வெள்ளை முட்டையைவிட பழுப்பு நிற முட்டையில்தான் அதிக ஊட்டச்சத்து உள்ளதா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெரிய முட்டையில் 90 கலோரி மற்றும் 8 கிராம் புரதம் உள்ளது, அதேசமயம் சிறிய முட்டையில் 60 கலோரி மற்றும் 6 கிராம் புரதம் மட்டுமே உள்ளதாக அமெரிக்க வேளாண்துறை குறிப்பிடுகிறது.எழுதியவர், அன்ஷுல் சிங்பதவி, பிபிசி செய்தியாளர்29 ஜூலை 2025, 12:19 GMT

புதுப்பிக்கப்பட்டது 49 நிமிடங்களுக்கு முன்னர்

வெள்ளை நிற முட்டையா அல்லது பழுப்பு நிற முட்டையா? நிச்சயமாக இந்த விவாதத்தை கேட்டிருப்பீர்கள்.

இரண்டையும் ஒப்பிடுகையில் எந்த முட்டையில் அதிக ஊட்டச்சத்து உள்ளது என்ற கேள்வியும் அவ்வப்போது எழுகிறது.

பழுப்பு நிற முட்டையே இயற்கையானது என்றும் அதனால் இதில் அதிக ஊட்டச்சத்து இருக்கும் என்றும் பலர் நம்புகின்றனர். இதை அதிக ஆரோக்கியம் தரக்கூடியதாக பார்க்கின்றனர். ஆனால் இது உண்மையா?

முட்டையின் நிறம் எதை சார்ந்தது?

வெள்ளை மற்றும் பழுப்பு நிற முட்டைகள் எளிதில் கடைகளில் கிடைக்கக் கூடியவைதான். ஆனால் இந்த நிற வேறுபாடு ஏன்? இதனால் ஊட்டச்சத்தில் மாறுபாடு உள்ளதா?

முட்டை ஓட்டின் நிறம் கோழியின் இனத்தை பொறுத்ததே என்கின்றனர் வல்லுநர்கள்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

“பொதுவாக வெள்ளை நிற இறகுகள் மற்றும் காதுகள் கொண்ட கோழி வெள்ளை நிறத்தில் முட்டையிடும். அதே சமயம் சிவப்பு நிற இறகுகள் மற்றும் காதுகள் கொண்ட கோழி பழுப்பு நிற முட்டையிடும்” என ஃபுட் அண்ட் வைன் (Food and Wine) என்ற அமெரிக்க இதழின் செய்தி கூறுகிறது

“கோழி எந்த இனத்தை சேர்ந்தது என்பதைப் பொறுத்துதான் முட்டை ஓடுகளின் நிறம் தீர்மானிக்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க மரபியல் சார்ந்தது” என்கிறார் மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் கோழி வளர்ப்பு நிபுணர் மற்றும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயனுள்ள அறிவுரைகள் மற்றும் தகவல்களை வழங்கும் நிபுணரான டாக்டர் ஜொனாதன் மொய்ல்.

“பெரும்பாலான முட்டைகளின் அடிப்படை நிறம் வெள்ளையாகதான் இருக்கும். ஆனால் கோழி அதை ஈனும்போது, ஒரு சில இனங்கள் அதன் மீது நிறமியை அடுக்குகின்றன. இது முட்டை ஓட்டின் நிறத்தை மாற்றுகிறது.” என்றார் யு.சி டேவிஸ் பல்கலைக்கழக கோழி வளர்ப்பு ஆராய்ச்சியாளர் டாக்டர் ரிச்சர்ட் பிளாட்ச்ஃபோர்ட்.

அதாவது முட்டையின் வெளிப்புற நிறத்தை கோழியின் மரபணு பண்புகளே தீர்மானிக்கிறது. இது தவிர மேலும் சில கோழிகள் நீல மற்றும் பச்சை நிறங்களிலும் முட்டையிடுகின்றன. இதற்கும் அவற்றின் மரபணு அமைப்பே காரணம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பழுப்பு நிற முட்டைகள் இயற்கையானவை என்றும், அதனால் வெள்ளை நிற முட்டைகளை விட அதிக சத்தானவை என்றும் பலர் நம்புகிறார்கள்.பழுப்பு நிற முட்டைகள் அதிக ஊட்டச்சத்து கொண்டதா?

வெள்ளை மற்றும் பழுப்பு நிற முட்டைகளுக்கு இடையே ஊட்டச்சத்து அளவில் எந்த குறிப்பிடத்தக்க வித்தியாசமும் இல்லை என்கிறது அமெரிக்க வேளாண்துறை

இரண்டு நிற முட்டைகளிலும் ஒரே அளவிலான புரதச் சத்து, வைட்டமின் (A, D, B12) மற்றும் மினரல்ஸ்தான் உள்ளன.

இருப்பினும், கூண்டிற்குள் அடைத்து வளர்க்காமல் சுதந்திரமாக சுற்றித் திரியும் கோழிகள் இடும் முட்டைகள் மற்றும் ஒமேகா-3 செறிவூட்டப்பட்ட முட்டைகளில் அதிக அளவு வைட்டமின் D மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இருக்கலாம் என மருத்துவ பிரச்னைகள் தொடர்பான தகவல்கள் வழங்கும் ‘மெடிக்கல் நியூஸ் டுடே’ வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முட்டையின் நிறத்தை விட அதன் அளவைப் பொறுத்துதான் ஊட்டச்சத்து வேறுபடுகிறது என அமெரிக்க வேளாண்துறை கூறுகிறது.

பெரிய முட்டையில் 90 கலோரி மற்றும் 8 கிராம் புரதம் உள்ளது, அதேசமயம் சிறிய முட்டையில் 60 கலோரி மற்றும் 6 கிராம் புரதம் மட்டுமே உள்ளதாக அது குறிப்பிடுகிறது.

“சுதந்திரமாக சுற்றித் திரியும் கோழிகள் மீது அதிக சூரிய ஒளி படுவதால், இவை ஈனும் முட்டைகளில் வைட்டமின் D அதிகம் இருக்கும்” என அமெரிக்க நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பழுப்பு நிற முட்டைகள் அதிக விலைக்கு விற்கப்படுவது ஏன்?

இரண்டு முட்டைகளிலும் ஒரே அளவிலான ஊட்டச்சத்துகளே இருக்கிறது என்றால், ஏன் பழுப்பு நிற முட்டை வெள்ளை நிற முட்டையை விட விலை அதிகமாக உள்ளது?

இதற்கு உணவியல் நிபுணர் அனு அகர்வால் 2 காரணங்களை முன்வைக்கிறார்.

“வெள்ளை நிற முட்டைகளை விட பழுப்பு நிற முட்டைகள் கடைகளில் அதிகம் கிடைக்காதது முதல் காரணம். பழுப்பு நிற முட்டைகளை ஈனும் கோழிகள் பெரிதாக இருப்பதால் அதற்கு நிறைய உணவுகள் தேவைப்படும். அதாவது இதன் உற்பத்தி செலவு காரணமாக விலையும் அதிகமாக உள்ளது” என்கிறார் அவர்.

பழுப்பு நிற முட்டையிடும் கோழிகள் அதிக உணவுகள் உண்பதால் இதன் விலைகள் அதிகமாக இருக்கிறது என்பதை அமெரிக்க வேளாண்துறையும் ஒப்புக்கொள்கிறது.

இதன் சுவையிலும் வேறுபாடு உள்ளதா?

சிலர் பழுப்பு நிற முட்டையின் சுவையில் வித்தியாசம் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் பலரும் வெள்ளை நிற முட்டையையே விரும்புகின்றனர்.

‘ஊட்டச்சத்தை போலவே சுவையிலும் இரு முட்டைகளுக்கு இடையே எந்த வேறுபாடும் கிடையாது. அதற்காக எல்லா முட்டைகளுமே ஒரே மாதிரியான சுவை கொண்டவை என்று பொருள் கிடையாது’ என அமெரிக்க ஊடகமான ஹெல்த்லைனில் வெளியான செய்தி கூறுகிறது

“முட்டையின் சுவை, கோழியின் இனம், அது என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்கிறது, முட்டை எந்தளவுக்கு புதியது, சமைக்கும் முறை ஆகியவற்றை பொறுத்தது. மேலும் வீட்டில் வளர்க்கப்படும் கோழி மற்றும் வழக்கமாக வளர்க்கப்படும் கோழிகள் சாப்பிடும் உணவுகளில் வித்தியாசம் இருப்பதால், இதுவும் முட்டையின் சுவையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்” எனக் கூறுகிறது அந்த செய்தி.

பட மூலாதாரம், Getty Images

எந்த முட்டையை வாங்கலாம்?

வெள்ளை நிற முட்டையை விட பழுப்பு நிற முட்டைதான் இயற்கையானது என பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர்.

ஆனால், அமெரிக்க முட்டை வாரியத்தில் தகவல் தொடர்பு இயக்குநராக உள்ள மார்க் டெர்ஸ்னர் இந்த கூற்றை மறுக்கிறார்.

“பழுப்பு நிற முட்டைகள் ஆரோக்கியமானதாகவும், இயற்கையானதாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் இது உண்மையல்ல. அனைத்து முட்டைகளும் ஆரோக்கியமானவைதான். இரண்டு நிற முட்டைகளிலும் இயக்கையானவை(ஆன்டிபயாடிக் செலுத்தப்படாத, இயற்கை உணவு கொடுக்கப்பட்ட கோழிகளில் இருந்து வருவது) இருக்கலாம். அதேசமயம் பழுப்பு நிற முட்டைகள் அனைத்துமே இயக்கையானது என நினைப்பது தவறு” எனக் கூறுகிறார்.

மொத்தத்தில் முட்டையின் நிறத்தில் கவனம் செலுத்துவதை விட, மக்கள் அதன் தரம் மற்றும் அது எந்தளவிற்கு புதியது என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும். இதைத்தவிர முட்டை வாங்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்?

சுத்தமான மற்றும் ஓடுகள் உடையாத முட்டைகளை தேர்வு செய்ய வேண்டும். காலாவதியான முட்டைகளை வாங்க வேண்டாம்.உங்களின் தேவை மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ப சரியான முட்டையின் அளவை தேர்ந்தெடுக்க வேண்டும்.முட்டையை வாங்கிய கையோடு அதை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். முட்டை எங்கிருந்து வருகிறது, அவை எந்தளவிற்கு புதிதாக உள்ளது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு