யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் வீடொன்றில் இருந்து  முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து சாந்தலிங்கம்  (வயது 54) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சடலமாக மீட்கப்பட்டவரும் , அவரது சகோதரியும் குறித்த வீட்டில் வசித்து வந்த நிலையில் , தனது சகோதரன் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சகோதரி அறிவித்ததை அடுத்து , பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் சகோதரியிடம் மேற்கொண்ட விசாரணையில், 

தான் சாத்திரம் மற்றும்குறி சொல்லி வருவதாகவும் , அதற்காக பலர் தன் வீடு தேடி வருவது வழமை என்றும் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு வேளை பருத்தித்துறை பகுதியில் இருந்து வருவதாக தம்மை அடையாளப்படுத்திய மூன்று நபர்கள் வீட்டுக்கு வந்ததாகவும் , அவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் கேட்ட வேளை தண்ணீர் எடுக்க சென்ற போது என் பின்னால் வந்தவர்கள் என்னை வீட்டினுள் கட்டி போட்டனர். நான் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் சுயமாகவே என் கட்டுக்களை அவிழ்த்து வீட்டின் வெளியே வந்த போது, எனது சகோதரன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார் என பொலிஸாரிடம் கூறியுள்ளார். 

சகோதரியை பொலிஸார் தமது பாதுகாப்பின் கீழ் வைத்து , தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.