையில் உள்ளடங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த தீர்ப்பு இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது என்று கூறி கொளத்தூர் மணி புகார் அளித்திருந்தார்.

நீதிபதி சுவாமிநாதன் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கோரி நடத்திய செய்தியாளர் சந்திப்பில், மேனாள் நீதிபதி அரி பரந்தாமன், ” பல்கலைகழக துணை வேந்தர் நியமன அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து முதல்வருக்கு மாற்றக் கோரும் சட்டத்திருத்தங்களுக்கு எதிரான வழக்கில் அந்த வழக்கை தொடுத்தவர் பாஜக சார்புள்ளவர். அவர் மதுரையை சேர்ந்தவர், எனினும் விடுமுறை கால அமர்வில் சென்னையிலிருந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வரும் வகையில் அந்த வழக்கு தொடுக்கப்பட்டது” என்று குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

படக்குறிப்பு, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நீதிபதி சுவாமிநாதன் பேசியது என்ன?

கடந்த வாரம் சென்னை தி.நகரில் நடைபெற்ற 17வது வேத அறிஞர்களின் வருடாந்திர நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நீதிபதி சுவாமிநாதன், வேதங்களை பாதுகாப்பவர் வேதங்களால் பாதுகாக்கப்படுவார் என்று பேசியிருந்தார்.

தான் வழக்கறிஞராக இருந்த போது தான் எடுத்துக் கொண்ட வழக்கு ஒன்றை குறிப்பிட்டு பேசிய அவர், “என்னுடைய நண்பர் சாஸ்திரிகள் ஒருவரது சகோதரி கார் ஓட்டிச் செல்லும் போது, கார் தெருவில் இருந்த ஒரு நபர் மீது ஏறி அவர் இறந்துவிட்டார். சகோதரி அமெரிக்கா செல்ல வேண்டும் என்பதால் தானே கார் ஓட்டியதாக சாஸ்திரிகள் கூறிவிட்டார். அவருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் நான் வழக்கு ஆவணங்களை பார்த்த போது, ஒரு சாட்சி கூட காரை யார் ஓட்டினார் என்று பார்த்ததாக கூறவில்லை, சாஸ்திரிகளை யாரும் அடையாளம் காணவும் இல்லை. இதை வைத்து வழக்காடிய போது, போதிய சாட்சியங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் கூறியது. அப்போது நான் உணர்ந்தேன், வேதங்களை காப்பவர், வேதங்களால் காக்கப்படுவார்” என்று அவர் பேசியிருந்தார்.

2024-ம் ஆண்டு நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நீதிபதி சுவாமிநாதன், ” மக்கள் தொகை குழு இப்படியே இருந்தால் தான் அரசியல் சாசனம் இருக்கும். இது மாறிவிட்டால், அரசியல் சாசனம் இருக்காது. நம் பாரதிய சம்பிரதாயம் இருக்கிறது அல்லவா, பாரதிய தர்மத்தை கடைப்பிடிப்பவர்கள், அந்த தர்மத்திலேயே இருக்க வேண்டும். அப்போது தான் அது முடியும். ஒரு நீதிபதி, என்னால் இதற்கு மேல் சொல்ல முடியாது, நீங்களே புரிந்து கொள்ளுங்கள்” என்று பேசியிருந்தார்.

அதே நிகழ்வில் முன்னாள் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர் காஞ்சி சங்கராச்சியார் படத்தை பார்த்து அடையாளம் காண முடியவில்லை என்பதை தெரிந்து அதிர்ச்சி அடைந்ததாக கூறினார்.

‘தனக்கு எதிரான புகாரை தானே விசாரிக்கக் கூடாது’

படக்குறிப்பு, மேனாள் நீதிபதி அரி பரந்தாமன் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன் பிபிசி தமிழிடம் பேசும்போது, ” தன் மீதான புகாரை ஒரு நீதிபதி தானே விசாரிக்கக் கூடாது, இது நம் நாட்டு சட்டத்தின் அடிப்படை தத்துவமாகும். நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான புகாரில் உச்சநீதிமன்ற விசாரணைக் குழுவின் அறிக்கை தவறு என்று அவர் வழக்கு தொடுத்தார்.

அந்த விசாரணைக் குழுவில் தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் கவாய் இடம் பெற்றிருந்ததால், அந்த வழக்கு விசாரணையில் தான் ஈடுபட மாட்டேன் என்று கவாய் தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதி என்ற முறையில் ஒரு குழுவை நியமிப்பதாகவும் தெரிவித்தார்” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு