கடும் பசியில் காஸா மக்கள் – பட்டினி மனித உடலை என்ன செய்யும்?

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், ரெபேக்கா தோர்ன் மற்றும் ஏஞ்சலா ஹென்ஷால்பதவி, பிபிசி உலக சேவை 33 நிமிடங்களுக்கு முன்னர்

காஸாவில், மூன்றில் ஒருவர் பல நாட்கள் உணவு இல்லாமல் இருக்கிறார் என ஐ.நாவின் உணவு உதவித் திட்டம் எச்சரித்துள்ளது.

இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு காஸாவில் மக்கள் பட்டினியால் வாடவில்லை எனக் கூறியிருந்தார். ஆனால், “காஸாவில் உண்மையான பட்டினி நிலவுகிறது” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

காஸா நகரத்தில் உள்ள ஐந்தில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது என்று ஐ.நா.பாலத்தீனிய அகதிகள் நிறுவனம் (UNRWA) தெரிவித்துள்ளது.

உணவுப் பற்றாக்குறையால், மருத்துவமனைகளில் கடுமையான சோர்வுடன் மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். சிலர் தெருக்களில் சோர்ந்து விழுகிறார்கள் என்றும் ஐ.நா. கூறியுள்ளது.

ஐ.நா. இன்னும் அதிகாரப்பூர்வமாக “பஞ்சம்” என்று அறிவிக்கவில்லை. ஆனால், கடுமையான பஞ்சம் ஏற்படுவதற்கான அபாயத்தில் காஸா உள்ளது என ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC- Integrated Food Security Phase Classification) எச்சரிக்கிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Anadolu/Getty Images

படக்குறிப்பு, காஸாவில் மனிதாபிமான நிலைமைகள் குறித்து சர்வதேச அளவில் கவலை அதிகரித்து வருகிறதுபஞ்சம் என்றால் என்ன, அது எப்போது அறிவிக்கப்படுகிறது?

ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC) என்பது, மக்கள் மலிவு விலை மற்றும் சத்தான உணவைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சிரமங்களை விவரிக்க பயன்படும் உலகளாவிய தரநிலை.

இதில் கட்டம் 5 தான் மிக உயர்ந்த கட்டமாக கருதப்படுகிறது. அதாவது பஞ்சம். பஞ்சம் என்பது பின்வரும் நிலைகளை சந்திக்கும் ஒரு தீவிர சூழ்நிலையை குறிக்கிறது.

20% குடும்பங்கள் உணவுக்கான தீவிர பற்றாக்குறையை எதிர்கொள்வது குறைந்தது 30% குழந்தைகள், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவதுஒவ்வொரு நாளும், 10,000 பேரில் குறைந்தது 2 பெரியவர்கள் அல்லது 4 குழந்தைகள் பட்டினி அல்லது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய்களின் தொடர்பால் உயிரிழப்பதுகாஸாவின் மொத்த மக்களும் (2.1 மில்லியன் பேர்) கட்டம் 3 (நெருக்கடி) அல்லது அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளனர் என IPC கூறுகிறது.

மே மற்றும் செப்டம்பர் 2025 க்கு இடையில் கிட்டத்தட்ட 469,500 பேர் பேரழிவு நிலையை (IPC கட்டம் 5) அனுபவிப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழல் ஏற்பட்டவுடன், ஐ.நா. பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கிறது.

சில சமயங்களில் ஒரு நாட்டின் அரசாங்கத்துடன் இணைந்தோ, பெரும்பாலும் சர்வதேச உதவி நிறுவனங்கள் அல்லது மனிதாபிமான அமைப்புகளுடன் இணைந்தோ இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

பட மூலாதாரம், Majdi Fathi/NurPhoto/Getty Images

படக்குறிப்பு, வடக்கு காஸாவில் உள்ள ஜிகிம் எல்லையில் இருந்து வரும் உதவி லாரிகளில் இருந்து பாலத்தீனியர்கள் மாவு மூட்டைகளை எடுத்துச் செல்கிறார்கள்பசியால் வாடும் போது ஒருவரின் உடலுக்கு என்ன நடக்கும்?

பட்டினி என்பது நீண்ட காலமாக உணவு இல்லாததால் ஏற்படுகிறது. இதனால் உடல், அதன் அடிப்படை செயல்பாடுகளுக்கு தேவையான கலோரிகளைப் பெற முடியாத நிலை ஏற்படுகிறது.

