யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக் ரொக் பிரபலங்களில் ஒருவரான  இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்க,  நகைகளை களவாடிய யுவதி, யுவதிக்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி ஆகிய மூவரையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ரிக் ரொக் சமூக வலைத்தளங்களில் தனது காணொளிகளை பதிவேற்றி பிரபலமானவராக தன்னை காட்டிக்கொண்டு வந்துள்ளார்.  குறித்த இளைஞனுடன் ரிக் ரொக் மூலம் அறிமுகமான சாவகச்சேரி பகுதியை சேர்ந்த யுவதி , அவரை காதலித்து வந்துள்ளார்.

அந்நிலையில் தனது காதலனுக்கு , அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்றினை கொள்வனவு செய்வதற்காகவும் , காதலன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காவும் , தனது வீட்டில் இருந்து சுமார் 19 பவுண் நகையை களவெடுத்து , அதனை காதலனிடம் கொடுத்துள்ளார்.

வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனமை தொடர்பில், சாவகச்சேரி  காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் , யுவதி மீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, வீட்டில் இருந்த நகைகளை தான் களவெடுத்து காதலனுக்கு வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

யுவதியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் , காதலனை கைது செய்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.  அதன் அடிப்படையில் வீட்டில் நகைகளை களவெடுத்த யுவதி , அவரது காதலன் , யுவதி வீட்டில்  நகைகளை  களவெடுப்பதற்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி , நகைகளை விற்க உதவியவர்கள் , நகைகளை வாங்கியவர்கள் என ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஏழு நபர்களையும்  காவல்  நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில்   முற்படுத்திய போது, நகைகளை திருடிய யுவதி, அவரது காதலன் மற்றும் திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி ஆகிய மூவரையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் ஏனைய நால்வரையும் பிணையில் செல்ல அனுமதித்தார்.

அதேவேளை , திருடப்பட்ட நகைகளில் ஒரு தொகையும் , நகைகளை விற்று வாங்கிய  அதிநவீன மோட்டார் சைக்கிள் என்பவற்றை  காவல்துறையினர்  மீட்டு , சான்று பொருளாக , சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தியதை அடுத்து , அவை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.