நாடாளுமன்றத்தில் கொந்தளித்த எதிர்க்கட்சிகள் – மோதியின் பதில் என்ன? முழு விவரம்காணொளிக் குறிப்பு, பஹல்காம் தாக்குதல் நாடாளுமன்றத்தில் கொந்தளித்த எதிர்க்கட்சிகள் – மோதியின் பதில் என்ன? முழு விவரம்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதல் கூறித்து நாடாளுமன்றத்தில் இன்று கடுமையான விவாதம் நடைபெற்றது.

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று தீவிரவாதிகள் ஆபரேஷன் மகாதேவ் மூலம் கொல்லப்பட்டதாக உள் துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு தெரிவித்தார். இவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் அமித் ஷா கூறினார்.

இதை தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில், “ஒவ்வொரு தாக்குதல் நடக்கும்போதும் இது மீண்டும் நடக்காது என கூறுகிறீர்கள். நமது விஸ்வகுரு என்னதான் கற்றுக்கொண்டார்?” என்று பிரதமரை கடுமையாக தாக்கி பேசியிருந்தார் திமுக உறுப்பினர் கனிமொழி.

காங்கிரஸ் உறுப்பினர் பிரியங்கா காந்தி, “பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது குறித்து அரசு பெருமைப்படுகிறது, ஆனால் இந்த தாக்குதல் ஏன் முதலில் நடைபெற்றது என்று ஒரு முறை கூட அரசு கூறவில்லை” என்றார். திமுக எம்.பி. ஆராசா பேசும் போது டிரம்ப் போர் நிறுத்தம் அறிவித்தது குறித்து பாஜக அரசை விமர்சித்தார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, சண்டை நிறுத்தத்துக்கு தான் காரணம் என 29 முறை டிரம்ப் கூறிவிட்டார். இந்திரா காந்தியின் தைரியம் 50 சதவீதமாவது இருந்தால், ‘அப்படி இல்லை’ என பிரதமர் மோதி கூற வேண்டும் என்றார்.

எதிர்க்கட்சிகளின் பேச்சைத் தொடர்ந்து பிரதமர் மோதி அவையில் விளக்கமளித்தார். அப்போது, அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யவில்லை என மறைமுகமாக கூறும் விதமாக, ஆபரேஷன் சிந்தூரை நிறுத்த சொல்லி எந்த நாடும் எங்களிடம் கேட்கவில்லை என்றார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு