பட மூலாதாரம், Getty Images

30 ஜூலை 2025, 12:39 GMT

புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இரண்டு நாட்களில் அமெரிக்காவின் பரஸ்பர வரி காலக்கெடு முடிவடையும் நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில மாதங்களுக்கு முன்பு பல நாடுகள் மீது வரிகளை அறிவித்திருந்தார். ஆனால் பேச்சுவார்த்தைக்கு அனுமதிக்க அதை நிறுத்தி வைத்தார்.

இந்தநிலையில் ட்ரூத் சோஷியலில் அவர் வெளியிட்ட பதிவில், ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரியை விதிக்கும் என்று கூறியுள்ளார்.

”இந்தியா நமது நண்பனாக இருந்தாலும், அவர்களின் வரிகள் மிக அதிகமாக உள்ளதால், பல ஆண்டுகளாக நாம் அவர்களுடன் ஒப்பீட்டளவில் குறைவாகவே வர்த்தகம் செய்து வருகிறோம்.” என அவர் தெரிவித்துள்ளார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

”அவர்கள் (இந்தியா) எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு கடுமையான வர்த்தக தடைகளைக் கொண்டுள்ளனர். அவர்கள் எப்போதும் தங்கள் ராணுவ உபகரணங்களில் பெரும்பகுதியை ரஷ்யாவிடமிருந்து வாங்குகின்றனர்.

யுக்ரேனில் போரை நிறுத்த ரஷ்யா முன்வரவேண்டும் என அனைவரும் விரும்பும் நேரத்தில், சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவிடம் இருந்து மிகப்பெரிய அளவில் எரிசக்தியை வாங்குபவராகவும் இந்தியா உள்ளது. எனவே இந்தியா ஆகஸ்ட் முதல் 25% வரியை செலுத்தும்,” என அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஆனால் முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இது வியட்நாம், இந்தோனீசியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மீது அமெரிக்காவால் விதிக்கப்பட்ட வரிகளை விட அதிகம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.முன்னரே சமிக்ஞை கொடுத்த டிரம்ப்

2024 ஆம் ஆண்டில், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே 129 பில்லியன் டாலர் வர்த்தகம் நடந்தது, அதில் இந்தியா சுமார் 46 பில்லியன் டாலர் வர்த்தக உபரியை பெற்றிருந்தது.

பல மாதங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று தெரிவித்தார்.

ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், பிரதமர் நரேந்திர மோதியை தனது நண்பர் என்று குறிப்பிட்டார்.

இந்தியா அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து வருவதாகக் கூறி, இந்தியாவை டிரம்ப் பாராட்டினார்.

ஆனால், “வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்கா மீது இந்தியா அதிக வரிகளை விதித்துள்ளது. ஆனால் இப்போது நான் பதவியில் இருப்பதால், இது இனி தொடர முடியாது” என்றும் டிரம்ப் கூறினார்.

டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகள்

ஏப்ரல் மாதத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது 26 சதவீத வரியை அறிவித்திருந்தார்.

அப்போது, இந்தியா அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும் என்று டிரம்ப் கூறியிருந்தார்.

முன்னதாக வரி விதிப்புக்கான காலக்கெடு ஜூலை 9 ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் பின்னர் அது ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன, ஆனால் சில வேறுபாடுகள் உள்ளன.

இந்தியா இன்னும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை (சோயாபீன்ஸ் மற்றும் சோளம் போன்றவை) இறக்குமதி செய்வதை எதிர்க்கிறது என்றும், உள்நாட்டு பால் சந்தையை வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் திறக்க விரும்பவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் மாதத்தில், ‘பரஸ்பர வரிகள்’ என்று பெயரிடப்பட்ட இந்தியா உட்பட 100 -க்கணக்கான நாடுகள் மீது அமெரிக்கா வரிகளை அறிவித்தது. இது தவிர, 10 சதவீத அடிப்படை கட்டணமும் விதிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

பரஸ்பர வரி என்றால் என்ன?

பிற நாடுகளிலிருந்து வாங்கப்படும் பொருட்களுக்கு ஒரு நாடு வரி விதிக்கும். பொதுவாக வெளிநாட்டுப் போட்டியிலிருந்து உள்நாட்டில் சில துறைகளை பாதுகாக்க நாடுகள் இறக்குமதி பொருளுக்கு அதிக வரிகளை விதிக்கின்றன.

10 சதவீத அடிப்படை வரி என்பது பத்து ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளுக்கு ஒரு ரூபாய் வரி விதிக்கப்படும், இதனால் இறக்குமதியாளரின் மொத்த செலவு 11 ரூபாயாக அதிகரிக்கும்.

அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வெளிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், இந்த வரியை இந்திய அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும்.

நிறுவனங்கள் இந்த கூடுதல் செலவில் ஒருபகுதியை அல்லது மொத்த வரியையும், பொருளின் அடக்கவிலையுடன் சேர்ப்பார்கள். இது தவிர, விலை அதிகமாக இருக்கும் என்றால், இறக்குமதி செய்வதை குறைத்துக் கொள்ளவும் முடிவு செய்யலாம்.

ஒரு நாடு, அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதித்தால், அந்த நாட்டிலிருந்து அமெரிக்கா வாங்கும் பொருட்களுக்கு அதிக வரிகளை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.

டிரம்ப் இந்த வரியை ‘பரஸ்பர வரி’ என்று அழைக்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு