பஹல்காம்: ‘பயங்கரவாதிகள்’ கொல்லப்பட்டதாக கூறிய அமித் ஷா – எதிர்கட்சிகள் விடாமல் எழுப்பிய கேள்வி என்ன?

பட மூலாதாரம், SANSAD TV

41 நிமிடங்களுக்கு முன்னர்

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் மூன்று பேர் ‘ஆபரேஷன் மகாதேவ்’ மூலம் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

பஹல்காம் தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து மக்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாம் நாளாக விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமித் ஷா இதனை தெரிவித்தார்.

இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பஹல்காம் தாக்குதல் ஏன், எப்படி நடந்தது என்று அரசு பதில் சொல்ல வேண்டும் என்று கோரினார்கள்.

“பஹல்காம் பயங்கரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர்” – அமித் ஷா

பட மூலாதாரம், SANSAD TV

படக்குறிப்பு, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாமத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அவையில் பேசிய போது, “பைசரன் பள்ளத்தாக்கில் (பஹல்காம்) நமது மக்களை கொன்ற மூன்று யங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று இந்த அவையில் இருப்பவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்” என்றார்.

இந்த நடவடிக்கை குறித்து அமித் ஷா மேலும் விளக்கம் அளித்த போது, “ஆபரேஷன் மகாதேவ் 22 மே, 2025 அன்று தொடங்கப்பட்டது. பஹல்காமில் மக்கள் கொல்லப்பட்ட அதே இரவில், ஜம்மு காஷ்மீரில் ஒரு பாதுகாப்புக் கூட்டம் நடைபெற்றது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

தாக்குதல் மதியம் 1 மணிக்கு நடந்தது, நான் 5:30 மணிக்கு ஸ்ரீநகருக்கு சென்றுவிட்டேன். ஏப்ரல் 23 அன்று ஒரு பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முதல் முடிவு, கொடூரமான கொலையாளிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடாது என்பதுதான்.

மே 22 அன்று, தன்சிகம் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக உளவுத் தகவல் கிடைத்தது. மே முதல் ஜூலை 22 வரை, இந்த தகவலை உறுதிப்படுத்த தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன” என்றார்.

திங்களன்று நடந்த ‘ஆபரேஷன் மகாதேவ்’ பற்றிய தகவல்களையும் தான் வழங்க விரும்புவதாக கூறிய அமித் ஷா, “நேற்று (திங்கட்கிழமை), ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் காவல்துறையின் கூட்டு நடவடிக்கை மூலமாக பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் கொல்லப்பட்ட சுலேமான் லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதியாக இருந்தார், அவர் பஹல்காம் மற்றும் காகங்கீர் தாக்குதல்களில் ஈடுபட்டவர். மற்ற இருவரான ஆப்கனும் ஜிப்ரானும் லஷ்கர்-இ-தொய்பாவின் முதல்நிலை பயங்கரவாதிகள் ஆவர்.” என்றார்.

மேலும், “நாங்கள் அவசரப்படவில்லை. பயங்கரவாதிகள் தாக்கிய இடத்தில் இருந்து மீட்கப்பட்ட தோட்டாக்களின் தடயவியல் அறிக்கையை நாங்கள் ஏற்கெனவே தயாரித்திருந்தோம். நேற்று இந்த மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டபோது, அவர்களின் மூன்று துப்பாக்கிகளும் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட தோட்டாக்கள் இந்த துப்பாக்கிகளிலிருந்து வந்தவை.

இந்தச் செய்தியைக் கேட்கும்போது, ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் (எதிர்க்கட்சியினர்) பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதில் மகிழ்ச்சியடையவில்லை. பயங்கரவாதிகளின் மதத்தைப் பார்த்து வருத்தப்பட வேண்டாம்.

1,055 பேரிடம் 3,000 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் பயங்கரவாதிகள் எப்படி இருப்பார்கள் என்பது வரையப்பட்டது.

தேடுதலின் போது, பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது காவலில் உள்ளனர்.” என அமித் ஷா தெரிவித்தார்.

பாதுகாப்புக்கு ஏன் யாரும் இல்லை? -பிரியங்கா காந்தி

பட மூலாதாரம், SANSAD TV

படக்குறிப்பு, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்திகாங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி, ”பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது குறித்து அரசு பெருமைப்படுகிறது, ஆனால் இந்த தாக்குதல் ஏன் முதலில் நடைபெற்றது என்று ஒரு முறை கூட அரசு கூறவில்லை” என்றார்.

“நேற்று பாதுகாப்பு அமைச்சர் ஒரு மணி நேரம் பேசினார், அப்போது பல விசயங்களை பேசினார். ஆனால் ஒரு விசயத்தை பேசவில்லை. ஏப்ரல் 22, 2025 அன்று 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் – ஏன் எப்படி நடந்தது? இந்த அரசு எப்போதும் கேள்விகளிலிருந்து தப்பிக்க முயல்கிறது.” என்றார்.

கடந்த சில காலமாகவே காஷ்மீரில் தீவிரவாதம் ஒழிந்து விட்டது, அமைதி திரும்பி விட்டது என்று அரசு பிரசாரம் செய்ததாக கூறிய அவர், “பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட போது ஏன் பாதுகாப்பு படையினர் யாரும் இல்லை? அரசை நம்பி தானே மக்கள் அங்கு சென்றனர். இந்த நாட்டின் பாதுகாப்பு, உள்துறை அமைச்சரின் பொறுப்பு இல்லையா, பாதுகாப்பு அமைச்சரின் பொறுப்பு இல்லையா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

“தலைமைத்துவம் என்பது பாராட்டு எடுத்துக் கொள்வது மட்டுமல்ல, ஆனால் பொறுப்புகள் எடுத்துக் கொள்வதும்தான். நமது நாட்டின் வரலாற்றில் முதல் முறை ஒரு சண்டை திடீரென நிறுத்தப்பட்டது, அதன் முடிவு அமெரிக்க அதிபரால் அறிவிக்கப்படுகிறது” என்று அவர் பிரியங்கா காந்தி பேசினார்.

‘போரை நிறுத்தியதாக கூறிய டிரம்பை மறுக்காதது ஏன்?’ – கனிமொழி

பட மூலாதாரம், SANSAD TV

படக்குறிப்பு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக எம்.பி. கனிமொழி, “பயங்கரவாதத்தால் இறப்பவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவதில்லை, அவர்களின் வம்சமே பாதிக்கப்படுகிறது. இந்த நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு அரசுதான் பொறுப்பு. அவர்களை காப்பாற்றுவதில் இருந்து அரசு ஏன் தவறிவிட்டது? பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு புலனாய்வு அமைப்புகள் என்ன செய்துகொண்டிருந்தன என்பதை அறிய விரும்புகிறேன்.” என கனிமொழி தெரிவித்தார்.

எந்த விதமான பாதுகாப்பு இந்திய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என கனிமொழி கேள்வியெழுப்பினார். பஹல்காம் தாக்குதலால் அங்கு சுற்றுலாவை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய கனிமொழி, “இந்தியா – பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று 26 முறை கூறிவிட்டார் டிரம்ப். அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்தை இந்தியா நேரடியாக மறுக்காதது ஏன்? இதுதான் உங்கள் வெளியுறவு கொள்கையா? பாகிஸ்தான் நிலைப்பாட்டுக்குகூட 2 நாடுகள் ஆதரவு தெரிவித்துவிட்டன. ஆனால் இந்தியாவுக்கு எந்த நாடும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்தியாவின் அண்டைநாடு கூட ஆதரவு தெரிவிக்கவில்லை; இந்தியாவுக்கு ஒரு நாடுகூட நண்பர் இல்லையா?” என்றார்

‘பிரிவு 370-ஐ நீக்கியதால் அமைதி திரும்பியதா?’ – திருமாவளவன்

பட மூலாதாரம், SANSAD TV

படக்குறிப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன்விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் இந்த விவகாரம் குறித்து மக்களவையில் பேசுகையில், ”பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு என்ன இழப்பீடு வழங்கியது, வேலை வாய்ப்பு வழங்கியதா என்ற விவரம் தெரியவில்லை” என்றார்.

மேலும், ”படுகொலையை தடுத்து இருந்தால் பெருமை படலாம், பாராட்டலாம். 26 பேர் உயிரிழந்துவிட்டார்கள், திருப்பி தாக்கிவிட்டோம் என்று பெருமையாக பேசுகிறோம். இந்தியா பாகிஸ்தானுடன் ஒப்பிடும் போது மிக வலிமையான நாடு. ஆனால் இந்தியாவுக்குள் மிக இலகுவாக நுழைந்து தாக்க முடியும் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. இது நாட்டின் பாதுகாப்புக்கு விடப்பட்ட சவால். உளவுத்துறை, பாதுகாப்புத்துறை, ஆட்சி நிர்வாகத்தின் தோல்வி என்பதை சுயவிமர்சனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். காஷ்மீர் நிலைபாடு தோல்வி அடைந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. அரசியல் சாசன சட்டம் 370 நீக்கப்பட்டால் காஷ்மீரில் அமைதி நிலவும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த சம்பவம் எப்படி நடந்தது? பாதுகாப்புப் படை வீரர்கள் எங்கே இருந்தார்கள்? இது மிகப்பெரிய அளவில் சந்தேகத்தை எழுப்புகிறது?” என்று பேசினார்.

ஆ.ராசா பேசியது என்ன?

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசுகையில், ” அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவிக்கிறார், ஒரு இந்தியனாக நான் வெட்கப்படுகிறேன். மே 9ம் தேதி அமெரிக்காவின் துணை அதிபர் ஜே டி வான்ஸ் , இந்திய பிரதமரை அழைத்து பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தப் போகிறதென கூறியதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகிறார். நீங்கள் தூங்குகிறீர்களா? வெட்கமாக இல்லையா? உங்களுக்கு ராணுவம் உள்ளது, உளவுத்துறை உள்ளது? என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள்?

பஹல்காம் தாக்குதல் உளவுத்துறையின் தோல்வி, நிர்வாகத்திறனின் தோல்வி. மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை. கார்கில் போர் நடந்த போது எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் ஆலோசிக்கப்பட்டார்கள். போருக்கு பிறகு ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையை நாடாளுமன்றம் விவாதித்தது. ஆனால் நீங்கள் நாடாளுமன்றத்தை ஒதுக்கிவிட்டீர்கள்.

இந்தியாவுக்கு பல நட்பு நாடுகள் உள்ளன என்று கூறுகிறீர்கள், ஆனால், தீவிரவாதத்தை கட்டுப்படுத்த என்று கூறி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் உறுப்பினராக முடிகிறது. இது உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு