நிலநடுக்கத்தை முன்பே கணிக்க முடியாதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், அனா ஃபேகிபதவி, பிபிசி நியூஸ், வாஷிங்டன் டிசிஎழுதியவர், கிறிஸ்டல் ஹேஸ்பதவி, பிபிசி நியூஸ், லாஸ் ஏஞ்சல்ஸ்எழுதியவர், மேக்ஸ் மட்ஸாபதவி, பிபிசி நியூஸ், சியாட்டில்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நிலநடுக்கத்தைப் பற்றி கணிப்பவர் என்று பிரெண்ட் டிமிட்ரக் தன்னைக் கூறிக் கொள்கிறார்.

கலிஃபோர்னியா மாகாணத்தின் மேற்கு மூலையில் இருக்கும் சிறிய கடற்கரை கிராமமான யுரேகாவின் தெற்கே ஒரு நிலநடுக்கம் விரைவில் ஏற்படும் என்று அக்டோபர் மத்தியில் தன்னை சமூக ஊடகத்தில் பின்பற்றும் பல்லாயிரக்கணக்கானோருக்குத் தெரிவித்தார்.

இரண்டு மாதங்கள் கழித்து, வட கலிஃபோர்னியாவில் 7.3 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. லட்சக்கணக்கானோர் வசிக்கும் இப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு அடுத்த நிலநடுக்கத்தை கணிப்பார் என்ற எண்ணத்தில் இணையத்தில் டிமிட்ரக்கைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்தது.

“என்னை ஏற்றுக் கொள்ளாதவர்களிடம் கேட்கிறேன், நான் செய்வது தற்செயல் என்று எப்படி வாதிடுகிறீர்கள். நிலநடுக்கங்கள் எங்கு செல்லும் என்று கண்டுபிடிக்க அபார திறன் வேண்டும்,” என்று புது வருடத்தின் முன்தின மாலையில் குறிப்பிட்டார்.

ஆனால் ஒரே ஒரு பிரச்னை உள்ளது: நிலநடுக்கங்களை முன்கூட்டியே கணிக்க முடியாது, என அவற்றை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அதன் கணிக்க முடியாத தன்மைதான் அதனைப் பற்றி பயமுறுத்தும் விஷயமும் கூட. வட அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கானோர் ‘ஒரு பெரிய நிலநடுக்கம்’ எப்போது வேண்டுமானாலும் தங்களைத் தாக்கி எண்ணிலடங்கா உயிர்களையும், நில அமைப்பையும் மாற்றிப் போடலாம் என்று அச்சம் கொள்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லாஸ் ஏஞ்சல்ஸில் 57 உயிர்களைப் பறித்து, ஆயிரக்கணக்கானோரைக் காயப்படுத்திய நார்த்ரிட்ஜ் நிலநடுக்கம்தான் சமீபத்தில் வந்த நிலநடுக்கங்களில் மிகவும் ஆபத்தானதுஅமெரிக்க புவியியல் கணக்கெடுப்பில் (யுஎஸ்ஜிஎஸ்) முப்பதாண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய நிலநடுக்க ஆய்வாளர் லூசி ஜோன்ஸ் ‘தி பிக் ஒன்ஸ்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் இப்படிப்பட்ட நிலைகுலையச் செய்யும் நிகழ்வுகளில் இருந்து காத்துக் கொள்ளவும், அவற்றில் இருந்து மீண்டு வரவும் நிலநடுக்கம் வரும் வாய்ப்புகள் பற்றிய தன் ஆய்வில் கவனம் குவிக்கிறார்.

தான் நிலநடுக்கங்களைப் பற்றி ஆய்வு செய்த காலம் முழுவதும் எப்போது ‘பெரிய நிகழ்வுகள்’ – வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விஷயங்களாகப் பொருள்படுபவை – நடக்கும் என்பதற்கான பதில்களைத் தேடும், அதற்கான விடையைத் தெரிந்து கொண்டதாகச் சொல்லும் மனிதர்கள் இருக்கிறார்கள் எனக் கூறுகிறார்.

”ஆபத்தின் முன் ஒரு முறைமையைக் கண்டுகொள்வதென்பது மனிதத் தேவை, பயத்துக்கான ஒரு இயல்பான பதில் அது,” என்று பிபிசிக்கு அவர் தெரிவித்தார். ”இதற்கு எந்த கணித்தறியும் திறனும் இல்லை.”

அமெரிக்க புவியியல் கணக்கெடுப்பின் படி உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் சுமார் ஒரு லட்சம் நிலநடுக்கங்கள் உணரப்படும் நிலையில், மனிதர்கள் எச்சரிக்கையை விரும்புவது புரிந்துகொள்ளக்கூடியதுதான்.

சென்ற டிசம்பரில் நிலநடுக்கம் நிகழ்ந்த யுரேகா பகுதியில் – சான்ஃபிரான்சிஸ்கோவின் வடக்கே கிட்டத்தட்ட 270 மைல் (434 கி.மீ) பரந்து விரிந்த கடற்கரை நகரத்தில் – கடந்த வருடம் மட்டுமே 700 நிலநடுக்கங்கள் உணரப்பட்டிருக்கின்றன – அவற்றில் பத்துக்கும் மேற்பட்டவை சென்ற வாரம் ஏற்பட்டவை என்று தரவுகள் காட்டுகின்றன.

பட மூலாதாரம், Getty Images

நிலநடுக்கத்தை கணிப்பது எளிதானதா?

நிலநடுக்கம் ஏற்படும் என்று டிமிட்ரக் சரியாக கணித்த அந்தப் பகுதி யுஎஸ்ஜிஎஸ்-ன் படி அமெரிக்காவில் ‘பெரும் நிலநகர்வுகள் ஏற்படும் பகுதி. மூன்று நில அடுக்குகள் சந்திக்கும் மெண்டோசினோ மும்முனை சந்திப்பு என்றழைக்கப்படும் பகுதியாக இருப்பதுதான் அதன் நிலையற்றதன்மைக்குக் காரணம்.

இந்த அடுக்குகளின் இயக்கம் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும்போது – மேலே, கீழே அல்லது பக்கவாட்டில் – அது அழுத்தத்தை உருவாக்குகிறது. இந்த அழுத்தம் வெளியாகும்போது ஒரு நிலநடுக்கம் ஏற்படும்.

இந்தப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்படும் என்று கணிப்பது எளிதான செயல் என்று குறிப்பிடும் ஜோன்ஸ், இருந்தாலும் எல்லைத் தாண்டும் வலுவான நிலநடுக்கம் வருவது அரிதானதே என்கிறார்.

1900லிருந்து இந்த அளவு அல்லது இதை விட வலுவான நிலநடுக்கங்கள் 11 மட்டுமே ஏற்பட்டுள்ளன என்று யுஎஸ்ஜிஎஸ் குறிப்பிடுகிறது. அவற்றில் சமூக ஊடகத்தில் டிமிட்ரக் குறிப்பிட்டதையும் சேர்த்து ஐந்து நிலநடுக்கங்கள் இதே பகுதியில் ஏற்பட்டவை.

கணிப்பு உண்மைதான் என்றாலும் இப்படிப்பட்ட பெரிய, சமூகத்தை குலைக்கும் நிலநடுக்கங்களை கணிப்பது, அதுவும் மிகச் சரியாக கணிப்பது சாத்தியமில்லாத ஒன்று என, ஜோன்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

நில நடுக்கத்துக்கான காரணிகள்

ஒரு நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சிக்கலான, ‘மாறும் தன்மை’ கொண்ட பல புவியியல் காரணிகள் உண்டு என்று ஜோன்ஸ் கூறுகிறார்.

நிலநடுக்கம் நிகழும்போதுதான் அதன் அளவும் முடிவு செய்யப்படும் என்று சொல்லும் அவர் அதற்கு காகிதத்தைக் கிழிக்கும் செயலை உதாரணமாகப் பயன்படுத்துகிறார். ஏதோ ஒன்று அதைத் தடுக்கும் வரையோ அல்லது தாமதப்படுத்தும் வரையோ காகிதம் கிழிவது தொடரும் – ஒரு காகிதத்தை ஈரமாக்கும் தண்ணீர்ச் சுவடுகள் போல.

நிலநடுக்கம் எப்படி ஏற்படுகிறதென்று விஞ்ஞானிகளுக்குத் தெரியும் – புவிச்சூழலில் ஏற்படும் வறுகளின் இடைவெளிகளில் ஏற்படும் திடீர் இயக்கம் – ஆனால் இப்படிப்பட்ட நிகழ்வை கணிப்பது, ”குறுகிய வருங்காலத்தில் வரும் என்று எதிர்பார்ப்பது’ நடக்க இயலாத ஒன்று என்று யுஎஸ்ஜிஎஸ் கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1906 நிலநடுக்கத்திற்குப் பிறகு சான்ஃபிரான்ஸிஸ்கோ இடிபாடுகள்ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட வருடங்களுக்குள் நிலநடுக்கம் ஏற்படுவதைத் தங்களால் கணிக்க முடியும் என்று சொல்லும் இந்த அமைப்பு அவ்வளவு அருகில்தான் தங்களால் கணிக்க முடியும் என்று குறிப்பிடுகிறது.

அந்தப் பகுதியில் இருப்பவர்கள், ‘பெரிய நிகழ்வுகள்’ என்று குறிப்பிடும் வகையிலான பெரிய அளவிலான நிலநடுக்கங்களில் சில ஓரளவு ஒரு ஒழுங்கைப் பின்பற்றி அமைவதாக புவியியல் தரவுகள் காட்டுகின்றன. காஸ்காடியா மூழ்கும் மண்டலம், ஒவ்வொரு 300 – 500 வருடங்களுக்கும் கீழிறங்கி பசிஃபிக் வடமேற்கு கடற்கரையில் வழக்கமாக நூறு அடி (30.5 மீட்டர்கள்) உயரமான மிகப்பெரிய சுனாமிகளை ஏற்படுத்துகின்றன.

தெற்கு கலிஃபோர்னியாவில் இருக்கும் சான் ஆண்டிரியாஸ் புவிச்சூழலில் ஏற்படும் தவறுகளில் ‘பெரிய நிகழ்வு’ நடக்கும் எனினும் ஒவ்வொரு 200 – 300 வருடங்களுக்கு ஒருமுறை மிகவும் தீவிரமான அசைத்துப் பார்க்கும் நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன. இந்த இரண்டு பகுதிகளிலுமே எப்போது வேண்டுமானாலும் ஒரு ‘பெரிய நிகழ்வு’ ஏற்படக்கூடும்.

தான் வேலை செய்த காலம் முழுவதும் இப்படிப்பட்ட பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் என்று 1990களில் தங்களை எச்சரிக்க தங்கள் அலுவலகத்துக்குத் ஃபேக்ஸ் செய்தவர்களையும் சேர்த்து பல ஆயிரக்கணக்கானோர் எச்சரித்ததாகவும் ஜோன்ஸ் கூறுகிறார்.

“இப்படி ஒவ்வொரு வாரமும் கணிப்புகள் வந்தால், யாராவது ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கத்தானே செய்யும். சரிதானே?” என்று சிரித்தபடி சொன்னார் அவர். ”ஆனால் இப்படித் தாங்கள் சொன்னதில் பலித்ததை மூளைக்கு ஏற்றிக் கொண்டு அடுத்து இன்னும் ஒரு பத்து பலிக்காத நிகழ்வுகளைச் சொல்வார்கள்,”.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, மியான்மர் தலைநகரில் இடிந்து விழுந்த கட்டடம்தவறான கணிப்புகள்

இப்படிப்பட்ட ஒரூ சூழல்தான் அறிவியல் பின்புலமே இல்லாத டிமிட்ரக் விஷயத்திலும் ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு அலாஸ்கா, ஜப்பான் அல்லது நியூசிலாந்து கடற்கரைப் பகுதியில் இருக்கும் தீவுகள் இவற்றில் எங்காவது உலக வணிகத்தையே புரட்டிப்போடும் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று கணித்துள்ளார் டிமிட்ரக்.

நிலநடுக்கம் சார்ந்த கணிப்புகள் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால் மூன்று முக்கிய கூறுகள் வேண்டும், ஒரு தேதியும், நேரமும், நிலநடுக்கம் ஏற்படப்போகும் இடம் மற்றும் அதன் அளவு.

ஆனால் டிமிட்ரக்கின் காலக்கோடு மாறிக்கொண்டே இருக்கிறது.

ஒரு கட்டத்தில் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு சற்று முன்போ பின்போ ஏற்படும் என்றார்.

அதன்பிறகு இந்தப் பெரிய நிலநடுக்கம் 2030க்கு முன்பு கட்டாயமாக ஏற்படும் என்கிறார்.

அந்தப் பெரிய நிலநடுக்கம் இன்னும் ஏற்படாதவேளையில், அது கண்டிப்பாக ஏற்படும் என்று டிமிட்ரக் இன்னும் நம்புகிறார்.

”அது தற்செயல் நிகழ்வாக இருக்கும் என்று நான் நம்பவில்லை,” என்று பிபிசியிடம் தெரிவித்தார் டிமிட்ரக். ”அது தொடர்பற்ற நிகழ்வாகவோ, அதிர்ஷடமோ கிடையாது.”

நிலநடுக்கத்தைப் பொறுத்தவரை இப்படிப்பட்ட எண்ணம் பொதுவானதுதான் என்று ஜோன்ஸ் கூறுகிறார்.

”தொடர்பற்ற முறையில் நடப்பவைகளில் நாம் ஒரு முறைமையைக் காணலாம், நட்சத்திரங்களில் நட்சத்திரக்கூட்டங்களின் வடிவத்தை நாம் காண்பது போல,” என்று அவர் சொன்னார்.

“மக்களில் பலர் நிலநடுக்கத்தைக் கண்டு உண்மையாகவே பயப்படுகிறார்கள், அதை ஈடு செய்ய அது எப்போது நிகழும் என்று கணிக்கிறார்கள்.”

நிலநடுக்கத்தின் நிலையாமைக்கு எப்படித் தயாராவது?

நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்று கணிக்க முடியாது என்பதற்காகத் தயாராகாமல் இருக்க வேண்டும் என்பதில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மூன்றாவது வியாழக்கிழமையில், கோடிக்கணக்கான மக்கள், தி கிரேட் ஷேக் அவுட் எனப்படும் உலகின் மிகப்பெரிய நிலநடுக்கப் பாதுகாப்புப் பயிற்சியில் பங்கெடுக்கிறார்கள்.

ஜோன்ஸும் அடங்கிய தெற்கு கலிஃபோர்னியா நிலநடுக்க மையம் என்னும் குழுவால் உருவாக்கப்பட்டது இந்தப் பயிற்சி.

இந்தப் பயிற்சியின் போது கீழே விழு, மூடிக் கொள், தாங்கிப்பிடி என்ற வழிகாட்டுதலில் மக்கள் மண்டியிட்டு, ஒரு மேஜை போன்ற கனமான பொருளின் கீழ் நகர்ந்து ஒரு நிமிடத்துக்குத் தாக்குப்பிடிப்பர்.

இது உருவான நாளில் இருந்து இந்தப் பயிற்சிக்குக் கிடைத்த வரவேற்பால் நிலநடுக்கம் அதிகம் உள்ள இந்தக் கடற்கரைப் பகுதியில் இருந்து மற்ற மாகாணங்களுக்கும், மற்ற நாடுகளுக்கும் கூட இது பரவிவிட்டது.

வெளியில் இருந்தால் மரங்கள், கட்டடங்கள், மின் கம்பிகளுக்கு அருகில் இருக்காமல் திறந்தவெளிக்குச் செல்லும்படி மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். சுனாமி ஏற்பட வாய்ப்பிருப்பதால், கடற்கரை அருகே உள்ள மக்கள், நடுக்கம் நின்றதும் உயரமான பகுதிகளுக்கு வேகமாகச் செல்லப் பயிற்சி எடுக்கின்றனர்.

பட மூலாதாரம், AFP

”இப்போது, அதாவது நில நடுக்கம் ஏற்படாத வேளையில், அழுத்தம் இல்லாத சூழலில், பயிற்சி செய்வதே சிறந்த விஷயம்,” என்கிறார் வாஷிங்டன் மாகாண அவசரநிலை மேலாண்மைப் பிரிவின் நிலநடுக்கம் மற்றும் எரிமலை திட்ட நிறுவனர் ப்ரையன் டெர்புஷ்.

இந்தப் பயிற்சிகள் தாண்டி மேற்குக் கடற்கரை மாகாணவாசிகள், யுஎஸ்ஜிஎஸ்ஸால் நிர்வகிக்கப்படும் ஷேக் அலர்ட் எனப்படும் தொலைபேசி எச்சரிக்கை முறையைப் பயன்படுத்துகின்றனர்.

நிலநடுக்கம் ஏற்படுத்தும் அதிர்வலைகளைக் கண்டுபிடிப்பது இந்த முறை. வருங்காலத்தில் நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்று இதனால் கணிக்க முடியாவிட்டாலும் உயிரை காக்கத் தேவையான சில நொடி எச்சரிக்கையை அவை வழங்குகின்றன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் ஒரு ‘கணிப்பானுக்கு’ மிக நெருக்கமாக இருப்பது இந்த முறைதான்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு