‘தந்திரமாக பேசி அழைத்துச் சென்றான்’ – மென்பொறியாளர் ஆணவக்கொலையில் என்ன நடந்தது?

படக்குறிப்பு, கொலையுண்ட மென்பொறியாளர் கவின் செல்வ கணேஷூம், ஆறுமுகமங்கலத்தில் அவரது வீட்டு முன் கூடியுள்ள உறவினர்களும்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நெல்லை பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் மென்பொறியாளர் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞரை அவரது தாயின் கண் முன்னே பெண்ணின் சகோதரர் கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட அவர் காவல் நிலையத்தில் ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்துள்ளார்.

காவல் சார்பு ஆய்வாளர்களான பெண்ணின் பெற்றோர் மீதும் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. அவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி கொலையுண்ட இளைஞரின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோரும் குடும்பத்தினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னணி

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் – தமிழ் செல்வி தம்பதியரின் மகன் கவின் செல்வ கணேஷ்(26). இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்த சரவணன் – கிருஷ்ணகுமாரி தம்பதியின் மகளை காதலித்து வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சரவணனும், கிருஷ்ணகுமாரியும் மணிமுத்தாறு பட்டாலியன் காவல் சார்பு ஆய்வாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களது குடும்பம் இதற்கு முன்பு தூத்துக்குடியில் இருந்தபோது அவரது மகளும் கவின் செல்வ கணேஷும் ஒரே பள்ளியில் படித்ததால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, அதுவே பின்னாளில் காதலாக மாறியுள்ளதாக காவல்துறை கூறுகிறது. காவல் சார்பு ஆய்வாளர் தம்பதியருக்கு சுர்ஜித் (24) என்ற மகனும் இருக்கிறார்.

படக்குறிப்பு, சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை பார்த்துவந்தார் கவின் செல்வ கணேஷ் என்ன நடந்தது?

கொலை தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது:

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

கவின் செல்வ கணேஷ் சென்னையில் மென்பொறியாளராக வேலை பார்த்து வந்த நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். உடல் நலமின்றி இருந்த அவரது தாத்தாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு சித்த மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் கவின் அழைத்து வந்துள்ளார்.

கவின் பாளையங்கோட்டை வந்திருந்ததை அறிந்த அவரது காதலியின் சகோதரரான சுர்ஜித் அந்த மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். கவினை சுர்ஜித் அழைத்துப் பேசிய போது ஏற்பட்ட வாக்குவாதம் ஆணவக்கொலையில் முடிந்துள்ளது.

தகவல் அறிந்த பாளையங்கோட்டை உதவி காவல் ஆணையர் சுரேஷ், ஆய்வாளர் காசி பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கவினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது சுர்ஜித் கொலை செய்தது உறுதியானதாக காவல்துறையினர் கூறுகின்றனர். இதையடுத்து விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் சுர்ஜித்தை கைது செய்தனர். விசாரணையில் ஆணவக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டு சுர்ஜித் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சுர்ஜித் ஒப்புதல் வாக்குமூலம்

பிபிசி தமிழிடம் பேசிய விசாரணை அதிகாரி ஒருவர், “சுர்ஜித்தின் அக்காவும், கவின் செல்வ கணேஷ் ஆகிய இருவரும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி பருவத்தில் இருந்தே ஒன்றாக படித்தனர். இருவரும் நட்புடன் பழகி வந்த நிலையில் நட்பு காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

கவின் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களது காதல் சுர்ஜித்துக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து பல முறை சுர்ஜித் அவரது அக்காவை கண்டித்ததுடன், கவினையும் அழைத்து எச்சரித்துள்ளார்.

ஆனால், சுர்ஜித்தின் அக்கா வேலை பார்க்கும் பாளையங்கோட்டை தனியார் சித்த மருத்துவமனைக்கே சென்று அவ்வப்போது அவருடன் கவின் பேசியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) சித்த மருத்துவமனைக்கு கவின் வந்ததை அறிந்த சுர்ஜித் அவரை பின் தொடர்ந்து சென்று தனியாக அழைத்து மீண்டும் எச்சரித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை செய்து விட்டதாக சுர்ஜித் வாக்குமூலம் கொடுத்தார்” என்று தெரிவித்தார்.

பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சுர்ஜித் மீது கொலை, சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கொலைக்கு சுர்ஜித்தின் தாய்-தந்தையே காரணம் என்றும், அவர்களையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும் கவின் குடும்பத்தினர் வலியுறுத்தினர்.

படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட சுர்ஜித் “கவினை தந்திரமாக பேசி சுர்ஜித் அழைத்துச் சென்றான்”

பிபிசி தமிழிடம் அழுது கொண்டே பேசிய கவினின் தாய் தமிழ் செல்வி, “எனக்கு இரண்டு மகன்கள், இதில் மூத்த மகன் கவின் செல்வகணேஷ். பொறியியல் முடித்துவிட்டு சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஐ.டி கம்பெனியில் வேலை செய்து வந்தான். பள்ளியில் படிக்கும் போதே கவினும் சுர்ஜித்தின் அக்காவும் நண்பர்களாக பழகி வந்தனர் என்பதால், எங்களது பின்னணி சுர்ஜித்தின் குடும்பத்துக்கு நன்றாகவே தெரியும்.

ஒரு வாரத்துக்கு முன் கீழே விழுந்த என் அப்பாவுக்கு திருச்செந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தோம். அவருக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பது தொடர்பாக சுர்ஜித்தின் அக்காவிடம் ஆலோசனை பெறுவதற்காக அவர் மருத்துவராக பணியாற்றும் சித்த மருத்துவமனைக்கு கவின் அழைத்துச் சென்றான். கவினுடன் நான், எனது மற்றொரு மகன் மற்றும் என் சகோதரர் ஆகியோருடன் உடன் வந்திருந்தோம்.” என கூறினார்.

மேலும் பேசிய அவர், “ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் சித்த மருத்துவமனைக்கு என் அப்பாவுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஆலோசனை பெற்றுக் கொண்டிருந்த போது சுர்ஜித் அங்கே வந்தான். அவனது பெற்றோர் கவினை பார்க்க வேண்டும் என கூறியதாக சொல்லி சுர்ஜித் அழைத்தான். அதை நம்பி சுர்ஜித்துடன் கவின் இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றான்.

சித்த மருத்துவ ஆலோசனை முடிந்த பின் நானும் எனது இளைய மகனும் மற்றும் என் தம்பி கேடிசி நகர் சாலையில் சென்ற போது எனது மகனுடன் சுர்ஜித் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தோம். இதனால், வண்டியை நிறுத்திவிட்டு அவர்கள் அருகில் சென்ற போது என்னை தகாத வார்த்தையில் சுர்ஜித் திட்டினான். அதன் பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் என் மகனை சுர்ஜித் கொலை செய்துவிட்டான். கவினை கொலை செய்ய தூண்டிய சுர்ஜித் பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

“ஒரு இளைஞனை சாதி மிருகமாக்கி உள்ளது”

சமூக செயற்பாட்டாளரான எவிடென்ஸ் கதிர் பிபிசி தமிழிடம் பேசுகையில், “பெற்றோர் காவல்துறையில் பணியாற்றும் நிலையில் எந்த குற்றப் பின்னணியும் இல்லாத இளைஞனால் அவரது அக்கா மாற்று சமூகத்தை சேர்ந்தவரை காதலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாததற்கு சாதி வன்மமே காரணம்.” என்றார்.

2022ஆம் ஆண்டு முதல்வரை சந்தித்து ஆணவ படுகொலைகளுக்கு தனி சட்டம் தேவை என்று மனு அளித்திருந்த நிலையில், இதுவரை எந்த தனி சட்டத்தையும் தமிழக அரசு இயற்றவில்லை என அவர் கூறினார்.

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றங்கள் பலமுறை தீர்ப்பு அளித்தும் இதுவரை எந்த மாவட்டத்திலும் இது பின்பற்றப்படவில்லை எனவும் சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு காவல்துறையினர் உடனடியாக பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

“ஆணவப் படுகொலை செய்பவர்களுக்கு பிணையில் வெளியே வராத அளவுக்கு கடுமையான சட்டம் இயற்றி அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார் கதிர்.

பட மூலாதாரம், Kathir

படக்குறிப்பு, ஆணவப் படுகொலை செய்பவர்களுக்கு பிணையில் வெளியே வராத அளவுக்கு கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் – எவிடென்ஸ் கதிர் கவின் குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டம்

சார்பு ஆய்வாளர்களாக பணியாற்றி வரும் பெண்ணின் பெற்றோருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக கவின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். அவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி திருச்செந்தூர் – தூத்துக்குடி சாலை முக்காணியில் கவின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அந்த சாலை வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.போராட்டம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. சுர்ஜித்தின் பெற்றோர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை உறுதிமொழி அளித்த பின்னரே முக்காணியில் சுமார் 3 மணி நேரம் நீடித்த சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

சுர்ஜித்தின் தாய், தந்தை ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட பின்னரே கவின் உடலைப் பெற்றுக் கொள்வோம் என்று கவின் குடும்பத்தினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரி மீது சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு