ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இரு இந்திய பெண்கள் தற்கொலை – ஆரம்ப விசாரணையில் என்ன தெரிந்தது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதுல்யாவின் கணவர் சதீஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் சைட் இன்ஜினியராக பணிபுரிகிறார் (சித்தரிப்புப் படம்)எழுதியவர், இம்ரான் குரேஷிபதவி, பிபிசி இந்திக்காக18 நிமிடங்களுக்கு முன்னர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில் இந்த மாதத்தில் பதினைந்து நாட்களுக்குள் இரண்டு பெண்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது, கேரளாவில் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

விபன்சிகா மணியன்(32) மற்றும் அதுல்யா ஷேகர்(30) இருவரும் படித்தவர்களாவும், பணிபுரியும் பெண்களாகவும் இருந்தனர்.

அவர்கள் இந்த முடிவை எடுத்த தினத்தில் விபன்சிகா ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவள மேலாளராக இருந்தார், அதுல்யா தனது முதல் பணியில் சேரவிருந்தார்.

இந்த இரு பெண்களும் கேரளாவைச் சேர்ந்தவர்கள், திருமணத்திற்கு பிறகு தங்களது கணவர்களுடன் ஷார்ஜாவில் வசித்து வந்தனர்.

இதற்கிடையில், அவர்கள் வரதட்சணைக்காக கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், குடும்ப வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இந்த பெண்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ஆனால் அங்கு கடுமையான சட்டங்கள் இருப்பதால் இது அசாதாரணமானது என மகளிர் உரிமை செயற்பாட்டாளர்கள் சொல்கிறார்கள்.

புகார் அடிப்படையில் இந்த இரண்டு வழக்குகளிலும் கேரளா காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

இதுவரை தெரியவந்திருப்பது என்ன?

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக விபன்சிகா தனது 16 மாத மகளையும் கொன்றதாக கூறப்படுகிறது.

“விசாரணை முடிவடைந்த பின்னர், இந்த வழக்கில் யாருக்கேனும் தொடர்பிருப்பதாக சந்தேகம் எழுந்தால், அவர்களை கேரளா அழைத்துவருவதற்காக அவர்களுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க நீதிமன்றத்தில் கோரிக்கை வைப்போம்,” என கொல்லம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முகேஷ் ஜிபி பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

விபன்சிகா ஜூலை 8-ஆம் தேதி உயிரிழந்தார், அவரது உடல் வியாழக்கிழமை கொல்லம் கொண்டுவரப்பட்டது. குடும்பத்தினரின் கோரிக்கைப்படி இங்கு ஒரு விசாரணை நடத்தப்பட்டு, உடல் கூறாய்வுக்கு பிறகு இறுதி சடங்கிற்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் சட்டவிசாரணையும், கூறாய்வும் நடத்தப்பட்டது.

அதுல்யா ஜூலை 19ஆம் தேதி உயிரிழந்தார், அவரது உடல் கூறாய்வு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வியாழக்கிழமை நிறைவடைந்தது. ஆனால் அவரது உடல் இன்னமும் கேரளாவுக்கு கொண்டுவரப்படவில்லை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்விபன்சிகா மணியன் விவகாரம்

“அவர் எனது உறவினர். எனது தாய்வழி மாமன் 400 கிராம் தங்கம் மற்றும் ரொக்கத்தை திருமணத்திற்கு வரதட்சணையாக அளித்தார். அவரது கணவர் நிதீஷ் அதிக வரதட்சணை கேட்கவில்லை, ஆனால் தனக்கு குறைவான வரதட்சணை கிடைத்ததாக அவரும் எப்போதும் சொல்வார். அவர் என் சகோதரியை அவமானப்படுத்தினார்,” என விபன்சிகாவின் உறவினரான ஷரண் ஷார்ண்ஸ் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

“நிதீஷ் ஒரு மெக்கானிகல் இன்ஜினியராகவும் திட்ட மேலாளராகவும் இருந்தார், ஆனாலும் அவர் எனது சகோதரியின் சம்பளத்தை பறித்துக்கொண்டார். விபன்சிகா ஒரு உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் மனிதவள மேலாளராக இருந்தார். திருமணம் ஆடம்பரமாக நடைபெறவில்லை எனவும் நிதீஷ் அதிருப்தியில் இருந்தார். திருமணம் 2020 நவம்பரில் கோவிட் உச்சத்தில் இருந்தபோது நடந்தது,” என ஷரண் குற்றம்சாட்டுகிறார்.

“தனது மகளின் அழகு குறைவாக தெரியும்படி அவரது தலைமுடி வெட்டப்பட்டதாகவும், விபன்சிகாவின் கணவர் மாநிறமாக இருந்ததால், அவரது வெண்மையான தோற்றமும் சர்ச்சைக்கு ஒரு காரணமானதாகவும், விபன்சிகா ஒரு தனி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க முடிவு செய்யும் அளவு நிலைமை மோசமடைந்ததாகவும்,” விபன்சிகாவின் தாய் ஷைலஜா காவல்துறையிடம் தெரிவித்தார்.

விபன்சிகாவின் குடும்பத்தினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க நிதீஷின் சகோதரி நீத்து பெரி மறுத்துவிட்டார். “இந்த விவகாரத்தில் நாங்கள் சட்டரீதியான பாதையை பின்பற்றுவோம். நாங்கள் பின்னர் பதிலளிப்போம்,” என அவர் தெரிவித்தார்.

புகாரில், நிதீஷ், நீத்து பெரி, மற்றும் அவரது தந்தை மோகனன் ஆகியோர் பெயரை ஷைலஜா குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினர் இந்திய தண்டனைச் சட்டத்தின் (பிஎன்எஸ்) பிரிவு 85 (கணவர் மற்றும் அவரது உறவினர்களால் பெண்ணுக்கு கொடுமை), பிரிவு 108 (தூண்டுதல்) மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 மற்றும் 4 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கல்ஃப் நியூஸில் வெளியான ஒரு செய்தியின்படி, குழந்தையின் மரணத்திற்கு ‘மூச்சுத் திணறல்’ காரணமாக இருக்கலாம், இது தலையணையால் அழுத்தப்பட்டதால் நிகழ்ந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

அதுல்யா விவகாரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரு பெண்களும் கேரளாவைச் சேர்ந்தவர்கள், திருமணத்திற்குப் பின் ஷார்ஜாவில் தங்கள் கணவர்களுடன் வசித்து வந்தனர் (சித்தரிப்புப் படம்)அதுல்யா விவகாரத்தை பொறுத்தவரை அவரது 10 வயது மகள் தனது தாத்தா-பாட்டியுடம் கொல்லம் மாவட்டத்தில் வசிக்கிறார்.

தனியார் நிறுவனம் ஒன்றில் தள பொறியாளராக பணியாற்றும் அவரது கணவர் சதீஷ், “நானும் தடயவியல் அறிக்கைக்காக காத்திருக்கிறேன். நாங்கள் 2014-ல் திருமணம் செய்துகொண்டோம். அந்த நேரத்தில் என் மாமனார் ஒரு வீடு கட்டி வருவதாகவும், பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் கூறினார். எனக்கு உங்கள் மகள் மட்டும் போதும் என அவரிடம் தெளிவாக கூறினேன், நான் ஒருபோதும் வரதட்சணை கேட்கவில்லை. இப்போது அவர் வெவ்வேறு வீடியோக்களில் எனக்கு எதிராக என்னவேண்டுமானாலும் கூறலாம். ஆனால்அவள் (அதுல்யா) இப்போது இல்லை,” என பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

“கடந்த வரும் நவம்பர் மாதத்தில் அவள் இந்தியாவிற்கு சென்று எனது அனுமதியில்லாமல் கருகலைப்பு செய்துகொண்டாள். நான் வேலைக்கு காலையில் 5:30 மணிக்கு சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு திரும்புவேன். விடுமுறை நாட்களில் கூட அவள் அவளது அறையில்தான் இருப்பாள். அவள் வேலைக்குச் செல்லவேண்டும் என சொன்னாள், அவள் வேலைக்கு செல்லலாம் என நான் கூறினேன்,” என சதீஷ் தெரிவித்தார்.