பொதுவாக உடல், உணவை குளுக்கோஸாக உடைக்கிறது. ஆனால் உணவு நிறுத்தப்படும்போது, உடல் இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸை வெளியிட, கல்லீரல் மற்றும் தசைகளில் உள்ள கிளைகோஜனை உடைக்கத் தொடங்குகிறது.

அங்குள்ள வளங்கள் தீர்ந்துவிட்டால், உடல் தேங்கிய கொழுப்பை உடைத்து, இறுதியில் தசை திரளையும் உடைத்து, போதுமான ஆற்றலை உற்பத்தி செய்யும்.

பட்டினியால் நுரையீரல், வயிறு மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் சுருங்கலாம். இது மூளையை பாதித்து, மாயத்தோற்றம், மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.

சிலர் நேரடியாக பட்டினியால் இறக்க நேரிடலாம்.

ஆனால் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பால், சுவாசம் அல்லது செரிமான அமைப்புகளில் ஏற்படும் தொற்றுகள் போன்ற சிக்கல்களால் அடிக்கடி இறக்கின்றனர்.

பட்டினி ஒவ்வொருவரையும் வித்தியாசமாக பாதிக்கிறது.

“நீங்கள் திடீரென்று கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஆளாக மாட்டீர்கள். இந்தக் குழந்தைகளுக்கு முன்பு தட்டம்மை, நிமோனியா, வயிற்றுப்போக்கு அல்லது அதுபோன்ற நோய்கள் இருந்திருக்கலாம்,” என்கிறார் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் மனித ஊட்டச்சத்து துறையின் கௌரவ மூத்த ஆராய்ச்சி பேராசிரியர் சார்லோட் ரைட்.

மேலும், “முன்பு ஆரோக்கியமாக இருந்த, ஆனால் இப்போது பட்டினியால் வாடத் தொடங்கியுள்ள குழந்தைகளுக்கு, உணவு கிடைத்தால் அதை சாப்பிட்டு ஜீரணிக்கத் தேவையான ஆற்றல் இன்னும் இருக்கும். மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள்”என்றும் பேராசிரியர் ரைட் விளக்குகிறார்.

படக்குறிப்பு, பசியின் நீண்ட கால விளைவுகள்ஊட்டச்சத்து குறைபாடு குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது?

குழந்தைப் பருவத்தில் உணவுப் பற்றாக்குறையைச் சந்திப்பது, வாழ்நாள் முழுவதும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இதில், அறிவாற்றல் வளர்ச்சியில் (cognitive development) குறைபாடுகள் ஏற்படுவது மற்றும் உடல் வளர்ச்சி குன்றிய நிலை (stunting) ஆகியவை அடங்கும்.

உடல் வளர்ச்சி குன்றிய நிலை (Stunting) என்பது, மோசமான ஊட்டச்சத்து, மீண்டும் மீண்டும் ஏற்படும் தொற்றுகள், மற்றும் போதிய உளவியல் மற்றும் சமூக தூண்டுதல் இல்லாமை ஆகியவற்றால் குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஏற்படும் குறைபாடாக உலக சுகாதார அமைப்பு (WHO) வரையறுக்கிறது.

பொதுவாக, இவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகள், அவர்களின் வயதுக்கு ஏற்ப எதிர்பார்க்கப்படும் உயரத்தை விட குறைவாக இருப்பார்கள்.

ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுபவர்கள், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஐக்கிய நாடுகளின் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

கர்ப்ப காலத்தில் போதுமான அளவு உணவு கிடைக்காவிட்டால், இரத்த சோகை, ப்ரீ -எக்லாம்ப்சியா, ரத்தக்கசிவு, மரணம் போன்ற தீவிர சிக்கல்களை தாய்மார்களுக்கு ஏற்படுத்தலாம். அதேபோல், குழந்தைகள் இறந்து பிறப்பது, குறைவான எடையுடன் பிறப்பது, வளர்ச்சிக் குறைபாடுகள் போன்ற பாதிப்புகளை குழந்தைகளுக்கு ஏற்படுத்தலாம் என்கிறது யுனிசெஃப்.

அதேபோல், ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கத் தேவையான சத்தான பாலை உற்பத்தி செய்ய போராடலாம்.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மெடிசின்ஸ் சன்ஸ் பிரான்டியர்ஸ் (Médecins Sans Frontières) அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் நுரதீன் அலிபாபா கூறுகையில், ‘இதன் தாக்கம் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடியது’ என்கிறார் .

“வளர்ச்சிக் குறைபாடு என்பது மீள முடியாதது. அவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள காலத்தை கடந்த பிறகும், குறைந்த உயரத்தில்தான் இருப்பார்கள். இது அவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், பெரும்பாலும் நிரந்தர கற்றல் குறைபாடும் இருக்கும், அது அவர்கள் பள்ளியில் சேரும் வரை தெளிவாக தெரியாது” என்று கூறிய மருத்துவர் அலிபாபா,

“ஊட்டச்சத்து குறைபாடு நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கிறது, இதனால் அவர்கள் தொற்றுநோய்களுக்கு ஆளாக நேரிடும்” என்றும் கூறுகிறார்.

“நிறைய மக்கள் முழுமையாக புரிந்து கொள்ளாத ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், சிறுமிகளுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கலாம். அவர்கள் கருத்தரித்தால், இந்த பெண்கள் குறைந்த எடை கொண்ட குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகம்.”

ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்புகள் பலவீனமாகவும், உடையக்கூடியதாகவும் மாறும் ஒரு நிலை) இன்னொரு சிக்கலாக உருவாகலாம்.

“வயதான பிறகு எலும்புகள் மடிக்கக்கூடியதாக மாறுவதால், அவர்கள் தங்கள் உடல் எடையை சுமக்க முடியாமல் போகலாம். அதனால், ஒரு சிறிய நிகழ்வும் கூட எலும்பு முறிவுக்கு வழிவகுக்கும்,” என்று மருத்துவர் அலிபாபா விளக்குகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காஸாவில் பாலத்தீனியர்களுக்கு உணவு விநியோகிக்கப்படுகிறதுஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் ?

“இந்த நெருக்கடிக்கு பதிலளிக்க இரண்டு முக்கியமான அணுகுமுறைகள் தேவை. முதலாவது, காஸாவிற்கு அதிகளவிலான உணவு அனுப்பப்பட வேண்டும். இரண்டாவது, விலையுயர்ந்த சிகிச்சை உணவுகள் வழங்கப்பட வேண்டும்”என்று பேராசிரியர் ரைட் கூறினார்.

“குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கு வேகமாக உணவளிக்க வேண்டும்.”

“தாய்ப்பால் குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான தேர்வாகும். முதலில், தாய்க்கு உணவளிக்க வேண்டும், அதன்மூலம் அவர் குழந்தைக்கு உணவளிக்க முடியும். ஆனால், ஆண்களை விட , பெண்களிடம் உணவு சென்றடைவதை உறுதிசெய்வது தான் உண்மையான சவால் உணவு ”

“முக்கியமான செய்தி என்னவெனில், குழந்தைகளும் தாய்மார்களும் முன்னுரிமை பெற வேண்டும், அவர்களுக்கு பெரிய அளவு உதவி தேவையில்லை.”

‘ஊட்டச்சத்து குறைபாடு, குறிப்பாக குழந்தைகளுக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை தரும். அதற்கான சிகிச்சை எப்போதும் நேரடியானதல்ல’ என விளக்குகிறார் பிபிசி அரபு சுகாதார நிருபரும், மருத்துவராக பயிற்சி பெற்ற ஸ்மிதா முண்டாசாத்.

கடுமையான சந்தர்ப்பங்களில், ஒருவருக்கு விழுங்க முடியாத நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஊட்டச்சத்து தேவைப்படலாம்.

“மேலும், நோய்த்தொற்றுகள் அல்லது பிற சிக்கல்களுக்கான சிகிச்சைகளும் தேவைப்படும்,” என்றும் அவர் கூறினார்.

“சில சந்தர்ப்பங்களில், ஒருவருக்கு மிக விரைவாக அல்லது தவறான உணவை கொடுப்பது ஆபத்தானது.

“அதனால், பசிக்காக உணவை வழங்குவது மட்டும் போதாது. சரியான உணவையும் வழங்க வேண்டும். மேலும், இதை ஆதரிக்கக்கூடிய ஒரு செயல்பாட்டு சுகாதார அமைப்பும் இருக்க வேண்டும்,” என்று குறிப்பிடுகிறார் மருத்துவர் ஸ்மிதா.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு