Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்வதற்கு , ஜனாதிபதியின் கவனத்திற்கு விடயங்களை கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார அரசியல் கைதிகளின் உறவினர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
கொழும்பு நீதி அமைச்சின் அலுவலகத்தில், நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்காரவை, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் பிரதிநிதிகள், சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் நேரில் சந்தித்துள்ளனர்.
சந்திப்பின் போது, கடந்த 15 முதல் 30 வருடங்களாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்கள் உறவினர்களின் நீண்டகால சிறைவாசம் காரணமாக தாங்கள் எதிர்கொண்ட உளவியல், சமூக மற்றும் பொருளாதார சவால்களை கண்ணீருடன் எடுத்துரைத்தனர்.
தங்களின் அன்புக்குரியவர்களை விரைவாக விடுதலை செய்யுமாறு அமைச்சரிடம் கூட்டாக கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன், இலங்கையின் இன முரண்பாடுகளால் உருவான போரின் விளைவுகளான தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில், மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண்பது அவசியமாகும்.
கடந்த காலத்தில், இலங்கை – இந்திய ஒப்பந்தம், விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுக்கள், ஜே.வி.பி.க்கு பொது மன்னிப்பு, மற்றும் போருக்கு பின்னர் 12,000 விடுதலைப் புலிகள் விடுவிக்கப்பட்டமை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டது .
இந்த வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, பல வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளில் விடுதலையினை மனிதாபிமான ரீதியில் முன்னெடுக்குமாறு குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை முன்வைத்தது.
மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் ஊடாக கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
நீதி அமைச்சர் ஹர்ஷ நானயக்கார கோரிக்கைகளை, தான் “காதுகளால் கேட்கவில்லை, இதயத்தால் கேட்கிறேன்” என்று குறிப்பிட்டு, சட்ட கட்டமைப்பிற்குள் இருந்து இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக அரசியல் கைதிகளின் உறவினர்களிடம் உறுதி அளித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் பொது மன்னிப்பு சார்ந்த விடயங்கள் ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் வருகின்றமையால், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று தொடர்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர் உறுதியளித்தார்.