“அவளுக்கு மாலில் ஒரு கடையில் வேலை கிடைத்தது. அவள் வேலைசெய்ய விரும்பிய கடைக்குகூட நாங்கள் சென்றோம். அங்கு சில பெண்கள் வெளியே வந்து அவர்களுக்கு சம்பளம் ஏதும் கிடைப்பதில்லை என்பதால் அங்கு வேலை செய்யவேண்டாம் என அவளது மனதை மாற்ற முயற்சித்தனர். அடுத்த நாள் எனது மனைவி என்னை தொலைபேசியில் அழைத்து அவள் இங்கேயே பணியாற்ற விரும்புவதாகவும் அப்படி இல்லாவிட்டால் பிரிய விரும்புவதாகவும் கூறினாள். நான் வேலையை எடுத்துக்கொள்ளும்படி தெரிவித்தேன். ஆம், கருகலைப்புக்கு பிறகு அவள் மிகவும் மன உளைச்சலில் இருந்தாள், ” எனவும் சதீஷ் தெரிவித்தார்.

சதீஷின் கூற்றுப்படி, அதுல்யா பிப்ரவரி மாதம் தனது மகள் மற்றும் தாயுடன் ஷார்ஜாவுக்கு திரும்பினார்.

“அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். என்னிடம் போட்டோக்களும், வீடியோக்களும் உள்ளன. அதுல்யாவின் சகோதரி அகிலாவின் திருமணத்திற்காக அவர்களது குடும்பம் வாங்கிய வங்கிக் கடனுக்கான மாதத் தவணையை நான்தான் செலுத்துகிறேன். 2022 நவம்பர் மாதத்தில் நடைபெற்ற அகிலாவின் திருமணத்தில் நான் 40 கிராம் தங்கத்தையும் கொடுத்தேன்,” என்கிறார் சதீஷ்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஆனால் அதுல்யாவின் தந்தை ராஜசேகரன் கூறிவதோ முற்றிலும் வேறாக இருக்கிறது.

“அங்கு என்ன நடந்தது என்ன என்பது எனக்கு தெரியாது. நான் தடயவியல் அறிக்கை மற்றும் ஷார்ஜா காவல்துறையினர் விசாரணைக்காக காத்திருக்கிறேன். அறிக்கை வரட்டும், அதன்பின்னர் நான் பதிலளிக்கிறேன்,” என அவர் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

”உண்மையிலேயே சதீஷ் வங்கிகடனை அடைத்துக்கொண்டிருந்தாரா, அகிலாவின் திருமணத்திற்கு தங்கம் தந்தாரா?” இந்த கேள்விக்கு பதிலளித்த ராஜசேகரன், “வங்கிக்கடனா? அப்படி எதுவும் இல்லை. பத்து வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தபோது சதீஷ் கேட்ட 320 கிராம் தங்கத்தை கொடுத்தோம். எனது இரண்டாவது மகளுக்கு (அகிலா) கொடுக்கப்பட்ட தங்கம் அதுல்யாவுடையது, அவளாகவே தனது தங்கைக்கு அவள் அதை அளித்தாள்,” என தெரிவித்தார்.

“அந்த வீடியோ வெளியான பிறகு, நான் வேலை செய்துகொண்டிருந்த நிறுவனத்தில் எனது வேலை பறிக்கப்பட்டது,” என சதீஷ் சொல்கிறார்.

வரதட்சணை என்பது வெறும் சக்காக மாறிவருகிறதா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சமூக ஆர்வலர்கள் பெண்களின் தற்கொலைகளுக்கு வரதட்சணையை ஒரு முக்கிய காரணமாகக் கருதுகின்றனர் (சித்தரிப்புப் படம்)வேலைக்கு செல்வதால் பெண்களின் பொருளாதார அந்தஸ்து வலுவாக இருந்தாலும் அவர்களுக்கு சம அந்தஸ்து கிடைப்பதில்லை என்பதுடன் இது வரதட்சணை போன்ற பழக்கவழக்கங்களை முடிவுக்கு கொண்டுவருவதில்லை என சமூக செய்ற்பாட்டாளர் ரெஜிதா கோபாலகிருஷணன், மற்றும் புகழ்பெற்ற மனநல மருத்துவர் சி. ஜெ. ஜான் ஆகியோர் நம்புகிறார்கள்.

“சொத்து சமமாக பகிரப்படவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு, வரதட்சணைக்கு முழுமையாக மறுப்பு தெரிவிக்கப்படும்போதுதன் இந்த சூழ்நிலை மாறும். ஆணாதிக்கம் உள்ள சமூகத்தில் இது சாத்தியமில்லை. பெண்கள் தற்கொலைக்கு வரதட்சணை என்பது ஒரு காரணம்தான்,”என மருத்துவர் ஜான் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

“பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருந்தாலும், அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. பெண்கள் திருமணங்களை விட்டு வெளியேறுவதை சமுதாயம் ஏற்றுக்கொள்வதில்லை என்பதுதான் உண்மையான பிரச்னை. அதே பந்தத்தில் தொடர பெற்றோரும் அவர்களுக்கு அழுத்தம் தருகின்றனர்,” என ரெஜிதா கோபாலகிருஷணன் சொல்கிறார்.

“துன்புறுத்தப்படும் ஒரு பெண்ணுக்கு தன் பிறந்த வீட்டிற்கு திரும்பும் வலிமை படிப்படியாக பலவீனமடைகிறது. பாதிக்கப்பட்ட ஒரு மகள் அல்லது சகோதரியை காப்பாற்றுவதற்கு பதிலாக, திருமணம் என்ற உறவை காப்பாற்றுவதற்கு சமூகம் முன்னுரிமை அளிப்பது துரதிருஷ்டவசமானது,” என்றார் மருத்துவர் ஜான்.

“மூத்த மகளின் திருமணத்தில் முறிவு ஏற்பட்டால், இளைய மகளுக்கு நல்ல வரன் கிடைக்காது என்ற கருத்து சமூகத்தில் நிலவுகிறது. இதுபோன்ற சமூக அழுத்தத்தின் மிகவும் துயரமான அம்சம் பெண்கள் தங்கள் குழந்தைகளைக் கூட கொல்கிறார்கள் என்பதுதான். அவர்களுக்கு தங்கள் குடும்பம் அல்லது கணவனின் குடும்பத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதுதான் இதன் பொருள்.”என ரெஜிதா கோபாலகிருஷ்ணன் சொல்கிறார்

பெரும்பாலும் தங்களது துணை ஏன் மன அழுத்தத்தில் இருக்கிறார் அல்லது மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை புரிந்துகொள்ள மக்கள் முயற்சிப்பதில்லை என்றும், பின்னர் உதவி தேடுவதற்கான காலம் கடந்துவிடுகிறது எனவும் மருத்துவர் ஜான் சுட்டிக்காட்டுகிறார்.

” கருக்கலைப்பு பெண்களை மனச்சோர்வை நோக்கி தள்ளக்கூடும். விரும்பிய ஏற்பட்ட கரு கலைய நேர்ந்தால் அது மேலும் தீவிரமான ஒரு சமூக காரணமாகக்கூடும்,” என்கிறார் அவர்.

“நமது சமூகத்தில் வெள்ளைத் தோல் மீது இருக்கும் மோகம், மாநிறமாக இருப்பவர்களின் வாழ்க்கையை மிகவும் கடினமானதாக மாற்றுகிறது. ஒருவருக்கு ஆதரவாக இருக்கவேண்டிய கணவனோ அல்லது அவரது குடும்பமோ தோலின் நிறத்தை பற்றி கேலி செய்தால் பிரச்னை மேலும் தீவிரமடைகிறது,” என்றும் அவர் தெரிவித்தார்.

நீங்களோ அல்லது உங்களின் அன்புக்குரிய நபர்களோ மன அழுத்தத்தில் இருந்தால் அல்லது மனநலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைக் கீழ்கண்ட உதவி எண்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ள இயலும்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044 -24640050 (24 மணிநேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104 (24 மணிநேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண்: 1800-599-0019

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு