இந்தியாவில் கிராமத்தை விட நகரங்களில் வசிப்பவர்களுக்கு வைட்டமின் டி பற்றாக்குறை அதிகம் இருப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சோர்வு, மூட்டு வலி, கால்களில் வீக்கம், நீண்ட நேரம் நிற்பதில் சிரமம், தசை பலவீனம், மன அழுத்தம் ஆகியவை வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளாகும். (சித்தரிப்புப்படம்)எழுதியவர், ஆ. நந்தகுமார்பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளரான வாசுகிக்கு அடிக்கடி தசை வலியும் சோர்வும் இருந்துகொண்டே இருந்துள்ளது.

”பணி அழுத்தம் அல்லது போதிய தூக்கம் இல்லாதது இதற்கான காரணமாக இருக்கலாம் என நினைத்தேன்” என்கிறார் அவர்.

பல மாத போராட்டத்துக்குப் பிறகு மருத்துவரிடம் செல்ல முடிவெடுத்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ரத்தப் பரிசோதனையில் அவரது வைட்டமின் டி அளவு ஆபத்துக்குரிய வகையில் குறைவாக இருந்தது தெரியவந்தது.

உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பொது சுகாதார இதழில், ‘இந்தியாவின் தலைநகர் டெல்லியின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் வைட்டமின் டி குறைபாட்டின் பரவல் மற்றும் காரணிகள்’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வு கட்டுரை வெளியானது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அதன்படி, நகர்ப்புறத்தில் வசிப்பவர்களில் 70% பேருக்குக் கடுமையான வைட்டமின் டி குறைபாடு இருப்பதாகவும், அதேசமயம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் சுமார் 20% பேருக்குக் கடுமையான வைட்டமின் டி குறைபாடு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

இந்த ஆய்வில் டெல்லி என்சிஆர் எனப்படும் தலைநகரப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த நகர்ப்புற மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

ரத்தத்தில்10 நானோ கிராமுக்கும் குறைவாக வைட்டமின் டி இருந்தால் அது தீவிர குறைபாடாகக் கருதப்படும். இந்த ஆய்வில் பங்கேற்ற நகர்ப்புறத்தை சேர்ந்தவர்களின் சராசரி வைட்டமின் டி அளவு 7.7  நானோகிராமாக உள்ளது.

கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களின் சராசரி வைட்டமின் டி அளவு 16.2 நானோ கிராமாக உள்ளது. ரத்தத்தில் 30 நானோ கிராமுக்கு மேல் வைட்டமின் டி இருப்பதுதான் போதுமான அளவாகக் கருதப்படும் நிலையில், கிராமப்புறத்தில் இருப்பவர்களும் இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்கவில்லை என்றாலும் கடுமையான குறைபாடு என்ற நிலை சற்று குறைவாகவே இருக்கிறது.

வைட்டமின் டி பற்றாக்குறையால் ஆண்களை விடப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் இதழில் வெளியான ஆய்வு கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வைட்டமின் டி பெறுவது தான் இலக்கு என்றால் கண்ணாடி ஜன்னலுக்கு அருகில் இருந்து சூரிய ஒளியை பெற வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.தமிழ்நாட்டில் என்ன நிலவரம்?

சென்னையை சேர்ந்த கர்ப்பிணிகள் மத்தியில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் 62% பெண்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது தெரியவந்தது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பிரஸ்ஸில் வெளியான, ‘பல்வேறு வகையான குளுக்கோஸ் சகிப்புத்தன்மை கொண்ட நகர்ப்புற தென்னிந்தியர்களில் வைட்டமின் டி குறைபாடு’ என்ற ஆய்வில் சென்னை சேர்ந்த பலர் பங்கேற்றுள்ளனர்.

ஆய்வில் பங்கேற்ற 66% பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது தெரியவந்தது. பங்கேற்பாளர்களுக்கு நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை அல்லது வகை 2 நீரிழிவு நோய் இருந்தாலும் சரி, வைட்டமின் டி குறைபாடு பரவலாக இருந்தது எனவும் ஆண்களை விடப் பெண்களுக்கு வைட்டமின் டி அளவு குறைவாக இருந்தது எனவும் கூறுகிறது இந்த ஆய்வு.

அத்துடன் பஞ்சாப், திருப்பதி, புனே, அமராவதி போன்ற பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளும் கிராமப்புறத்தை விட நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்கு அதிகளவில் வைட்டமின் டி பற்றாக்குறை இருப்பதைக் காட்டின.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வைட்டமின் டி குறைபாடு கரணமாக இளம் வயதிலேயே டிமென்ஷியா ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறுகிறது ஓர் அய்வுகாரணம் என்ன?

வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து இயற்கையாகப் பெறக்கூடியது. இந்திய வட மாநிலங்களில் சில மாதங்களைத் தவிர பெரும்பாலான மாதங்களில் சூரிய ஒளி நன்றாகக் கிடைக்கும் அதே சமயம் சென்னை போன்ற வெப்ப மண்டல நகர்புறபகுதியில் ஆண்டு முழுக்க சூரிய ஒளி கிடைத்தாலும் நகர்புற மக்களுக்கு அதிகளவில் வைட்டமின் டி குறைபாடு இருப்பதற்கான காரணம் என்ன?

வைட்டமின் டி சூரிய ஒளி மற்றும் உணவு மூலம் மனித உடலுக்கு வருவதாகச் சென்னையைச் சேர்ந்த தோல் மருத்துவர் தட்சிணாமூர்த்தி கூறுகிறார்.

”உடலுக்குத் தேவையான பெரும்பாலான வைட்டமின் டி சூரிய ஒளி மூலம் வருகிறது. மனித தோலின் மேல் பகுதி இயற்கையாகவே 7-டிஹைட்ரோகொலஸ்ட்ரால் (7-dehydrocholesterol) என்ற மூலக்கூறை உற்பத்தி செய்யும். சூரிய ஒளியின் புறஊதா கதிர் தோலில் பட்டவுடன் அந்த மூலக்கூறு வைட்டமின் டி3 ஆக மாறும். பின்னர் கல்லீரலும், சிறுநீரகமும் அதை வைட்டமின் டி ஆக மாற்றி உடலுக்கு அனுப்பும்” என்கிறார் அவர்.

”நவீனமயமாக்கல் மற்றும் மாறிவரும் வேலை கலாசாரம் காரணமாக வீட்டிற்குள் செலவிடும் நேரமும், அலுவலகத்தில் செலவிடும் நேரமும் அதிகரித்துள்ளது. வெளியில் சென்றாலும் ஆடையால் உடலை முழுமையாக மறைத்துக் கொள்ளும் வழக்கம் அதிகமாக உள்ளதால், உடலில் சூரிய ஒளி படுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துவிடுகிறது” என்கிறார் புதுவை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பொது மருத்துவர் பீட்டர்.

சில நிமிடங்கள் வெளியே இருப்பதன் மூலம் போதுமான சூரிய ஒளி கிடைக்கும் என்று மக்கள் கருதுகிறார்கள். ஆனால் மாசுபாடு, உடைகள் மற்றும் கண்ணாடி ஜன்னல் தடுப்பு போன்றவை உங்கள் உடல் சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி பெறுவதைத் தடுக்கின்றன என்கிறார் பீட்டர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வைட்டமின் டி பற்றாக்குறை ஆபத்தால் ஆண்களை விடப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் இதழில் வெளியான ஆய்வு கூறுகிறது.எவ்வளவு நேர சூரிய ஒளி தேவை?

ஒரு இந்திய ஆண், போதிய அளவாக நிர்ணயிக்கப்பட்ட 30 நானோ கிராம் வைட்டமின் டி-ஐ பெற தினமும் 2 மணி நேரத்துக்கு மேலாக முகம், கைகள், முன்கைகள் மீது சூரிய ஒளி படும் விதமாக நடக்க வேண்டும் என்கிறது ஓர் ஆய்வு. குறைந்தபட்சம் 20 நானோ கிராம் வைட்டமின் டி-ஐ பெற தினமும் 1 மணி நேரம் வெளியில் நடக்க வேண்டும் எனவும், காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடக்க சிறந்த நேரம் எனவும் இந்த ஆய்வு கூறுகிறது

வைட்டமின் டி பெறுவது தான் இலக்கு என்றால் கண்ணாடி ஜன்னலுக்கு அருகில் இருந்து சூரிய ஒளியை பெற வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

”சூரிய ஒளியின் UVB கதிர்கள்தான் வைட்டமின் டி உருவாக உதவும். இந்த கதிர்கள் வழக்கமாக காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நன்றாக கிடைக்கும். அதிகாலையிலும் மாலையிலும் சூரிய ஒளியில் UVA கதிர்கள் இருக்கும். இது வைட்டமின் டி உருவாக உதவாது. அதிகாலையில் சூரியன் பளிச்சென்று தோன்றினாலும் அதில் நீங்கள் நின்றால் அதிக பலனில்லை” என்கிறார் மருத்துவர் தட்சணாமூர்த்தி..

இதற்கான அறிவியல் காரணம் என்னவென்றால், பூமியின் வளிமண்டலம் சூரியன் கீழ்வானில் இருக்கும்போது UVB கதிர்களை தடுத்துவிடுகிறது. அதாவது, அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் சூரியன் மிகவும் குறைந்த (45 டிகிரிக்கு குறைவாக) கோணத்தில் இருப்பதால் UVB கதிர்கள் பெரும்பாலும் பூமியை அடையவே முடியாமல் தடுக்கப்படுகின்றன.

வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள்

சோர்வு, மூட்டு வலி, கால்களில் வீக்கம், நீண்ட நேரம் நிற்பதில் சிரமம், தசை பலவீனம், மன அழுத்தம் ஆகியவை வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளாகும்.

”பரபரப்பான வாழ்க்கையால் இந்தியர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை வைட்டமின் டி குறைபாடு உடலின் அனைத்து பாகங்களையும் படிப்படியாக பலவீனப்படுத்துகிறது, இதன் காரணமாக வயதான காலத்தில் எலும்புகள், தசைகள் மற்றும் மூட்டுகளில் அதிக வலி ஏற்படுகிறது.” என்கிறார் மருத்துவர் பீட்டர்.

வைட்டமின் டி குறைபாடு காரணமாக இளம் வயதிலேயே டிமென்ஷியா ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறுகிறது ஓர் அய்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வைட்டமின் டி சூரிய ஒளி மற்றும் உணவு மூலம் மனித உடலுக்கு வருகிறதுசமாளிப்பது எப்படி?

வாசுகி போன்ற பெரும்பாலான நகர்ப்புறவாசிகளுக்குத் தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான நேரத்தில் குறைந்தது 1 மணி நேரம் நடைப்பயிற்சி செய்வது என்பது சாத்தியமற்றது.

”உணவு மூலம் வைட்டமின் டி குறைபாட்டைச் சமாளிப்பது சற்று கடினம். முட்டை, மீன், பால், வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட உணவு போன்றவை உதவக்கூடும்.” என்கிறார் மருத்துவர் பீட்டர்.

வைட்டமின் டி குறைபாட்டை குணப்படுத்த சில சப்ளிமெண்ட்களும் பயனுள்ளதாக இருக்கும் என மருத்துவர் கூறுகிறார்.

”என்னதான் பல சப்ளிமெண்ட்கள் கிடைத்தாலும் நேரம் கிடைக்கும்போது வெயிலில் நிற்பது போன்ற எளிமையான, செலவில்லாத மருந்துதான் சிறந்தது என தோன்றுகிறது” என்கிறார் வாசுகி.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு