மனித உரிமை ஆர்வலர்களான லலித் மற்றும் குகன் காணாமல் போனமை தொடர்பிலான ஆட்கொணர்வு வழக்கில் சாட்சியமளிக்க கோத்தபாய முன்வந்துள்ளார்.எனினும் யாழ்ப்பாணத்திலன்றி கொழும்பில் நீதிமன்றில் சாட்சியமளிக்க நிபந்தனை விதித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச  தயாராக இருப்பதாக அவரது சட்டத்தரணி உயர்நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்னாள் ஜனாதிபதி சார்பாக ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் அதனை நீதிமன்றத்தின் கவனத்துக்கு  தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக தனது கட்சிக்காரர் யாழ்ப்பாணத்திற்குப் பதிலாக கொழும்பில் உள்ள ஒரு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

லலித் மற்றும் குகன் காணாமல் போனமை தொடர்பான விசாரணையில் ஆஜராகி சாட்சியமளிக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தது.

மனித உரிமைகள் மற்றும் அரசியல் ஆர்வலர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கோட்டாபய ராஜபக்சஷ பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியபோது 2011 டிசெம்பர் 9, அன்று காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.