Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
திருக்கோயில் காவற்துறைப் பிரிவிலுள்ள தம்பிலுவில் இந்து மயானத்தில் புதை குழி தோண்டும் நடவடிக்கை சிஐடியினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை (31.07.25) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இந்த நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
இனிய பாரதி தலைமையில் கடத்தப்பட்டு காணாமல் போன 18 வயது மாணவன் பார்த்திபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடஆகியோர் படுகொலை செய்யப்பட்டு இந்தப் பகுதியில் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
கருணா கட்சியைச் சேர்ந்த இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஷ்ப குமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோர், திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 6ம் திகதி திருக்கோயில் மற்றும் மட்டு சந்திவெளி பகுதிகளில் வைத்து சிஐடியினர் கைது செய்தனர்.
இவர்களுடன் இனிய பாரதியின் சகாக்களான முன்னாள் சாரதி செந்தூரன், திருக்கோயில் விநாயகபுரத்தைச் சேர்ந்த தொப்பி மனாப் என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன், வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சபாபதி மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த யூட் என அழைக்கப்படும் ரமேஷ் கண்ணா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின் அடிப்படையில் கடந்த 2009ம் ஆண்டு ஜூலையில் திருக்கோயில் விநாயக புரத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவன் பார்த்திபன், 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத், 2010- ஜனவரி 26ம் திகதி ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட ஆகியோர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சிஐடி யினர் கைது செய்யப்பட்டவர்களை குறித்த மயானத்துக்கு கடந்த இரு தினங்களாக அழைத்துச் சென்று புதைக்கப்பட்ட இடங்களை அடையாளப்படுத்தினர். இதற்கமைய குறித்த மயான இடத்தை தோண்டி சோதனை செய்வதற்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் சி ஐ டி யினர் அனுமதி கோரியதை அடுத்து நீதவான் ஏ.எல்.எம்.றிஸ்வான் முன்னிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த யூட் என அழைக்கப்படும் ரமேஷ் கண்ணா அடையாளம் காண்பிக்கும் இடத்தை பைக்கோ இயந்திரம் கொண்டு பிற்பகல் 2.00 மணிக்கு தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் போது அங்கு இதுவரை எந்தவிதமான உடற்பாகங்கள் மீட்கப்படவில்லை
இதேவேளை அந்த பகுதியில் மக்கள் திரண்டு நிற்பதை காணக்கூடியதாக இருந்தது.