செம்மணி மனிதப் புதைகுழியில், ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை ஊடுருவும் ராடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

செம்மணிப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பகுதிக்கு மேலதிகமாக, செய்மதிப் படங்களை அடிப்படையாக வைத்து துறைசார் நிபுணர் சோமதேவா அடையாளப்படுத்திய இடத்திலும் என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டிருந்தன. 

இதையடுத்து, செம்மணியில் குறிக்கப்பட்ட பகுதிக்குள் மட்டும் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்காமல், பரந்துபட்ட அகழ்வுகள் இடம்பெற வேண்டும் என்று உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வலியுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்தே, வெளிநாட்டில் இருந்து ஜி.பி.ஆர். ஸ்கான் இயந்திரம் கொண்டுவரப்பட்டு அங்கு விரிவான ஆய்வு நடவடிக்கைகள் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

அதற்கான அனுமதியினை பாதுகாப்பு அமைச்சு வழங்க வேண்டிய நிலையில் , அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெறாத நிலையில் ஸ்கான் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. 

ஓரிரு நாட்களில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளதால் ,  அமைச்சின் அனுமதி கிடைத்ததும் , ஸ்கான் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆய்வுப் பணிகளுக்காக செம்மணிப் புதைகுழிக்கு அருகாக உள்ள பல பகுதிகள் கடந்த வெள்ளிக்கிழமை துப்புரவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்கான் ஆய்வில் பல பகுதிகளில் என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகின்றது.