Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பிராட்மேன், கோலியை சமன் செய்த கில்: பெருஞ்சுவராய் எழுந்து அணியை காத்த சுந்தர் – ஜடேஜா
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், தினேஷ் குமார் பதவி, பிபிசி தமிழுக்காக 27 நிமிடங்களுக்கு முன்னர்
அடுத்து என்ன நிகழப் போகிறது என்று தெரியாத மர்மம்தான் டெஸ்ட் கிரிக்கெட்டை இன்னும் சாகாமல் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. ஐபிஎல் தொடரின் வெற்றிக்கு பிறகு உலகம் முழுக்க எத்தனையோ டி20 லீக் தொடர்கள் முளைத்துவிட்டன. ஆனால், சமபலம் வாய்ந்த இரு அணிகள் மல்லுக்கட்டும் டெஸ்ட் போட்டியின் சுவாரஸ்யத்தை மட்டும், அவற்றால் இதுவரை விஞ்ச முடியவில்லை என்பதுதான் உண்மை.
வரலாற்றை திரும்பிப் பார்க்கையில், நெருக்கடியின் போதுதான் இந்திய அணி, தனது உச்சபட்ச கிரிக்கெட்டை விளையாடியிருக்கிறது என்பதை பார்க்க முடியும். 2001 ஈடன் கார்டன்ஸ் டெஸ்டில் லக்ஷ்மண்–டிராவிட் இணையின் சாகசத்தை இன்றும் பேசிக் கொண்டிருக்கிறோம். 2021 சிட்னி டெஸ்டில், விஹாரி–அஸ்வின் இணையின் போராட்டம் வரலாற்றின் ஓரங்கமாகிவிட்டது அந்த வரிசையில், மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியும், சுந்தர்–ஜடேஜா இணையின் விடாப்பிடியான சதங்களும் காலம் கடந்தும் பேசப்படும்.
இந்த டெஸ்டில் இந்தியா வென்றிருந்தால் கூட, அது இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது. வெற்றியை எளிதாக கொண்டாடிவிட்டு கடந்து சென்றிருப்போம். கிட்டத்தட்ட கைவிட்டுப் போன ஒரு டெஸ்டில், 142 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடி, இந்திய அணி தோல்வியை தவிர்த்ததுதான், இந்த டெஸ்டை ஒரு கிளாசிக்காக மாற்றிவிட்டது.
அதுவும் எப்படிப்பட்ட ஓர் அணியை வைத்து, இதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறோம் என்பதும் இந்த டிராவை ஒரு மகத்தான அனுபவமாக மாற்றியுள்ளது. மோசமான அணித்தேர்வு, ரிஷப் பந்த் காயம், தொடரில் 2–1 என பின்னிலை, கடைசி இன்னிங்ஸில் அவலமான தொடக்கம் (0–2). இத்தனை பின்னடைவுகளுக்கு பிறகு இன்னிங்ஸை தொடங்கிய ராகுல்–கில் இணை, கடைசி நாளில் இந்திய அணிக்கு நம்பிக்கையான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சுப்மன் கில் மற்றும் கே.எல். ராகுல் இணை லார்ட்ஸ் டெஸ்டில் சதத்தின் மேல் கண்வைத்து கவனத்தை தொலைத்த, ராகுல் முதல் 1 மணி நேரம் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தினார். புதிய பந்தை எடுக்கும் வரை, டாசனுடன் சேர்ந்து கேப்டன் ஸ்டோக்ஸ் பந்துவீசியது பாராட்டத்தக்க நகர்வு. தனது முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களின் நலனுக்காக, பஞ்சு போல மாறியிருந்த பழைய பந்தில் தனது முழு சக்தியையும் இறக்கி, பந்துவீச துணிந்தார். வெற்றி தோல்விகளை கடந்து, ஸ்டோக்ஸ் ஏன் உலகின் தலைசிறந்த கேப்டனாக கொண்டாடப்படுகிறார் என்பதற்கு இந்த தன்னலமற்ற தலைமைத்துவம்தான் காரணம்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
உண்மையில், நேற்று ஸ்டோக்ஸ் முழு உடற்தகுதியிலும் இல்லை. ஒவ்வொரு பந்தையும் வீசி முடித்த பிறகு, தோளை பிடித்துக்கொண்டு வலியில் துடித்ததை பார்க்க முடிந்தது. ஆனாலும், உயிரைக் கொடுத்து வீசி, சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ராகுல் விக்கெட்டை கைப்பற்றினார். சதத்தை தவறவிட்டாலும் ராகுலின் ஆட்டம், இந்தியாவுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
சிறந்த இன்னிங்ஸை விளையாடிய சுந்தர்
ராகுல் விக்கெட்டை கைப்பற்றியது ஒரு அற்புதமான பந்து. ஷார்ட் ஆஃப் த லெந்த்தில் வீசப்பட்ட பந்து, இவ்வளவு தாழ்வாக உள்ளே நுழைந்து கால்காப்பை தாக்கும் என கனவிலும் ராகுல் நினைத்திருக்க மாட்டார். அதற்கு முந்தைய பந்து, கிட்டத்தட்ட அதே லெந்த்தில் இருந்து அதீதமாக எகிறியது ராகுலின் மனதில் நின்றிருக்கக் கூடும். ஸ்டோக்ஸ் பந்துவீசும் போது ஒவ்வொரு பந்திலும் விக்கெட்டுக்கு வாய்ப்பிருப்பது போலவே தெரிந்தது.
ராகுல் ஆட்டமிழந்த பிறகு கேப்டன் கில்லுடன் கைக்கோர்த்த சுந்தர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஆகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடினார். இடக்கை பேட்ஸ்மேனான சுந்தருக்கு எதிராக ஆடுகளத்தில் உள்ள சொரசொரப்பை பயன்படுத்தி டாசன் வீசினார். இதைத் தடுக்கும் விதமாக, டாசன் பந்தில் சுந்தருக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் கில்லே பெரும்பாலான பந்துகளை விளையாடினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஸ்டோக்ஸ் பந்துவீசும் போது ஒவ்வொரு பந்திலும் விக்கெட்டுக்கு வாய்ப்பிருப்பது போலவே தெரிந்தது.இந்திய டெஸ்டில் கில் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். நான்காம் நாளில் 41 ரன்களில் கில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை டாசன் தவறவிட்டார். நேற்று ஸ்டோக்ஸ் பந்தில் 81 ரன்களில் இருந்தபோது கவர் திசையில் கொடுத்து வாய்ப்பை, போப் கோட்டைவிட்டார். இதை சரியாக பயன்படுத்திக்கொண்ட கில், இந்த தொடரின் நான்காவது சதத்தை விளாசினார். இதன்மூலம், ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள்(4) குவித்த கவாஸ்கர், கோலி சாதனையை சமன்செய்தார். இங்கிலாந்து மண்ணில் ஒரு தொடரில் அதிக சதங்கள் எடுத்த பிராட்மேனின் சாதனையையும் கில் சமன் செய்தார்.
சதத்தை எட்டிய பிறகு ஏற்பட்ட கவனச்சிதறலில், ஆர்ச்சர் பந்துவீச்சில் வெளியே சென்ற பந்துக்கு பேட்டை நீட்டி கில் ஆட்டமிழந்தார். பொதுவாக ஆர்ச்சர், வலக்கை பேட்ஸ்மேனுக்கு உள்ளேதான் பந்தை எடுத்துக்கொண்டு வருவார். ஆனால், அந்தப் பந்தை தனது மணிக்கட்டை பயன்படுத்தி வெளியே கொண்டுசென்றார். அதை கில் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
சரணடையாத இந்திய அணி
கில் விக்கெட்டுக்கு பிறகு, இந்தியா எளிதில் சரணடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுந்தர்–ஜடேஜா இணை, எவ்வித தவறுக்கும் இடம்கொடுக்காமல் மிகக் கவனமாக விளையாடி, ஒவ்வொரு அரைமணி நேரமாக ஆட்டத்தை நகர்த்தி சென்றது. வாஷிங்டன் சுந்தர், ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் போலவே அபாரமான டெக்னிக்குடன் இங்கிலாந்தின் பவுன்சர் வியூகத்தை சமாளித்து விளையாடினார்.
ஸ்டோக்ஸ் பந்தில் அவர் பறக்கவிட்ட சிக்ஸர், 2021 பிரிஸ்பன் டெஸ்டில் கம்மின்ஸ் பந்தில் அடித்த ஹூக் ஷாட்டை ஞாபகப்படுத்தியது. அப்போதிருந்தே தொடர்ச்சியாக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து, சுந்தரை வளர்த்தெடுத்திருக்க வேண்டும். ஆனால், இந்திய அணி நிர்வாகம் அவருடைய திறமையை அங்கீகரித்ததாக தெரியவில்லை. இன்று கடுமையாக போராடி, அவ்வப்போது கிடைத்த சொற்ப வாய்ப்புகளை கொண்டு, தன்னை நிரூபித்திருக்கிறார். உயரமான பேட்ஸ்மேன் என்பதால் உடலையும் கால்களையும் நன்றாக நீட்டி, சுழற்பந்து வீச்சையும் பிரமாதமாக விளையாடுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கடுமையாக போராடி, அவ்வப்போது கிடைத்த சொற்ப வாய்ப்புகளை கொண்டு, தன்னை நிரூபித்திருக்கிறார் வாஷிங்டன் சுந்தர் இந்த தொடரில், இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஜடேஜா, நேற்று புதிய சாதனை ஒன்றை படைத்தார். இங்கிலாந்து மண்ணில் 6 அல்லது அதற்கும் கீழான வரையில் பேட் செய்து, 9 முறை ஐம்பது ரன்களுக்கு மேல் கடந்த எதிரணி வீரர் என்ற கேரி சோபர்ஸ் சாதனையை சமச்செய்தார். இந்த தொடர் முழுக்கவே இரண்டாவது இன்னிங்ஸ்களில் ஜடேஜாவை இங்கிலாந்து அணியால் ஆட்டமிழக்க செய்யமுடியவில்லை என்பது அவர் எப்படிப்பட்ட ஃபார்மில் இருக்கிறார் என்பதற்கு சான்று. ஆனாலும், ஆங்கில ஊடகங்கள் ஸ்டோக்ஸ் பெயரைத் தான் தொடர்ந்து உச்சரிக்கின்றன.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர்களில், ஜடேஜா முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது. சுந்தர்–ஜடேஜா பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாத இயலாமையால் இங்கிலாந்து அணியினர் வாய்ச்சவடாலில் இறங்கினர். முதலில் ஸ்கோரை சமன் செய்து, இன்னிங்ஸ் தோல்வியை வாய்ப்பில்லாமல் ஆக்கிய பிறகு, நம்பிக்கையுடன் அவர்கள் அடித்து விளையாட தொடங்கினர்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.அவர்கள் இருவரின் நேர்மறையான ஆட்டம், இங்கிலாந்து அணியின் நம்பிக்கையை உடைத்தது. ஒருகட்டத்தில் ஆட்டத்தை முடித்துக் கொள்வோம் என ஸ்டோக்ஸ் இறங்கிவந்து கேட்டபோது, இந்திய கேப்டன் கில் இசைவு தெரிவிக்கவில்லை. சுந்தரும் ஜடேஜாவும் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தது ஒரு காரணமாக இருந்த போதும், இந்திய அணிக்கு வேறு வியூகமும் இருந்தது.
ஏற்கெனவே, உடல் சோர்வில் இருக்கும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மேலும் பந்துவீசி ஓய்ந்து போகட்டும் என இந்தியா நினைத்திருக்கலாம். இந்தியாவின் மறுப்பு, ஸ்டோக்ஸ் உள்பட இங்கிலாந்து அணி வீரர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பாவ புண்ணியம் பார்க்க முடியாது என்பதை பாடிலைன் பந்துவீச்சை கண்டுபிடித்த இங்கிலாந்து அணி எப்படி மறந்தது என தெரியவில்லை. சுந்தர்–ஜடேஜா இணை, 334 பந்துகள் தாக்குப்பிடித்து விளையாடி, 203 ரன்களை குவித்தது, இருவரும் சதம் அடித்தனர். லார்ட்ஸ் டெஸ்டில் ஜடேஜாவுக்கு ஏற்பட்ட மன வருத்தத்துக்கு ஆறுதலாக இந்த சதம் நிச்சயம் அமைந்திருக்கும்.
ஓவல் டெஸ்ட், இன்னும் இரண்டு நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் களைத்துப் போயுள்ளனர். பும்ரா உள்பட இந்தியாவின் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் முழு உடற்தகுதியில் உள்ளனர். இந்தியா 2-1 என தொடரில் பின்தங்கி இருந்தாலும், மான்செஸ்டர் டெஸ்டில் இந்தியா விளையாடிய விதம், உளவியல் ரீதியாக இந்திய அணிக்கு ஒரு எழுச்சியை கொடுத்துள்ளது. ஓவல் டெஸ்டில் இன்னொரு ரோலர் கோஸ்டர் ரைடுக்கு தயாராவோம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு