ஓ. பன்னீர்செல்வம் எந்த பக்கம் சாய்வார்? விஜய் உடனா அல்லது திமுகவா?

படக்குறிப்பு, ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரைச் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ் 40 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீண்ட காலம் இடம்பெற்றிருந்த ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, தற்போது அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. எந்தக் கட்சியுடனும் தற்போது கூட்டணியில் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. ஆனால், திடீரென ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரைச் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சனி – ஞாயிற்றுக் கிழமைகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார்.

அவர் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வரும்போது, அவரை வரவேற்கவும் வழியனுப்பவும் வாய்ப்பளிக்க வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் அனுமதி கோரியிருந்தார்.

இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார். “எனது தொகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான மதுரை- போடிநாயக்கனூர் ரயில் பாதையின் மின்மயமாக்கல் உட்பட பல திட்டங்களை தொடங்கி வைக்க தூத்துக்குடிக்கு வருகிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் தாத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் எனக்கு அனுமதி கிடைத்தால் அது ஒரு தனிமரியாதையாகவும் எனக்களிக்கப்பட்ட சிறப்புரிமையாகவும் இருக்கும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், ஓ. பன்னீர்செல்வத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

தொடர்ந்து மறுப்பு

அதே நேரத்தில், தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணியின் பிரதான கட்சியான அ.தி.மு.கவின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு பிரதமரைச் சந்திக்க வாய்ப்பளிக்கப்பட்டது.

பிரதமரைச் சந்திக்க மட்டுமல்ல, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதற்கு முன்பாக தமிழ்நாட்டிற்கு வந்த இரண்டு தடவைகளிலும் அவரைச் சந்திக்க ஓ. பன்னீர்செல்வத்திற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

இது ஓ. பன்னீர்செல்வம் தரப்பினரிடம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த பலரும் இந்தக் கூட்டணியில் தொடர்வது குறித்து முடிவெடுக்க வேண்டும் எனக் கூற ஆரம்பித்தனர்.

இதையடுத்து வியாழக்கிழமையன்று உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் தர்மர், மதுரை தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், தேனி தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் ஆகியோரும் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசகரான முன்னாள் அமைச்சர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரனும் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன், இன்றைய கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

”1. தேசிய ஜனநாயக கூட்டணியில் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம்பெற்றிருந்தது. அந்தக் கூட்டணியுடனான உறவை தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முறித்துக் கொண்டுள்ளது.

2. ஓ.பன்னீர்செல்வம் விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

3. இப்போது எந்த கட்சியுடனும் கூட்டணி எஇல்லை. எதிர்காலத்தில் நிலைமைக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்” என்றார் அவர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான உறவு முறிந்ததற்கான காரணத்தைக் கேட்டபோது, பா.ஜ.க. தங்களுக்கு என்ன செய்தது என்பது எல்லோருக்குமே தெரியும் எனக் குறிப்பிட்டார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

வியாழக்கிழமையன்று காலையில், நடைபயிற்சி செல்லும்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, “யதேச்சையாகச் சந்தித்தபோது வணக்கம் தெரிவித்ததாக” மட்டும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், narendra modi/X

படக்குறிப்பு, பிரதமர் மோதியை எடப்பாடி பழனிசாமி வரவேற்றபோது மு.க. ஸ்டாலின் உடன் சந்திப்பு

இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே வியாழக்கிழமையன்று மாலையில் திடீரென முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இல்லத்திற்குச் சென்ற ஓ. பன்னீர்செல்வம் அங்கு அவரைச் சந்தித்துப் பேசினார்.

அவருடன் அவருடைய மகன் ஓ.பி. ரவீந்திரநாத்தும் மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் கோபாலகிருஷ்ணனும் உடன் சென்றனர்.

சுமார் அரை மணி நேரச் சந்திப்பிற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவித்தார்.

“முதலமைச்சர் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிரார். அவரது உடல்நலம் குறித்து விசாரிக்கவே சந்தித்தேன். மு. கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்துவின் மறைவு பற்றியும் விசாரித்தேன். அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை” என்று தெரிவித்தார்.

தி.மு.கவுடன் கூட்டணி வைப்பீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது, “அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை நண்பர்களும் இல்லை. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்” என்று சொன்னதோடு, கூட்டணியிலிருந்து விலகிய பிறகு பா.ஜ.கவினர் யாரும் பேசவில்லை என்று கூறினார்.

மேலும், “எனக்கென்று அரசியலில் சுயமரியாதை இருக்கிறது. இன்றைய சூழலில் எனக்கு வருத்தம் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் சமக்ர சிக்ஷா பற்றிக் கேட்கும்போது தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை என்று கல்வியமைச்சர் சொல்கிறார். அது ஜனநாயக நாட்டில் ஏற்புடையதில்லை” என்றும் தெரிவித்தார்.

பாஜகவுடன் நீண்ட பயணம்

நீண்ட காலமாகவே பா.ஜ.கவுக்கு நெருக்கமாக இயங்கிவந்த ஓ. பன்னீர்செல்வம் அந்தக் கூட்டணியிலிருந்து விலகியிருப்பது தமிழக அரசியல் அரங்கில் ஒரு கவனிக்கத்தக்க திருப்பமாக இருக்கிறது.

முன்னாள் முதலமைச்சரான ஜெ. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.கவுக்கு நெருக்கமாகச் செயல்பட ஆரம்பித்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதலமைச்சரான ஓ. பன்னீர்செல்வம் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டபோது, தன்னுடைய ஆலோசனையின் பேரிலேயே அவர் தர்ம யுத்தத்தைத் துவங்கியதாக ஆர்.எஸ்.எஸ்சின் சித்தாந்தியும் பத்திரிகை ஆசிரியருமான எஸ். குருமூர்த்தி வெளிப்படையாகவே கூறினார்.

இதற்குப் பிறகு, சிறிது காலம் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் தனித்தனியாக இயங்கிவந்த நிலையில் பா.ஜ.கவின் உயர்மட்ட வலியுறுத்தலின் பேரில் இரு தரப்பும் ஒன்றாக இணைந்தன. ஓ. பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். அ.தி.மு.கவுக்கு இரட்டைத் தலைமை உருவாக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே. பழனிச்சாமியும் செயல்பட்டனர். அடுத்துவந்த 2019ஆம் ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க. இணைந்தது. இதே கூட்டணி 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்ந்தது.

ஆனால், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தோல்வியடைந்த பிறகு, அந்தத் தோல்விக்கான முக்கியமான காரணமாக இரட்டைத் தலைமையைக் குறிப்பிட்ட எடப்பாடி கே. பழனிச்சாமி ஆதரவாளர்கள், கட்சிக்கு ஒற்றைத் தலைமையே வேண்டும், அதுவும் எடப்பாடி கே. பழனிசாமியே அந்தத் தலைமையாக இருக்க வேண்டுமெனக் குறிப்பிட்டனர்.

இதற்குப் பிறகு, ஒரு கட்டத்தில் ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

2023ஆம் ஆண்டு செப்டம்பரில் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. வெளியேறியது.

அந்தத் தருணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், “மூன்றாவது முறையும் நாட்டை ஆள்வதற்கான தகுதியை பா.ஜ.க. பெற்றுள்ளது. அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவு முறிந்தாலும் அது நாடகம் என்றாலும், எங்களுக்கு எந்த கவலையும் இல்லை” என்று குறிப்பிட்டு அதே கூட்டணியில் தொடர்ந்தார்.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் தனித்தனிக் கூட்டணியாக போட்டியிட்ட நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்ற ஓ. பன்னீர்செல்வம், ஒரு தொகுதியில் சுயேச்சைச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இதற்குப் பிறகு, மீண்டும் அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் கூட்டணி அமைத்தபோதும் அதே கூட்டணியில் தொடர்ந்தார் ஓ. பன்னீர்செல்வம்.

ஆனால், அந்தக் கூட்டணி உருவான பிறகும் ஓ. பன்னீர்செல்வம் அதே கூட்டணியில் தொடர்ந்தார். ஆனால், பா.ஜ.கவிலிருந்து போதுமான ஆதரவு இல்லாத நிலையில், இந்த முடிவை எடுத்திருக்கிறது ஓ. பன்னீர்செல்வம் தரப்பு.

“ஓ. பன்னீர்செல்வத்தை பா.ஜ.க. கைவிட்டுவிட்டது. இப்போது பிரதமர் வந்தபோது மட்டுமல்ல, இதற்கு முன்பும் தொடர்ந்து அவர் புறக்கணிக்கப்பட்டார். இந்த முறை பிரதமரைப் பார்ப்பதற்காக கடிதம் கொடுத்ததோடு, பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடமும் பேசினார், வேறு பலரிடமும் கேட்டார். ஆனால், அனுமதி கிடைக்கவில்லை. இத்தனைக்கும் ஓ. பன்னீர்செல்வம் பா.ஜ.கவிடம் மிகவும் பணிவுடன் நடந்துகொண்டார்.

அப்படி இருந்தும்கூட பிரதமரைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. பா.ஜ.க. நம்மைத் தொடர்ச்சியாக அவமதிக்கும் நிலையில் என்ன செய்யப் போகிறோம். ஏற்கனவே நம்மிடமுள்ள நிர்வாகிகளும் தொண்டர்களும் பல்வேறு கட்சிகளை நோக்க நகர ஆரம்பித்துவிட்டனர். விரைவில் முடிவெடுக்க வேண்டுமென வைத்தியலிங்கம் போன்றவர்கள் ஓ. பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தியிருக்கின்றனர். அதற்குப் பிறகுதான் வியாழக்கிழமையன்று இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்து இப்படி ஒரு முடிவெடுத்திருக்கிறார்கள்” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

படக்குறிப்பு, ஏ. சுப்புரத்தினம்.ஓ.பி.எஸ்ஸின் ஆலோசனைக் கூட்டத்தில் என்ன நடந்தது?

ஓ. பன்னீர்செல்வம் தரப்பு இன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.கவுடனான கூட்டணியில் தொடர்வது குறித்து காரசாரமான விவாதங்கள் நடந்திருக்கின்றன.

“சுயமரியாதையை ரொம்பவும் சோதித்துவிட்டார்கள். இன்னமும் எதற்கு அந்தக் கூட்டணியில் இருக்கிறார் என மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். பிரதமரை சந்திக்க எழுத்து மூலமாகக் கேட்டும் அனுமதிக்காதது மிகப் பெரிய அவமானம். அதனால், இந்தக் கூட்டத்திற்கு வரும்போதே ஓ. பன்னீர்செல்வம் ஒரு முடிவெடுத்திருந்தார். அவர் இந்தக் கூட்டத்தில் பேசும்போது தங்களை எப்படியெல்லாம் பா.ஜ.க. புறக்கணித்தது என்று என்று பட்டியலிட்டார்.

அதற்குப் பிறகு பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன், பா.ஜ.கவுடனான கூட்டணியில் தொடர்வதன் சாதக – பாதங்களை விளக்கினார். நாங்கள் செப்டம்பர் மாதத் துவக்கத்தில் ஒரு மாநாடு நடத்தத் திட்டமிட்டிருந்தோம். சிலர் மட்டும் அந்த மாநாடு முடியுவரை காத்திருக்கலாம் என்றார்கள். ஆனால், பெரும்பாலானவர்கள் உடனடியாக வெளியேறலாம் என்றார்கள். ஆகவே வெளியேறும் முடிவு ஒரு மனதாக எடுக்கப்பட்டது” என்கிறார் பழனி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஓ.பி.எஸ். தரப்பின் தேர்தல் பிரிவு செயலருமான வழக்கறிஞர் ஏ. சுப்புரத்தினம்.

முதல்வரை ஓ. பன்னீர்செல்வம் சந்தித்தது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்கிறார் ஏ. சுப்புரத்தினம். “என் தாய் இறந்தபோது வீடு தேடி வந்து முதல்வர் விசாரித்தார். அதனால் மு.க. முத்து இறப்பு குறித்து விசாரிக்கச் செல்கிறேன் என்று எங்களிடம் சொல்விட்டுத்தான் சென்றார்” என்கிறார் அவர்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்தச் சூழலில் ஓ.பன்னீர்செல்வத்திற்கான வாய்ப்புகள் என்ன?

“வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. மதச்சார்பற்ற சக்திகளை தூரத்தில் வைக்க ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்வோம்” என்கிறார் சுப்புரத்தினம்.

ஆனால், அரசியல் பார்வையாளர்கள் அவருக்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவே கருதுகிறார்கள்.

“இத்தகைய சூழலில் அவருக்கு இரண்டே வாய்ப்புகள்தான் இருக்கின்றன. ஒன்று, தி.மு.க. கூட்டணியில் இணைவது. இன்னொன்று தமிழக வெற்றிக் கழகத்திடம் செல்வது. இந்த இரு வாய்ப்புகளில் எதைத் தேர்வுசெய்தாலும், அது ஓ. பன்னீர்செல்வத்திற்கு வீழ்ச்சியாகத்தான் இருக்கும். அ.தி.மு.கவில் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அடுத்த இடத்திலேயே அவர் தொடர்ந்திருக்க வேண்டும். எப்படியிருந்தாலும் அவருக்கு அரசியல் எதிர்காலம் என்று ஒன்றுமே இல்லை” என்கிறார் குபேந்திரன்.

ஆனால், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் ஓ. பன்னீர்செல்வம் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவே கருதுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

“விஜய்யுடன் கூட்டணி சேர வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன். புதிய முகம் என்பதுதான் அவரது அடையாளம். அப்படியிருக்கும்போது ஒரு பழைய முகத்துடன் அவர் ஏன் கூட்டணி சேரப் போகிறார்? ஆகவே, தனியாகப் போட்டியிட்டு சில இடங்களில் எடப்பாடி கே. பழனிச்சாமியின் வாய்ப்புகளைப் பாதிக்கலாம். தவிர, இந்த அரசியல் நடவடிக்கைகளின் மூலம் இப்போது மீண்டும் பேசு பொருளாகியிருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம். அவ்வளவுதான்” என்கிறார் ஷ்யாம்.

அரசியலில் நிரந்தர நண்பரோ, எதிரியோ இல்லை என ஓ. பன்னீர்செல்வம் சொன்னாலும், அவர் முதல்வரைச் சந்தித்ததில் பெரிய அளவுக்கு அரசியல் கணக்குகள் இருக்க வாய்ப்பில்லை என்கிறார் ஷ்யாம்.

“ஓ. பன்னீர்செல்வம் விரைவில் சுற்றுப்பயணம் செல்ல இருக்கும் நிலையில், ஆளும் கட்சியின் தயவு அவருக்குத் தேவைப்படும். அந்த நிலையில் அதற்கு இந்த சந்திப்பு பயன்படும்” என்கிறார் அவர்.

இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும் பலனடைந்திருப்பது தி.மு.க. என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“பல விஷயங்களில் ஆளும் கட்சியை குற்றம்சாட்டி செய்திகளும் கருத்துகளும் வெளிவந்துகொண்டிருந்த சூழலில் இதுபோல நடப்பது தி.மு.கவுக்குத்தான் சாதகம். மேலும், பல ஆண்டுகளாக கூட்டணியை தி.மு.க. தக்கவைத்திருப்பதையும் எல்லோரும் பேசுவார்கள்” என்கிறார் அவர்.

பா.ஜ.கவைப் பொறுத்தவரை இந்த விவகாரம் குறித்து மௌனத்தையே கடைப்பிடிக்கிறது. அக்கட்சியினரின் கருத்தைப் பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு