மான்செஸ்டர் டெஸ்டின் இறுதிக்கட்டத்தில் உச்சக்கட்ட உரசல் : ஜடேஜா – பென் ஸ்டோக்ஸ் இடையே நடந்த வாக்குவாதம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பென் ஸ்டோக்ஸ், மைதானத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருடன் கைகுலுக்கி, போட்டியை டிரா செய்ய முன்மொழிந்தார்.25 நிமிடங்களுக்கு முன்னர்

மான்செஸ்டரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆனால் இந்த போட்டியின் முடிவை வெற்றிக்கு இணையாக இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 311 ரன்கள் பின்தங்கியிருந்தாலும், கேப்டன் சுப்மன் கில், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி டெஸ்டை டிராவில் முடிக்க முடிந்தது.

ரன்கள் ஏதும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை, கேப்டன் சுப்மன் கில், சதத்தை நெருங்கிய கே.எல்.ராகுல் 4 வது நாளில் காப்பாற்றினார்கள் என்றால், 5 வது நாளில் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் அணை போட்டு இங்கிலாந்தின் வெற்றியை தட்டிப் பறித்தனர்.

இந்திய வீரர்களின் இந்த போராட்டமான ஆட்டத்தை சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். இதே நேரத்தில் கடைசி நாளின் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட வீரர்கள் நடந்து கொண்ட விதம் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

போட்டி முடிவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், மைதானத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருடன் கைகுலுக்கி, போட்டியை டிரா செய்ய முன்மொழிந்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ஆனால் அந்த நேரத்தில் இரு பேட்ஸ்மேன்களும் தங்கள் சதங்களை நெருங்கிவிட்டதால், அதனை நிராகரித்தனர்.

அப்போது ரவீந்திர ஜடேஜா 89 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 80 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மேலும் அவர்கள் தங்கள் சதங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில், போட்டியில் 15 ஓவர்கள் மீதமிருந்தன. அதாவது ஒரு மணி நேரத்திற்கும் மேலான ஆட்டம் மீதமிருந்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரவீந்திர ஜடேஜா தனது ஐந்தாவது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். வாஷிங்டன் சுந்தர் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார்ஜடேஜாவும் சுந்தரும் திட்டத்தை நிராகரித்த பிறகு ஸ்டோக்ஸ் மகிழ்ச்சியற்ற மனநிலையில் நடுவரிடம் சென்றார்.

பின்னர் ஸ்டோக்ஸ், தனது பிரதான பந்து வீச்சாளர்களைத் தவிர்த்து ஹாரி ப்ரூக் மற்றும் ஜோ ரூட்டை பந்து வீச அழைத்து வந்தார், கடைசி சில நிமிடங்களில் இரு அணிகளுக்கும் இடையே சிறிது கசப்பு நிலவியது.

இதற்கிடையில், ஸ்டம்ப் மைக்கிலிருந்து ஓர் இங்கிலாந்து வீரரின் குரல் கேட்டது, “உங்களுக்கு எவ்வளவு நேரம் தேவை, ஒரு மணி நேரம்?”

”உங்களுக்கு சதம் வேண்டுமென்றால், முன்பு ஆடியதை போல ஆட வேண்டும்”

இதற்கிடையே ஸ்டோக்ஸ் வந்து ” ஜட்டு நீங்கள் ஹாரி ப்ரூக், பென் டக்கெட்டுக்கு எதிராக விளையாடி சதம் அடிக்க வேண்டுமா?” என கேட்டார்.

” என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? நான் செல்ல வேண்டுமா?” என ஜடேஜா கேட்டார்.

” கையை குலுக்குங்கள். அவ்வளவுதான்” என ஜாக் க்ரௌலி கூறினார்

பின்னர் இரு அணிகளின் வீரர்களுக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. ஹாரி புரூக் மற்றும் ஜாக் க்ரௌலியும் ஏதோ சொன்னார்கள், ஆனால் அவர்கள் சொன்னது தெளிவாகக் கேட்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images

கம்பீரும் ஸ்டோக்ஸும் என்ன சொன்னார்கள்?

போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீரிடம் இது குறித்து கேட்டபோது, “ஒரு பேட்ஸ்மேன் 90 ரன்களிலும், மற்றொருவர் 85 ரன்களிலும் விளையாடும்போது அவர்கள் சதம் அடிக்க கூடாதா? இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் இப்படி விளையாடி தனது முதல் டெஸ்ட் சதத்தை அடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் அவர் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்பட மாட்டாரா?” என்று கேட்டார்.

”இந்திய அணி சதத்தை முடிக்க ஆட்டத்தை நீட்டித்தது. அதே நேரத்தில் எங்கள் அணி பந்துவீச்சாளர்கள் அதிகமாகப் பந்து வீசுவதைத் தடுக்க விரும்பினேன்.” என போட்டிக்குப் பிறகு பென் ஸ்டோக்ஸ் கூறினார்.

தான் முன்மொழிந்த நேரத்திலேயே போட்டி டிராவாக முடியும் என்பது தெரிந்த விஷயம்தான் என்பது பென் ஸ்டோக்ஸின் கருத்தாக உள்ளது.

“எனக்கு இதில் எந்தப் பிரச்னையும் தோன்றவில்லை (ஜடேஜா மற்றும் சுந்தர் தொடர்ந்து பேட்டிங் செய்வது தொடர்பாக). இங்கிலாந்துக்கு இதில் சிக்கல் இருந்தது. அவர்கள் கொஞ்சம் சோர்வாக இருந்தார்கள். பந்து வீச்சாளர்கள் சோர்வாக இருந்ததால் அவர்கள் மைதானத்தை விட்டு வெளியேற விரும்பினர். ஆனால் இரு வீரர்களும் 80 மற்றும் 90 ரன்களை எட்ட கடுமையாக உழைத்தனர். மேலும் அவர்கள் டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்க விரும்பினர்” என அப்போது ஸ்கை ஸ்போர்ட்ஸ் கமெண்ட்ரியில் பேசிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

இதற்கிடையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ”இங்கிலாந்து அணியின் இரண்டு பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் சதத்தை நெருங்கினால் என்ன செய்திருப்பார்கள் என்று பார்க்க விரும்புகிறேன்?” என்றார்.

இதன் பிறகு, ரவீந்திர ஜடேஜா தனது ஐந்தாவது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். வாஷிங்டன் சுந்தர் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார்.

போட்டிக்குப் பிறகு இந்த சம்பவம் குறித்து வாஷிங்டன் சுந்தரிடம் கேட்டபோது, அவர் அந்தக் கேள்வியைத் தவிர்த்தார். “எல்லோரும் தொலைக்காட்சியில் நடந்ததைக் கண்டார்கள். அவர்கள் அனைவரும் அதை ரசித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்” என்று சுந்தர் கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு