கருணா -பிள்ளையான் கும்பலைச்சேர்ந்த இனிய பாரதி தலைமையில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகளை தேடி ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

18 வயது மாணவன் பார்த்திபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடஆகியோர் படுகொலை செய்யப்பட்டு  புதைக்கப்பட்ட இருப்பதாக சந்தேகிக்கப்படும் திருக்கோயில்  தம்பிலுவில் இந்து மயானத்தில்  அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஸ்ப குமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோர் முன்னதாக கைதாகியிருந்தனர்.

2007ம் ஆண்டின் ஜீன் 28 ம் திகதி திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 6ம் திகதி திருக்கோயில் இருவரும்  கைது செய்ய்பட்டிருந்தனர்.

அவர்களுடன் இனிய பாரதியின் சகாக்களான முன்னாள் சாரதி செந்தூரன், திருக்கோயில் விநாயகபுரத்தைச் சேர்ந்த தொப்பி மனாப் என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன், வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலகிருஸ்ணன் சபாபதி மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த யூட் என அழைக்கப்படும் ரமேஸ் கண்ணா ஆகியோரை கைது செய்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

விசாரணையின் அடிப்படையில் கடந்த 2009ம் ஆண்டு ஜூலையில் திருக்கோயில் விநாயகபுரத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவன் பார்த்திபன், 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் கடத்தப்பட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத், 2010 ஜனவரி 26ம் திகதி ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களை  மயானத்துக்கு கடந்த இரு தினங்களாக அழைத்துச் சென்று புதைக்கப்பட்ட இடங்களை அடையாளப்படுத்தினர். அதற்கமைய  நீதவான் முன்னிலையில் அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.