ரஷ்யா நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலை அதிர வைத்தது எப்படி – முழு விவரம்காணொளிக் குறிப்பு, நிலநடுக்கம்ரஷ்யா நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலை அதிர வைத்தது எப்படி – முழு விவரம்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 11.25 மணிக்கு 8.8 அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் பெட்ரோபாவ்லாவ்ஸ்க் – காம்ச்சாட்ஸ்கி (Petropavlovsk-Kamchatsky) என்ற இடத்தில் இருந்து 126 கிலோமீட்டர் தொலைவில் 18 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து.

நிலநடுக்கம் காரணமாக ரஷ்யாவின் கம்சட்கா க்ரே பகுதியில் கட்டடங்கள் குலுங்கின, கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பின.

ரஷ்யாவின் சகின் மாகாணத்தில் உள்ள வட குரில்ஸ் தீவுகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த தீவில் உள்ள ஒரு துறைமுகத்தில் சுனாமி அலைகள் புகுந்தன.

நிலநடுக்கத்தால் ரஷ்யாவின் கம்சாட்கா விமான நிலையத்தின் கூரை பெயர்ந்து விழுந்தது.

ரஷ்யாவின் ஏற்பட்ட நிலநடுத்தத்தைத் தொடர்ந்து ஜப்பானின் ஹூக்கைடோ (Hokkaido) முதல் கியூஷு வரையிலான கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அமெரிக்காவின் மேற்கு கடற்கரை, அலாஸ்காவின் தொலைதூர அலூடியன் தீவுகள், ஹவாய், குவாம் ஆகிய பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக அமெரிக்காவின் ஹவாயில் 4 முதல் 6 அடி உயரம் வரை அலைகள் எழும்பின.

ஹவாய் துறைமுகத்தில் உள்ள அனைத்து வணிக கப்பல்களை அப்புறப்படுத்த வேண்டும் என அமெரிக்கக் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டதை அடுத்து ஹவாயின் நஹாலேயூ Naalehu பகுதியில் சைரன் மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது.

மேலும் கரையோரம் இருக்கும் கப்பல்கள் சுனாமி அலைகள் கடந்து செல்கிற வரை கடலுக்குள்ளே இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈக்வடார், வடமேற்கு ஹவாய் தீவுகள் மற்றும் ரஷ்யாவின் சில கடற்கரைகளில் மூன்று மீட்டருக்கும் அதிகமான உயர அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்கச் சுனாமி எச்சரிக்கை மையங்கள் தெரிவித்துள்ளன.

இதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியா, கொலம்பியா, மெக்சிகோ, நியூசிலாந்து, டோங்கா மற்றும் தைவான் உள்ளிட்ட பிற இடங்களில் ஒரு மீட்டர் வரை அலைகள் எழக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டது.

சுனாமி எச்சரிக்கை காரணமாக ஜப்பானில் 19 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுனாமி எச்சரிக்கைக் காரணமாக ஜப்பானின் தெற்கு பகுதிகளில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது, கடைகள் அடைக்கப்பட்டன.

ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து ஃபுகுஷிமா டாய்ச்சி மற்றும் ஃபுகுஷிமா அணுமின் நிலையங்களிலிருந்த ஊழியர்கள் பாதுகாப்பான, உயரமான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருப்பதாக டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி (டெப்கோ) கூறியுள்ளது.

இவற்றுள், ஃபுகுஷிமா டாய்ச்சி என்பது 2011ஆம் ஆண்டு ஜப்பானைத் தாக்கிய 9.0 அளவு நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையமாகும்.

ஜப்பானின் வடக்கு பகுதியில் 30 செண்டிமீட்டர் முதல் 40 செண்டி மீட்டர் உயர சுனாமி அலைகள் தாக்கின. இதுவரை எவ்வித பாதிப்போ உயிரிழப்போ ஏற்படவில்லை என ஜப்பானின் முதன்மை கேபினட் செயலாளர் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட ஒரு பெரிய நிலநடுக்கம் காரணமாக, ஹவாயில் (Hawaii) சுனாமி எச்சரிக்கை அமலில் உள்ளது. அலாஸ்கா மற்றும் அமெரிக்காவின் பசிபிக் கரையோர பகுதிகளில் சுனாமி கண்காணிப்பு அமலில் உள்ளது” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு