யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்கரையோரப் பகுதிகளை  சுத்தப்படுத்தும்  முகமாக இராணுவத்தினால் கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.  ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கமைய இராணுவ தளபதியின் வழிகாட்டலில் யாழ் மாவட்டம் முழுவதும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  கரையோர பகுதிகளை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் பிரதான நிகழ்வு இராணுவத்தின் 51வது படைப்பிரிவின் ஏற்பாட்டில்  யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்கரை பகுதியில் ஆரம்பமானது.

யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படை தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக்க குமார, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், 51 வது படைப்பிரிவின் தளபதி
மேஜர் ஜெனரல் எம்.பி.என்.ஏ.முத்துமால, யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சா.சுதர்சன், நல்லூர் பிரதேச செயலாளர் யசோதா உதயகுமார், யாழ் மாநகர சபை பிரதி முதல்வர் இ.தயாளன், யாழ் மாநகர சபை ஆணையாளர் கிருஷ்ணேந்திரன் உள்ளிட்ட பலரின் பங்கேற்புடன் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பமானது.

இராணுவம் உள்ளிட்ட முப்படையினர், காவல்துறையினா் , யாழ்ப்பாண மாவட்ட செயலக, யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், யாழ் மாநகர சபை, இளைஞர்கள்,
பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

‘ இதேவேளை சுத்தமான கடற்கரை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலமாகும் , எனும் தொனிப்பொருளில் மன்னார் தள்ளாடி 54 ஆவது இராணுவ படைப்பிரிவு ஏற்பாடு செய்த கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (29) மன்னாரில் உள்ள பல்வேறு கடற்கரை பகுதியில் இடம்பெற்றது.

மன்னார் வங்காலை,கீரி,சௌத்பார்,தலைமன்னார் ,முத்தரிப்புத்துறை ஆகிய பகுதிகளில் உள்ள கடற்கரையோரங்கள் தூய்மையாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இராணுவத்துடன் சர்வமத தலைவர்கள்,கடற்படையினர்,கிராம மக்கள்,திணைக்கள தலைவர்கள்,உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உப தலைவர்கள்,உறுப்பினர்கள்,உள்ளுராட்சி மன்ற பணியாளர்களும் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.