மோதியை சந்திக்க முடியாத ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசியலில் இனி என்ன செய்யப் போகிறார்?

எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர்2 மணி நேரங்களுக்கு முன்னர்

சமீபத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோதி, அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்தார். ஆனால், ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோரை சந்திக்கவில்லை. ஓ. பன்னீர்செல்வத்தின் கூட்டணி கணக்குகள் மாறுகின்றனவா?

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டுக்கு வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதியை வரவேற்கவும் வழியனுப்பவும் அனுமதி கோரிய ஓ. பன்னீர்செல்வத்துக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இதில் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கடும் வருத்தமடைந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் விஜய்யின் த.வெ.க. பக்கம் சென்றால் தென்மாவட்டங்களில் நல்ல வாக்குகளைப் பெற முடியும் என, முன்னாள் அமைச்சர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் கூறிய கருத்து கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்காத மோதி

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தைத் திறந்துவைப்பது உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோதி கடந்த சனி – ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழ்நாட்டுக்கு வருகை தந்தார். அந்தத் தருணத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதான கட்சியான அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு, பிரதமரை வரவேற்கும் வாய்ப்பளிக்கப்பட்டது.

அதேபோல, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், ஓ. பன்னீர்செல்வத்துக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

பட மூலாதாரம், narendra modi/X

படக்குறிப்பு, பிரதமர் மோதியை எடப்பாடி பழனிசாமி வரவேற்றபோது இத்தனைக்கும் பிரதமரைச் சந்திக்க அனுமதி கோரி ஓ. பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

“எனது தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான மதுரை- போடிநாயக்கனூர் ரயில் பாதையின் மின்மயமாக்கல் உட்பட பல திட்டங்களை தொடங்கி வைக்க தூத்துக்குடிக்கு வருகிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் தாத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் எனக்கு அனுமதி கிடைத்தால் அது ஒரு தனி மரியாதையாகவும் எனக்களிக்கப்பட்ட சிறப்புரிமையாகவும் இருக்கும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், ஓ. பன்னீர்செல்வத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதேபோல, டி.டி.வி. தினகரனும் பிரதமரை வரவேற்போர் பட்டியலில் இடம்பெறவில்லை.

அ.தி.மு.கவின் அழுத்தம் காரணமா?

“பா.ஜ.கவுடன் கூட்டணி உருவான போது, தொகுதிகளின் எண்ணிக்கை குறிந்த நிபந்தனைகளைவிட, இந்த விஷயங்களையெல்லாம்தான் எடப்பாடி கே. பழனிசாமி நிபந்தனையாக முன்வைத்திருப்பார். ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் தொடர்பாக தன்னை ஒருபோதும் வலியுறுத்தக் கூடாது என்று கூறியிருப்பார். பிரதமரைப் பார்க்க ம.தி.மு.கவின் எம்.பியும் வைகோவின் மகனுமான துரை வைகோ செல்கிறார். ஆனால், தர்மயுத்தம் நடத்திய, கூட்டணியில் இருப்பதாக தொடர்ந்து கூறிவரும் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல, டி.டி.வி. தினகரனுக்கும் பிரதமரைச் சந்திக்க வாய்ப்பளிக்கப்படவில்லை. பா.ஜ.கவைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்பாக எவ்வித தவறான சமிக்ஞையையும் அளிக்க பா.ஜ.க. விரும்பவில்லை என்பதைத்தான் இதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம்.

பிரதமரைச் சந்திக்க மட்டுமல்ல, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதற்கு முன்பாக தமிழ்நாட்டுக்கு வந்த இரண்டு தடவைகளிலும் அவரை சந்திக்க ஓ. பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. “பா.ஜ.கவைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் அ.தி.மு.கவுடனான கூட்டணி மிக முக்கியம் எனக் கருதுகிறது. ஆகவே, அ.தி.மு.கவை கோபப்படுத்தும் எதையும் அக்கட்சி செய்யாது” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.

“அ.தி.மு.க. கூட்டணிக்காக, மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்தே அண்ணாமலை மாற்றப்பட்டார் என்பதை மறக்கக்கூடாது. இத்தனைக்கும் பா.ஜ.கவை தமிழ்நாட்டில் வெகுவாகப் பேசப்பட வைத்தவர் அவர். அம்மாதிரி சூழலில், ஓ. பன்னீர்செல்வத்தை ஒரு பொருட்டாகவே கருத மாட்டார்கள். ஓ. பன்னீர்செல்வத்துக்கு இருக்கும் ஒரே வழி, அரசியல் ரீதியாக மோதுவதுதான். மேலும், அவர் தனது யுத்தத்தை தானே செய்ய வேண்டும். மற்றவர்களை நம்பி செய்யக்கூடாது” என்கிறார் அவர்.

பட மூலாதாரம், TTV Dhinakaran/ Facebook

படக்குறிப்பு, பிரதமர் மோதியை சந்திக்க டிடிவி தினகரனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இருந்த நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியரான மருது அழகுராஜ் வேறுவிதமாக இதனைப் பார்க்கிறார்.

“ஓ. பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை இப்படி நடந்தது நல்லதுதான். வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மூன்றாவது இடத்தைத்தான் பிடிக்கும். அதன் வாக்குகளில் 10 சதவிகிதத்துக்கு மேல் தமிழக வெற்றிக் கழகத்துக்குச் செல்லும். அம்மாதிரி சூழலில், இந்தக் கூட்டணியைவிட்டு அவர் வெளியேறுவதுதான் அவருக்கு நல்லது. காரணம், இதை மீறியும் அவர் இந்தக் கூட்டணியில் நின்றால், அவரது வேட்பாளர்களைத் தோற்கடிப்பார்கள்” என்கிறார் மருது அழகுராஜ்.

“நெஞ்சில் ஈட்டி பாய்ச்சியதைப் போல இருக்கிறது”: ஓ.பி.எஸ். தரப்பு

ஓ. பன்னீர்செல்வம் தரப்பு இந்த சம்பவத்தால் கடும் மன வருத்தத்தில் இருக்கிறது. பழனி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பின் தேர்தல் பிரிவு செயலாளருமான வழக்கறிஞர் ஏ. சுப்புரத்தினம், இதனை வெளிப்படையாகவே பேசுகிறார்.

“தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், மூத்த தலைவர் , கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்டவர் , இப்போதும் கூட்டணியில் இருப்பதாகச் சொல்பவர். பிரதமர் வரும்போது வரவேற்க அனுமதி கேட்பது இயல்பான ஒன்று. ஆனால், ஏன் அனுமதி கிடைக்கவில்லை எனத் தெரியவில்லை. பிரதமர் யாரையும் சந்திக்கவில்லையென்றால் பரவாயில்லை. ஆனால், எடப்பாடி கே. பழனிசாமியைச் சந்திக்கிறார். ஜி.கே. வாசன், ஏ.சி. சண்முகத்தைச் சந்திக்கிறார். அப்படியிருக்கும் போது ஓ. பன்னீர்செல்வத்தைச் சந்திக்காதது மிகுந்த வருத்தமளிக்கிறது.” என்றார்.

இது எந்தவிதமான அரசியல் பாரம்பரியத்துக்கு உட்பட்டது என தெரியவில்லை எனக் கூறிய அவர், அரசியல் நாகரிகம் கருதியாவது பிரதமரைச் சந்திக்க ஓ. பன்னீர்செல்வத்துக்கு அனுமதி அளித்திருக்க வேண்டும் என்றார்.

“இந்த நிகழ்வு எங்கள் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சியதைப் போல இருக்கிறது. நிலைமை இப்படியிருக்கும்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர வேண்டுமா என்பதுதான் கேள்வி. அப்படியே, ஓ. பன்னீர்செல்வம் கூட்டணியைவிட்டு வெளியேறினால், அதற்குக் காரணம் அவரல்ல” என்கிறார் ஏ. சுப்புரத்தினம்.

டி.டி.வி. தினகரனைப் பொறுத்தவரை, அவர் தனிக் கட்சி வைத்திருப்பதால் “சில இடங்களைப் பெற்றுக்கொண்டு, அவர் கூட்டணியில் நீடிப்பார்” என்கிறார் ஷ்யாம். பல செய்தியாளர் சந்திப்புகளிலும் அதனை உறுதிப்படுத்திவருகிறார் டி.டி.வி. தினகரன். எடப்பாடி கே. பழனிசாமியிடம் சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் இது குறித்து கேட்டபோது, “அவர் கூட்டணியில் இருப்பதாகச் சொல்கிறார். நாங்கள் ஒன்றும் சொல்லவில்லையே. எங்களைப் பொறுத்தவரை அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி” என்று மட்டும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Tarasu Shyam

படக்குறிப்பு, “பா.ஜ.கவைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்பாக எவ்வித தவறான சமிக்ஞையையும் அளிக்க பா.ஜ.க. விரும்பவில்லை” – தராசு ஷ்யாம் விஜய் பக்கம் நகர்வாரா ஓ.பி.எஸ்?

தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோதி, ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க மறுத்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டிற்குரிய 2024-2025 ஆம் ஆண்டிற்கான சமக்ரா சிக்ஷா திட்ட நிதி 2,151 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க மத்திய அரசை வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், ஓ. பன்னீர்செல்வத்தின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்? என்ற கேள்விக்கு “சமீபத்தில் அளித்த பேட்டியில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் வெளிப்படுத்திய கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது” என்கிறார் ஏ. சுப்புரத்தினம்.

முன்னாள் அமைச்சரான பன்ருட்டி எஸ். ராமச்சந்திரன் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், ஓ. பன்னீர்செல்வம் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்தால், தென் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வாக்குகளை அக்கட்சி பெற முடியும் என்று கூறியிருந்தார். அதனையே சுப்புரத்தினம் சுட்டிக்காட்டுகிறார்.

தான் இதனை நீண்ட காலமாகச் சொல்லிவருவதாகச் சொல்கிறார் மருது அழகுராஜ். “அரசியலில் கடைசிப் பக்கம் என்பது கிடையாது. இதை வைத்து, ஓ.பி.எஸ்சின் அரசியல் வாழ்வு முடிந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. அவர் விஜய்யுடன் கூட்டணி அமைக்கலாம்” என்கிறார் அவர்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பா.ஜ.கவினரைப் பொறுத்தவரை இப்போது இதைப் பற்றிப் பேச வேண்டியதில்லை என்கிறார்கள். “கூட்டணியில் யார் இருக்கிறார்கள், இல்லை என தி.மு.கவினர்தான் கவலைப்பட்டு வருகிறார்கள். அந்தக் கவலை யாருக்கும் தேவையில்லை. யாரைக் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதை முடிவுசெய்து வைத்திருக்கிறோம். அதை வெளியில் சொல்ல வேண்டியதில்லை” என்கிறார் அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர்.

அதிமுக – பாஜக கூட்டணி ஒரு பார்வை

2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. – பா.ஜ.க. இணைந்து போட்டியிட்டன. இந்தக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளும் இடம்பெற்றிருந்தன. டி.டி.வி. தினகரன் தனியாக வேறு ஒரு கூட்டணி அமைத்து தேர்தலில் களமிறங்கினார். இதற்குச் சில காலத்துக்குப் பிறகு, பா.ஜ.கவுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக் கொண்டது.

2024ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, புதிய நீதிக் கட்சி, டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநிலக் காங்கிரஸ் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இந்தக் கூட்டணியில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம் சுயேச்சையாக ஒரு தொகுதியில் போட்டியிட்டார். அ.தி.மு.க. – தே.மு.தி.க. இணைந்து வேறு ஒரு கூட்டணியை உருவாக்கியிருந்தன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு