பட மூலாதாரம், BBC/Balaramnaidu

படக்குறிப்பு, ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பருவா கடற்கரை அருகே எஸ்எஸ் சில்கா கப்பல் மூழ்கியதுஎழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ் பதவி, பிபிசிக்காக57 நிமிடங்களுக்கு முன்னர்

ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள பருவா கடற்கரையிலிருந்து பார்த்தால், சுமார் 200 மீட்டர் தொலைவில் கடலில் புதைந்திருக்கும் ஒரு தூணின் மேல்பகுதி தெரியும். அந்தத் தூணின் கீழ் நூறு ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய எஸ்.எஸ். சில்கா என்ற கப்பலின் எச்சங்கள் இருக்கின்றன.

பிரிட்டிஷ் இந்தியாவில், British India Steam Navigation Company என்கிற கப்பல் நிறுவனத்தால் மெட்ராஸிலிருந்து (தற்போதைய சென்னை) ரங்கூனுக்கு (இப்போது யாங்கோன், மியான்மர்) இயக்கப்பட்டது.

ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பருவா கடற்கரைக்கு அந்த கப்பல் ஏன் வந்தது? கடலில் கப்பல் மூழ்கும் போது அதில் எவ்வளவு பயணிகள் இருந்தார்கள்? இவ்வளவு பெரிய கப்பல் ஏன் மூழ்கியது? நூறு ஆண்டுகளுக்கும் முன்னர் மூழ்கிய கப்பலை மீட்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லையா?

சமீப காலமாக, அரசு அதிகாரிகளும், ஸ்கூபா டைவர்ஸும் பருவா கடற்கரைக்கு அடிக்கடி வருகை தருவது ஏன்? மூழ்கிய எஸ்எஸ் சில்கா கப்பலை மையமாகக் கொண்டு, பருவா கடற்கரையில் என்ன நடக்கிறது?

இப்படிப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடிக்க, நூறு ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்வோம்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Balaramnaidu

படக்குறிப்பு, எஸ்.எஸ்.சில்கா கப்பல் பருவா கடற்பகுதியில் மூழ்கியது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு துல்லியமாகச் சொன்னால், 107 ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பருவா என்ற மீனவ கிராமத்திற்கு அருகே எஸ்.எஸ். சில்கா கப்பல் மூழ்கியது. அந்தக் காலகட்டத்தில், மக்கள் வேலைவாய்ப்புக்காக யாங்கோன் என்று இப்போது அழைக்கப்படும் அன்றைய ரங்கூனுக்கு (இன்றைய மியான்மரில் அமைந்துள்ளது, முன்பு பர்மா என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது) பயணம் மேற்கொண்டனர்.

“என் தந்தை கூலி வேலைக்காக ரங்கூனுக்குச் செல்வார். அந்தக் கதைகளை அவர் எங்களிடம் சொல்லியிருக்கிறார். 1917ஆம் ஆண்டு பருவா கடற்கரையில் மூழ்கிய சில்கா கப்பல் பற்றியும் அவர் எங்களிடம் தெரிவித்துள்ளார்,” என்று பருவா கிராமத்தைச் சேர்ந்த நாகேஸ்வர ராவ் பிபிசியிடம் கூறினார்.

“இங்கே பருத்தி தொழிற்சாலைகள் இருந்தன. பருத்தி பொருட்கள், மிதியடிகள், கயிறுகள் எனப் பல பொருட்கள் இந்தியாவில் இருந்து கப்பல்கள் மூலம் ரங்கூனுக்கு கொண்டு செல்லப்பட்டன. வேலை தேடி ரங்கூனுக்குச் சென்றவர்களும் அந்தக் கப்பல்களில் பயணம் செய்தனர். என் தந்தையும் அங்கு சென்று திரும்பியவர்,” என்று நாகேஸ்வர ராவ் கூறினார்.

“கப்பல் மூழ்கிய இடத்தில் இருந்த கம்பம் போன்ற அமைப்பைப் பார்ப்பதற்காக நாங்கள் சூரியன் உதிக்கும் நேரத்தில் அங்கு செல்வோம். அந்த நேரத்தில் கடல் பின்வாங்கியதால், கம்பம் தெளிவாகத் தெரிந்தது. இப்போது பல சுற்றுலாப் பயணிகளும் யூடியூபர்களும் வந்து அதைப் பார்க்கின்றனர், அங்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறியவும் வீடியோக்களை எடுக்கிறார்கள்,” என்று நாகேஸ்வர ராவ் பிபிசியிடம் கூறினார்.

பட மூலாதாரம், BBC/Balaramnaidu

படக்குறிப்பு, எஸ்.எஸ். சில்கா கப்பலில் இருந்து படகுகளில் இறங்கும் பயணிகள். கப்பல் மூழ்கிய இடத்தில் ஒரு கம்பம் தெரியும்கப்பல் மூழ்கிய போது நடந்தது என்ன?

பலராமன் நாயுடு முன்னாள் கடற்படை ஊழியர். தற்போது அவர் லிவின் அட்வென்ச்சர்ஸ் என்ற ஸ்கூபா டைவிங் மற்றும் நீர் விளையாட்டு வணிகத்தை நடத்தி வருகிறார்.

1917 ஜூலை மாதத்தில் எஸ்.எஸ். சில்கா கப்பல் மூழ்கியது செய்தித்தாள்களில் முக்கிய செய்தியாக வெளியிடப்பட்டது. அந்தச் செய்தியின் அடிப்படையிலும், கடல்களை ஆராய்ந்த வெளிநாட்டு வரலாற்றாசிரியர் ஜான் காஸ்டெல்லாஸ் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்கூபா டைவர் பலராம் நாயுடுவுக்கு அனுப்பிய மின்னஞ்சலின் அடிப்படையிலும், பலராம் நாயுடு விபத்து குறித்து பிபிசியிடம் தெரிவித்தார்.

பருவா கடற்கரையில் மூழ்கிய எஸ்எஸ் சில்கா கப்பலின் வீடியோக்களை 2019ஆம் ஆண்டு வெளி உலகிற்கு காட்டியவர் இவர்தான்.

அந்தச் சந்தர்ப்பத்தில்தான் ஒரு வெளிநாட்டு வரலாற்றாசிரியர் எஸ்.எஸ். சில்கா கப்பல் விபத்து பற்றிய கூடுதல் விவரங்களை அவருடன் பகிர்ந்து கொண்டார்.

பட மூலாதாரம், Balaramnaidu

படக்குறிப்பு, எஸ்எஸ் சில்கா கப்பல் இந்தியர்கள், ஐரோப்பியர்கள் உட்பட 1600 முதல் 1700 பயணிகளுடன் பயணித்தது. விபத்துக்குப் பிறகு, அவர்கள் மீட்கப்பட்டு படகுகள் மூலம் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்வெளிநாட்டு வரலாற்றாசிரியர் ஜான் காஸ்டெல்லாஸ் பலராம் நாயுடுவுக்கு வழங்கிய விவரங்களின்படி…

“1917 ஜூன் 30ஆம் நாளன்று எஸ்எஸ் சில்கா கப்பல், பல்வேறு சரக்குகளை ஏற்றிக் கொண்டு மெட்ராஸில் இருந்து கிளம்பி பருவா கடற்கரையை அடைந்தது. பருவாவில் இருந்து சில பயணிகள் மற்றும் இந்தப் பகுதியில் தயாரிக்கப்பட்ட பீச் பொருட்களை ஏற்றிக் கொண்டு, ஓடிசாவின் கோபால்பூர் கடற்கரையை நோக்கிப் புறப்பட்டது. அந்த நேரத்தில், கப்பலின் ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்குச் செல்லும் பாதையில் தீ விபத்து ஏற்பட்டது. கப்பலில் தீ விபத்து ஏற்பட்டபோது இந்தியர்களுடன், ஐரோப்பியர்கள் உட்பட 1600 முதல் 1700 பேர் வரை இருந்தனர். தீயை அணைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தபோதிலும், கட்டுக்கடங்காமல் தீ கப்பலின் பல்வேறு இடங்களுக்கும் பரவியது. பயந்துபோன பல பயணிகளில் பலர் கப்பலில் இருந்து தண்ணீரில் குதித்தனர்.”

பட மூலாதாரம், Balaramnaidu

படக்குறிப்பு, எஸ்.எஸ். சில்கா கப்பல் விபத்தில் சிக்கியதாக செய்தி வெளியானது”அவர்களை மீட்பதற்காக பாதுகாப்பு படகுகள் கடலில் இறக்கப்பட்டன. அதே நேரத்தில், பருவாவைச் சேர்ந்த உள்ளூர் மீனவர்கள் தங்கள் படகுகளுடன் விபத்து நடந்த இடத்திற்கு சென்றனர். அவர்கள் 7 முதல் 8 மணி நேரம் முயற்சித்து படகுகள் மூலம் பலரை மீட்டனர். இருப்பினும், சுமார் 80 பேரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. விபத்தில் உயிர் பிழைத்த ஐரோப்பியர்கள் மற்றும் இந்தியர்கள் பருவா ரயில் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கிருந்து, அவர்கள் அனைவரும் ரயிலில் கல்கத்தாவுக்கு அனுப்வி வைக்கப்பட்டனர்,” என்று ஜான் காஸ்டெல்லாஸ் தெரிவித்ததாக பலராம் நாயுடு கூறினார்.

படக்குறிப்பு, சில்கா கப்பலில் ஸ்கூபா டைவர்கள்தீயில் சிக்கி மூழ்கிய கப்பல்

கப்பலில் இருந்த கிட்டத்தட்ட 1,600 பேரைக் காப்பாற்றிய கப்பலின் தலைமை அதிகாரி ஜார்ஜ் மெக்டொனால்ட், தலைமைப் பொறியாளர் ஜேம்ஸ் பிரைமர் மற்றும் சில அதிகாரிகள் ஃபிரடெரிக் வில்கின் மற்றும் கப்ரி அகமது ஆகியோருக்கு வீரத்திற்கான வெள்ளிப் பதக்கத்தை பிரிட்டிஷ் மன்னர் வழங்கினார்.

“தீயில் சிக்கிய எஸ்எஸ் சில்கா படிப்படியாக மூழ்கியது. அது விட்டுச் சென்ற அடையாளம் கடலில் தற்போது தெரியும் கம்பம் மட்டுமே. இருப்பினும், அந்தக் கம்பத்தின் கீழ் கப்பல் இன்னும் அடையாளம் காணக்கூடிய நிலையில் உள்ளது” என்று பலராமன் நாயுடு பிபிசியிடம் தெரிவித்தார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.எஸ்.எஸ். சில்கா கப்பலின் தற்போதைய நிலை என்ன?

பலராம் நாயுடுவின் ஸ்கூபா டைவர்ஸ் குழு, மூழ்கிய எஸ்.எஸ். சில்கா கப்பலைப் பலமுறை பார்வையிட்டது. கப்பல் எப்படி இருந்தது, அங்கு என்ன இருந்தது என்பதை அவர்கள் பிபிசிக்கு விளக்கினர். அவற்றின் வீடியோக்களையும் காண்பித்தனர்.

“கப்பல் மிகப் பெரியதாக இருந்தது. அது 75 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டதாகத் தோன்றியது. கப்பலின் வடிவம் சேதமடையவில்லை. இருப்பினும், நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, கப்பலின் கேபின்கள், குழாய்கள் மற்றும் பிற இயந்திரங்களைச் சுற்றி கடல் தாவரங்கள் வளர்ந்திருந்தன. இந்தக் கப்பலையே பல்வேறு மீன் கூட்டங்கள் வாழ்விடமாக கொண்டுள்ளன. நிறைய பவளப்பாறைகள் இருந்தன. கப்பலைச் சுற்றி மணல் குவிந்திருப்பது போல் இருந்தது,” என்று பலராம் நாயுடு கூறினார்.

