Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
2019 ஆம் ஆண்டு “தர்ம சக்கரம்” பொறித்த ஆடையை அணிந்ததற்காக பெண் ஒருவரைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்ததன் மூலம் ஹசலக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த பெண் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரித்த பின்னர், உயர் நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொட, நீதிபதிகளான குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோரின் ஒப்புதலுடன் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
அதன்படி, கைது நடவடிக்கையை மேற்கொண்ட ஹசலக பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சந்தன நிஷாந்த, மனுதாரருக்கு தனது தனிப்பட்ட நிதியிலிருந்து 30,000 ரூபாவை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இழப்பீடு வழங்க பொலிஸ் திணைக்களம் அல்லது பொலிஸ் கூட்டு நிதியத்திலிருந்தோ எந்தவொரு நிதியும் பயன்படுத்தப்படவில்லை என்பதற்கான சான்றிதழை பொலிஸ்மா அதிபர் நீதிமன்றத்திற்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் பிரிவு 3(1) இன் கீழ் கைதுகளை மேற்கொள்ளும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை சுட்டிக்காட்டும் வகையிலான சுற்றறிக்கை ஒன்றை சட்டமா அதிபரின் அனுமதியுடன், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உயர் நீதிமன்றம் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தங்கள் கட்சிக்காரரை ‘தர்ம சக்கரம்’ பொறித்த ஆடையை அணிந்ததற்காக பொலிஸார் கைது செய்ததாகவும், ஆனால் அது ஒரு கப்பலின் சுக்கானம் என்பது பின்னர் தெரியவந்தது என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
2019 மே 17ஆம் திகதி ஹசலக பொலிஸ் பிரிவில் ‘தர்ம சக்கரம்’ பொறித்த ஆடையை அணிந்ததற்காக மனுதாரரை கைது செய்து தடுத்து வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.