நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை ரத்தா? உண்மை நிலை பற்றி ஏமனில் இருந்து புதிய தகவல்

படக்குறிப்பு, நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஏமன் குடிமகன் ஒருவரை கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக, இந்திய ஊடகங்கள் பலவற்றில் திங்கட்கிழமை முதல் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இந்த செய்தி உண்மையல்ல என்பது கொலையுண்ட மஹ்தியின் சகோதரர் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளன.

சில இந்திய ஊடகங்கள் பொய்யான தகவல்களை வெளியிடுவதாக கொலையுண்ட தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்துல் ஃபத்தா மஹ்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஏமனில் ஜூலை 16-ஆம் தேதி நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. அதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கு, மதகுரு கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியாரின் தலையீடு உத்வேகம் அளித்ததாக தகவல் வெளியானது.

படக்குறிப்பு, ஏ.பி. அபுபக்கர் முஸ்லியார்இந்த நிலையில்தான், மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. மதகுரு கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியாரின் அலுவலகம் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியதாக, அச்செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“நிமிஷா பிரியாவின் தண்டனை ரத்து செய்யப்பட்டது. சனாவில் நடந்த உயர் மட்ட கூட்டத்தில் மரண தண்டனையை முற்றிலும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது” என, ஏ.பி. அபுபக்கர் முஸ்லியாரின் தரப்பிலிருந்து வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகின.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

‘பொய்யான செய்திகள்’

இதில் உண்மை என்ன என்பது தொடர்பாக, அரபு மொழியில் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார், கொலையானவரின் சகோதரர் அப்துல் ஃபத்தா மஹ்தி. அந்த பதிவை ஏமனில் நிமிஷாவின் வழக்கை கையாளும் அதிகாரம் பெற்ற சாமுவேல் ஜெரோம் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பகிர்ந்துள்ளார்.

அதன்படி, அப்துல் ஃபத்தா மஹ்தி தன் பதிவில் சில இந்திய ஊடகங்கள் இவ்விவகாரத்தை உணர்ச்சியின் அடிப்படையில் பரபரப்பான செய்தியாக்கி, தவறான மற்றும் பொய்யான தகவல்களை வெளியிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், உண்மை மற்றும் மதத்தின் அடிப்படையில் செயல்படுவதாகவும் கருணையின் குரல்களாக தம்மைக் காட்டிக்கொள்ள முனையும் சில “மதத் தலைவர்களும்” தவறான தகவல்களை உருவாக்குவதை புரிந்துகொள்ளவோ அல்லது மன்னிக்கவோ முடியவில்லை என்றும் அப்துல் ஃபத்தா மஹ்தி தன் பதிவில் குறிப்பிட்டிருப்பதாக சாமுவேல் ஜெரோம் தனது மொழிபெயர்ப்பில் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Abdul Fattah Mahdi/Facebook

படக்குறிப்பு, பொய்யான தகவல்களை வெளியிடுவதாக ஊடகங்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார் அப்துல் ஃபத்தா மஹ்திஆதராங்களுடன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவதை தடுத்து நிறுத்துவதன் மூலம் மதம் மற்றும் மனிதநேயத்தின் பெயரால் செயல்படுபவர்கள் என்ன ஆதாயம் பெறுகிறார்கள் என அப்துல் ஃபத்தா மஹ்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

“இந்த விஷயத்தில் ஏதேனும் தெளிவின்மை இருந்தால், உண்மையை பகிரங்கப்படுத்தட்டும்.” என அவர் பதிவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக யாரேனும் கூறினால், எப்போது, எந்த அடிப்படையில் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என அப்துல் மஹ்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக எந்த முடிவை எடுத்தாலும் தங்கள் தரப்புதான் அதை எடுக்கும் என்றும் அவர் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

‘உண்மை நிலை நேரெதிராக உள்ளது’

இதுதொடர்பாக, சாமுவேல் ஜெரோம் பிபிசி தமிழிடம் பேசுகையில், “நான் சிறை அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர் அலுவலக அதிகாரிகளுடன் தனிப்பட்ட முறையில் இத்தகவல் குறித்து சரிபார்த்தேன். அதன்படி, மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாகக் கூறுவது முற்றிலும் தவறானது.” என தெரிவித்தார்.

மாறாக, கொலையானவரின் சகோதரர் அப்துல் ஃபத்தா மஹ்தி தனது சட்டப்பூர்வ உரிமையை முறையாகப் பயன்படுத்தி, ஏமன் சட்டத்தின்படி மரண தண்டனையைத் தொடர அரசாங்கத்துக்கு அதிகாரப்பூர்வ கோரிக்கையை சமர்ப்பித்துள்ளார் என்றும் சாமுவேல் ஜெரோம் கூறினார்.

“நீதி என்பது ஒரு விளையாட்டல்ல, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தின் குரல் கேட்கப்பட்டு, அது மதிக்கப்பட வேண்டும்.” என சாமுவேல் ஜெரோம் பதிவிட்டுள்ளார்.

படக்குறிப்பு, மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாகக் கூறுவது முற்றிலும் தவறானது – சாமுவேல் ஜெரோம் சேவ் நிமிஷா பிரியா கவுன்சில் விளக்கம்

அதேபோன்று, சேவ் நிமிஷா பிரியா கவுன்சிலின் உறுப்பினர் பாபு ஜானும் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர் தனது விளக்கத்திலும், மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக வரும் செய்திகள் பொய்யானவை என தெரிவித்துள்ளார்.

காந்தபுரம் (கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார்) குழு, சுன்னி முஸ்லிம்கள் என்பதால், நிமிஷா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹூதி கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் (சனா) அவர்களால் நுழைய முடியாது. தலாலின் (கொலையுண்டவர்) குடும்பத்தினர் தங்கியுள்ள பகுதிக்குள் (தமர்) அவர்கள் நுழைய முடியாது என்பதால், எந்த வெளிப்புற செல்வாக்குக்கும் அங்கே சாத்தியமில்லை எனவும் பாபு ஜான் தெரிவித்துள்ளார்.

நிமிஷா பிரியா மரண தண்டனை பற்றி சில தனி நபர்களால் பகிரப்படும் தகவல்கள் சரியானவை அல்ல என்று இந்திய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வழக்கின் பின்னணி என்ன?

கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டுக்கு செவிலியர் பணிக்குச் சென்றார்.

அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். டோமி தாமஸும், நிமிஷாவின் மகளும் இப்போது கேரளாவில் வசித்து வருகின்றனர்.

நிமிஷா, 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். 2017ஆம் ஆண்டு, ஏமனின் அல்-பைதா நகரில், ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடல் தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து ஏமனின் மாரிப் எனும் நகரில் நிமிஷா கைது செய்யப்பட்டார்.

மஹ்திக்கு ‘அதிகப்படியான மயக்க மருந்து’ கொடுத்து கொலை செய்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது.

மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை எல்லாம் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.

இந்தக் கூற்றுகளை தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்துல் ஃபத்தா பிபிசியிடம் மறுத்திருந்தார்.

தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்கவே, அவருக்கு நிமிஷா மயக்க மருந்து கொடுத்தார் என்றும் ஆனால் தவறுதலாக மருந்தின் அளவு கூடிவிட்டது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டில், சனாவில் உள்ள நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. 2023இல் ஏமன் உச்ச நீதிமன்றத்தால் அது உறுதி செய்யப்பட்டது. ஜூலை 16-ஆம் தேதி நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், அதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. நிமிஷா பிரியா, தற்போது ஏமன் தலைநகர் சனாவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு