Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
டிரம்பின் வரிவிதிப்பு இந்தியா – அமெரிக்க உறவுகளை மேலும் கசப்பாக்குமா?
பட மூலாதாரம், Andrew Harnik/Getty Images
படக்குறிப்பு, இந்த ஆண்டு, பிரதமர் மோடி அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்தார்எழுதியவர், சந்தீப் ராய்பதவி, பிபிசி செய்தியாளர்27 நிமிடங்களுக்கு முன்னர்
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவின் மீது 25 சதவீத வரியை அறிவிக்கும்போது, இந்தியாவை நட்பு நாடு என்று அழைத்தார். ஆனால் மற்ற எந்த நாட்டுடனும் ஒப்பிடும்போது இந்தியாவில் மிகவும் கடுமையான மற்றும் பொருளாதாரத்துக்கு உகந்ததற்ற தடைகள் உள்ளதாகவும் கூறினார்.
இந்த ஆண்டு அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற போது பிரதமர் மோதி அவரைச் சந்தித்த நான்காவது உலக தலைவராக இருந்தார். இந்த சந்திப்பிலும், டிரம்ப் அவரை “சிறந்த நண்பர்” என்று அழைத்தார்.
ஆனால், டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் அவருக்கும் பிரதமர் மோதிக்கும் இடையே காணப்பட்ட அதே நட்புறவு கடந்த ஆறு மாதங்களில் காணப்படவில்லை.
தற்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், டிரம்புக்கும் மோதிக்கும் இடையேயான பழைய நட்பை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சிகள் அரசை மடக்க முயற்சிக்கின்றன.
டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தை ஏற்றவுடனே வரிவிதிப்புகளை அறிவித்தார். இருப்பினும், வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு 90 நாள் அவகாசம் வழங்கினார், இந்த அவகாசம் ஆகஸ்ட் 1 அன்று முடிவடைகிறது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
“விதிக்கப்பட்ட வரிகளால் ஏற்பட சாத்தியமுள்ள தாக்கங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்தியாவின் விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) நலன்களுக்கு அரசு முதன்மையான முன்னுரிமை அளிக்கிறது,” என்று இந்த வரி விதிப்புக்கு இந்திய அரசு பதில் அளித்துள்ளது.
ஆனால் வர்த்தக பேச்சுவார்த்தைகளின் நடுவே டிரம்பின் அறிவிப்பு இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேலும் மோசமடையச் செய்யும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
உண்மையில் விதிக்கப்படும் வரி அதிகமாக இருக்குமா?
டிரம்ப் இந்தியா மீது வரிகளை விதிப்பது பற்றி மட்டுமல்லாது ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதிப்பதைப் பற்றியும் பேசியுள்ளார். இது பிரச்னையை மேலும் சிக்கலாக்குகிறது.
“வரிகளின் தாக்கம் இருக்கும். ஏனெனில், ரஷ்யாவுடனான வர்த்தகத்திற்கு அபராதங்கள் இருக்கும். இது தவிர, பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பது பற்றியும் பேச்சு உள்ளது. எனவே, ஒட்டுமொத்தமாக இது 25 சதவீதத்தை விட அதிகமாக இருக்கும்,” என வெளியுறவு மற்றும் உத்தி விவகாரங்களை ஆய்வு செய்யும் அனந்தா மையத்தின் தலைமை செயல் அதிகாரி இந்திராணி பாக்சி, பிபிசியிடம் கூறினார்.
மூத்த பொருளாதார வல்லுநர் மிதாலி நிகோரும் பிபிசியின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இதேபோன்ற கருத்தை வெளிப்படுத்தினார்.
“டிரம்ப் இந்தியாவின் மீது கூடுதலாக 10 சதவீத வரியை விதித்துள்ளார். அதாவது, நிகர வரி 35 சதவீதமாக இருக்கும்.” என மிதாலி நிகோர் தெரிவித்தார்.
ஆனால், ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும் என்பது உறுதி.
கடந்த ஆண்டு இந்தியா-அமெரிக்க வர்த்தகம் 129.2 பில்லியன் டாலர்கள் மதிப்புடையதாக இருந்தது, இதில் இந்தியாவின் ஏற்றுமதி 87.4 பில்லியன் டாலர்களாக இருந்தது.
இருப்பினும், வரிகள் இந்தியாவின் ஏற்றுமதியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதில் நிபுணர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.
இந்தியப் பொருளாதாரத்தின் அளவைக் கருத்தில் கொண்டால், இது பெரிய அடியாக இருக்காது, மேலும் இந்தியா மற்ற சந்தைகளை அணுகுவதன் மூலம் இதை ஈடுசெய்யும் என இந்திராணி பாக்சி சொல்கிறார்.
அவரைப் பொறுத்தவரை, “இந்தியா பிரிட்டனுடன் ஒரு தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இதேபோன்ற ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனா மற்றும் வியட்நாம் போன்ற ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரங்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் மீதான வரிகளின் தாக்கம் குறைவாக இருக்கும்.”
ஆனால், “இது நமது பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய அடியாக இருக்கும். மருந்துத் துறை, நவரத்தின கற்கள் மற்றும் நகைகள், எஃகு-அலுமினியம் மற்றும் ஜவுளித் தொழில்கள் பாதிக்கப்படும்,” என்கிறார் பொருளாதார வல்லுநர் மிதாலி நிகோர்.
டிரம்ப் தனது எதிரிகளை விட நண்பர்களிடம் அதிக கடுமையுடன் நடந்துகொள்கிறாரா?
ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது, மேலும் “சீனா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடர்ந்தால் வரிகளை கணிசமாக உயர்த்துவோம்” என்று எச்சரித்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, நேட்டோ தலைவர் இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகியவற்றுக்கு ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வது குறித்து எச்சரிக்கை விடுத்தார். அப்போது இந்தியா ஏற்கனவே தனக்கு இருக்கும் எரிசக்தி தேவைகளை மேற்கோள் காட்டியது.
புதன்கிழமை பதிலளித்த சீனாவின் வெளியுறவு அமைச்சகம், “சீனா தனது தேசிய நலன்களுக்கு ஏற்ப எப்போதும் எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்யும். வரிவிதிப்பு போரில் வெற்றியாளர்கள் இருக்க முடியாது. அழுத்தம் மற்றும் கட்டாயப்படுத்துதல் மூலம் எதையும் சாதிக்கமுடியாது. சீனா தனது இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களை உறுதியாகப் பாதுகாக்கும்,” என்று கூறியது.
இதுவரை இந்தியாவிடமிருந்து மோதல் போக்கை காட்டும் பதில் எதுவும் வரவில்லை.
இந்திராணி பாக்சி கூறுகையில், “அமெரிக்கப் பொருளாதாரம் இந்தியாவை விட மிகப் பெரியது. இந்தியா மோதலை விரும்பாது, ஆனால் இதிலிருந்து விடுபட ஒரு வழியைக் கண்டறிய முயற்சிக்கும்.”
“டிரம்பின் முதல் மற்றும் இரண்டாவது பதவிக்காலங்களுக்கு இடையே நிறைய வித்தியாசம் உள்ளது. அமெரிக்க அரசில் டிரம்புடன் இணைந்திராத பகுதி எதுவும் இல்லை. டிரம்ப் தனது கொள்கைகளை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்துடனும் புதிய வலிமையுடனும் செயல்படுத்துகிறார்.”
“மறுபுறம், ரஷ்யா மற்றும் சீனா போன்ற தனது முக்கிய போட்டி நாடுகளை டிரம்பால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. இதனால், டிரம்ப் வலிமையின் மொழியைப் புரிந்துகொள்கிறார் என்று தெரிகிறது. உதாரணமாக, அவர் சீனாவின் மீது வரியை விதித்தபோது, சீனா அரிய கனிமங்கள் மற்றும் காந்தங்களின் விநியோகத்தை நிறுத்தியது. ஆனால், அவர் தனது நட்பு நாடுகளுக்கு எந்தவித சலுகையும் காட்டவில்லை,” என அவர் மேலும் தெரிவித்தார்.
ஒரு உதாரணத்தை குறிப்பிட்ட அவர்” பிரேசிலுடனான அமெரிக்காவின் வர்த்தகம் லாபகரமானது, ஆனாலும் அதன் மீது 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. ஜப்பான், தென் கொரியா மற்றும் கனடாவுடனும் இதே நிலை உள்ளது. ஆஸ்திரேலியாவுடன் பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கவில்லை. இதேபோல், இந்தக் கொள்கையால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது,” என கூறினார் இந்திராணி பாக்சி
மறுபுறம், கொள்கை நிபுணர் மிதாலி நிகோர் இதை இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு பின்னடைவாக கருதுகிறார்.
“கடந்த சில மாதங்களாக, இரு நாடுகளுக்கு இடையே தூதரக மட்டத்திலும் மற்ற உயர் மட்டங்களிலும் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன, ஆனால் ஒப்பந்தத்தின் காலாவதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டது ஆச்சரியமளிக்கிறது,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், வர்த்தக ஒப்பந்தத்தில் தனது விவசாய மற்றும் பால் துறைகளைப் பாதுகாப்பதில் இந்தியா இதுவரை உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது, எதிர்காலத்திலும் இதே உறுதியைக் காட்ட வேண்டியிருக்கும் என்று அவர் நம்புகிறார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இரண்டு நாடுகளுக்கிடையில் உறவில் ஏற்படும் தாக்கம் என்னவாக இருக்கும்?
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களையும் எண்ணெயையும் வாங்குவது நல்லதல்ல என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். “இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் தாக்கம் ஏற்படுவதற்கு வரிகள் மட்டுமே காரணமல்ல, மே மாதத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தை டிரம்ப் தன்னிச்சையாக அறிவித்தது ஒரு காரணம். இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது,” என்கிறார் இந்திராணி பாக்சி.
“தன்னால்தான் போர்நிறுத்தம் ஏற்பட்டதாக டிரம்ப் 29-30 முறை கூறியுள்ளார். இதனால் உறவுகளில் மிகப்பெரிய முட்டுக்கட்டை ஏற்பட்டது. இதன்மூலம் தனக்கு பெருமை கிடைக்க வேண்டும் என்று இதனால் விரும்பினார், ஆனால் இந்தியா அதை ஏற்க மறுத்துவிட்டது.”
டிரம்ப் போர் நிறுத்தம் பற்றி பேசியது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனிரை வெள்ளை மாளிகைக்கு அழைத்தார். இவை அனைத்தும் இந்தியாவுக்கு வேறு விதமான செய்தியை அனுப்பியது.
தற்போதைய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், “ஆபரேஷன் சிந்தூர்” குறித்து விவாதிக்கப்பட வேண்டுமா என்ற பிரச்னையால் பல நாட்கள் முட்டுக்கட்டை ஏற்பட்டது. விவாதம் நடந்தபோது, டிரம்பின் பெயர் திரும்பத் திரும்ப வந்தது. அப்போது, பிரதமர் மோதி, “ஆபரேஷன் சிந்தூர் வேறு எந்த நாட்டின் உத்தரவின்பேரிலும் நிறுத்தம் செய்யப்படவில்லை,” என்று தெளிவாகக் கூறினார்.
ஆனால், டிரம்பின் இந்தக் கொள்கை சீனா, ரஷ்யா மற்றும் இந்தியாவை ஒருவருக்கொருவர் நெருக்கமாக்குமா? இந்த கேள்விக்கு, பதிலளித்த இந்திராணி பாக்சி, “இந்தியா-சீனா இடையே வர்த்தகம் அதிகரிக்கலாம், ஆனால் உத்தி ரீதியாக சீனா ஒருபோதும் இந்தியாவுடன் நெருங்காது. இருப்பினும், ரஷ்யா-இந்தியா-சீனா (RIC) முத்தரப்பு ஒத்துழைப்பை மீண்டும் செயல்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. எனவே, இந்தியா இதில் தனது பங்கை அதிகரிக்கலாம்,” என்று தெரிவித்தார்.
ஆனால், படம் இன்னும் முழுமையடையவில்லை, வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
டிரம்ப் தானே கூறியதைப் போல, அவர் கணிக்க முடியாதவர், இதை தனது ஆளுமையின் ஒரு பகுதியாகவும், பேரம் பேசும் கருவியாகவும் கருதுகிறார்.
எனவே, வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு இந்த வரி அறிவிப்பில் என்ன மாற்றங்கள் வருகின்றன என்பதைப் பார்க்க வேண்டும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு