இலங்கை இராணுவத்தினால் நாவற்குழி வில்லு இராணுமுகாமில் காணமல் ஆக்கப்பட்ட 24 தமிழ் இளைஞர்கள் தொடர்பான வழக்கு தீர்ப்பு  எதிர்வரும் 28 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

1996ஆம் ஆண்டு இலங்கை படைகளால் யாழ்ப்பாணம் முழுமையாக கைப்பற்றப்பட்டதான சூழலில் யூலை மாதம் 19 ஆம் திகதி நாவற்குழி தொடக்கம் தனங்கிளப்பு வரையான பகுதிகள் இலங்கை இராணுவத்தினரின் சுற்றிவளைப்பிற்கு உள்ளாகியிருந்தது.அப்போது மறவன்புலோவைச் சேர்ந்த 24 இளைஞர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு நாவற்குழி வில்லு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.

அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் 28 ஆம் திகதி தவணை இடப்பட்டுள்ளது.

இதனிடையே அதேபகுதியை சேர்ந்த செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் 4 புதிய எலும்புக்கூட்டு தொகுதிகள் இன்று புதன்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளது. மனிதப் புதைகுழியில் இன்று பெரிய என்புக்கூடு ஒன்றுடன் சிறு குழந்தை ஒன்றின் என்புக்கூடு கட்டியணைத்தபடி அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இன்றுடன் 115 மனித என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 102 மனித என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.