பட மூலாதாரம், Balarama Naidu

படக்குறிப்பு, பலராம் நாயுடுவின் ஸ்கூபா டைவர்ஸ் குழு, மூழ்கிய எஸ்.எஸ். சில்கா கப்பலை பலமுறை பார்வையிட்டது”கடலுக்குள் மூழ்கிய கப்பலைப் பார்ப்பது மிகவும் சிலிர்ப்பாக இருக்கிறது. அதனால்தான் ஸ்கூபா டைவிங் மூலம் சுற்றுலாப் பயணிகளை அங்கு அழைத்துச் செல்ல நாங்கள் விரும்புகிறோம். அரசாங்கமும் அதே திசையில் முயற்சிப்பதாகத் தெரிகிறது,” என்று பலராம் நாயுடு கூறினார்.

கப்பல் கரைக்கு அருகில் மூழ்கியதால், அது ஸ்கூபா டைவிங்கிற்கு ஏற்றதாக இருப்பதாக பலராம் நாயுடுவின் குழுவினர் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Balarama Naidu

‘சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக மாறும்’

பருவா கடற்கரையிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில், 7 முதல் 8 மீட்டர் ஆழத்திலும் தற்போது கப்பலின் எச்சங்கள் இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து பார்ப்பதற்கு ஆர்வம் காட்டுவார்கள் என்று கப்பலுக்குச் சென்ற ஸ்கூபா டைவர் ஷெட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.

“அடிப்படை ஸ்கூபா டைவிங் பயிற்சிகளைக் கொடுத்து, சுற்றுலாப் பயணிகளை அங்கு அழைத்துச் செல்லலாம். ஸ்கூபா டைவிங் மூலம் கடல்வாழ் உயிரினங்களைக் காண சுற்றுலாப் பயணிகள் ஏற்கனவே ருஷிகொண்டாவுக்குச் சென்று வருகின்றனர். இது ஒரு பெரிய கப்பல் என்பதால், சர்வதேச சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் திறன் கொண்டது. கப்பல் கடற்கரைக்கு அருகில் மூழ்கியது. எனவே இது ஸ்கூபா டைவிங்கிற்கு ஏற்றது,” என்று ஷெட்டி பிபிசியிடம் கூறினார்.

இங்குள்ள கலங்கரை விளக்கம் பலரையும் ஈர்க்கும் ஓர் இடமாக மாறக்கூடும் என்று மரைன் காவல் துறை எஸ்ஐ ஸ்ரீனிவாச ராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.

“கரையில் இருந்து பார்க்கும் போது கடலில் தெரியும் கம்பத்தைப் பார்க்க பலர் வருகிறார்கள். கடலில் அலைகள் குறையும் போது, கம்பம் மிகத் தெளிவாகத் தெரியும். இங்கே ஒரு கலங்கரை விளக்கமும் உள்ளது. இந்த கடற்கரை தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளது,” என்று பருவா மரைன் காவல் நிலையத்தைச் சேர்ந்த எஸ்.என். ஸ்ரீனிவாச ராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.

சுற்றுலாத் துறையும் பருவா கடற்கரைப் பகுதியில் கவனம் செலுத்தியுள்ளது. சமீபத்தில், பருவா கடற்கரை விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இனிமேல், எஸ்.எஸ். சில்காவை மையமாகக் கொண்டு பருவா கடற்கரையில் சுற்றுலா மேம்படுத்தப்படும். அதேபோல, விசாகப்பட்டினத்தின் ருஷிகொண்டாவைப் போலவே இந்த கடற்கரைக்கும் ‘ப்ளூ ஃப்ளாக் கடற்கரை’ என்ற சான்றிதழ் வழங்கப்படும் என்று மாவட்ட சுற்றுலா அதிகாரி நாராயண ராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.

“அடுத்த இரண்டு ஆண்டுகளில் பருவா கடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். சுற்றுலா மேம்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் சுற்றுலாத் துறைக்கு இங்கு 58 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளார். ஸ்கூபா டைவிங் மூலம் எஸ்எஸ் சில்கா கப்பலுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல முடிந்தால், ஆந்திரப்பிரதேசம் நீர்வழி சுற்றுலாவில் முக்கிய இடத்தைப் பிடிக்கும்” என்று மாவட்ட சுற்றுலா அதிகாரி நாராயண ராவ் கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு