மோதியின் மாலத்தீவு பயணம் – வெளிநாட்டு ஊடகங்கள் என்ன கூறுகின்றன?

பட மூலாதாரம், MMuizzu@x

படக்குறிப்பு, மாலத்தீவு சுதந்திர தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோதியை அந்நாட்டு அதிபர் முகமது முய்சு அழைத்திருந்தார்20 நிமிடங்களுக்கு முன்னர்

பிரதமர் நரேந்திர மோதியின் சமீபத்திய மாலத்தீவு பயணம் உலகளவில் கவனத்தை ஈர்த்தது. ஜூலை 26 அன்று, மாலத்தீவின் 60வது சுதந்திர தின விழாவில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தனது தேர்தல் பிரசாரத்தின் போது ‘இந்தியா வெளியேறு’ (India Out) என்ற முழக்கத்தை முன்வைத்ததாலும், வெற்றி பெற்ற ஆரம்ப மாதங்களில் இந்தியா மீது கடுமையான நிலைப்பாட்டை எடுத்ததாலும் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அச்சமயத்தில், சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்துவது பற்றி முய்சு தொடர்ந்து பேசி வந்தார். ஆனால், இப்போது அதே முய்சு மிகப்பெரும் தேசிய விழாவில் பிரதமர் மோதியை சிறப்பு விருந்தினராக அழைத்தார்.

இக்காரணத்துக்காக, இந்தப் பயணம் சர்வதேச ஊடகங்களில் பரவலான கவனத்தைப் பெற்றது. மேலும் இது இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்ட மாற்றத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. குறிப்பாக, சீனாவும் மாலத்தீவில் தனது செல்வாக்கை அதிகரிக்க முயற்சிக்கும் நேரத்தில் இந்த பயணம் அமைந்தது முக்கியமாக கருதப்படுகிறது.

குளோபல் டைம்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம் பிரதமர் நரேந்திர மோதியின் மாலத்தீவு பயணம் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை சீனாவின் அரசு செய்தித்தாளான குளோபல் டைம்ஸ் விமர்சித்துள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

மோதியின் வருகையை இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியாகவும், மாலத்தீவில் சீனாவின் செல்வாக்கு குறைந்துவிட்டதாகவும் சில இந்திய ஊடகங்கள் சித்தரித்துள்ளதாக அந்த செய்தித்தாளின் வலைத்தளம் கூறுகிறது. இதுபோன்ற கருத்துகளை விமர்சித்துள்ள சீன நிபுணர்கள், அவை இந்திய ஊடகங்களின் “பழமையான சிந்தனையின்” விளைவு என்று கூறியுள்ளனர்.

“மோதியின் மாலத்தீவு வருகையை இந்திய ஊடகங்கள் காட்டிய விதம், ஒருவரின் வெற்றி மற்றவரின் தோல்வியாகக் கருதப்படும் விளையாட்டு (Zero-sum game) மனநிலையைப் பிரதிபலிக்கிறது” என்று அந்த செய்தித்தாள் எழுதியது.

சிங்குவா (Tsinghua) பல்கலைக்கழகத்தின் நேஷனல் ஸ்டிரேட்டஜி இன்ஸ்டிட்யூட்டின் ஆராய்ச்சித் துறையின் இயக்குநரான கியான் ஃபெங், குளோபல் டைம்ஸிடம் பேசும்போது இதுகுறித்து விரிவான கருத்துகளை வழங்கினார்.

“சில இந்திய ஊடக நிறுவனங்கள் சீனா மற்றும் இந்தியாவுடனான மாலத்தீவின் உறவுகளை ஒரு புவிசார் அரசியல் போட்டியாகக் கருதுகின்றன. இருப்பினும், மாலத்தீவுகள் ஒரு சுதந்திர நாடாகும், இது இயற்கையாகவே அதன் அண்டை நாடான இந்தியாவுடனான உறவுகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது மற்றும் சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் சீனாவால் முன்மொழியப்பட்ட பெல்ட் அண்ட் ரோடு (Belt and road) திட்டத்தில் இணைதல் உள்ளிட்ட பன்முகப்படுத்தப்பட்ட வெளியுறவுக் கொள்கையை தீவிரமாகப் பின்பற்றுகிறது” என்று அந்த செய்தித்தாள் எழுதியது.

“இந்தக் கொள்கை மாலத்தீவின் நலனுக்காகவே உள்ளது, மேலும் இந்த இரண்டு பாதைகளும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல” என்று கியான் ஃபெங் குளோபல் டைம்ஸிடம் தெரிவித்தார்.

சேனல் நியூஸ் ஏசியா

பட மூலாதாரம், MOHAMED AFRAH/AFP via Getty Images

பிரதமர் நரேந்திர மோதியின் மாலத்தீவு பயணம் குறித்து சிங்கப்பூரின் சேனல் நியூஸ் ஏசியா (Channel News Asia) தனது செய்திக்கு, “இந்தியப் பிரதமர் மோதி மாலத்தீவுடனான உறவுகளுக்கு புதிய பரிமாணத்தை அளிக்கிறார்” என்று தலைப்பிட்டது.

ஜூலை 25 ஆம் தேதி மோதி மாலத்தீவுக்கு வந்ததாகவும், ஜூலை 26 ஆம் தேதி சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட பிறகு, உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் பொருளாதார உதவிகளை அறிவித்ததன் மூலம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தியதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

2023 ஆம் ஆண்டு முய்சு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மாலத்தீவு சீனாவின் செல்வாக்கு மண்டலத்துக்குள் நகரும் என்று இந்தியா கவலைப்பட்டதாகவும், ஏனெனில் ஆட்சிக்கு வந்த உடனேயே, முய்சு மாலத்தீவில் இருந்த இந்திய ராணுவக் குழுவைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை எடுத்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு நாள் பயணத்தின் போது, மோதி பாதுகாப்பு அமைச்சகத்தின் புதிய தலைமையகத்தையும், இந்தியாவால் கட்டப்பட்ட பல திட்டங்களையும் திறந்து வைத்ததாக அந்த செய்தி கூறுகிறது. மேலும், இந்த வருகையை இந்தியா-மாலத்தீவு உறவுகளின் எதிர்காலத்துக்கான ஒரு புதிய திசையாக அதிபர் முய்சு விவரித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட்

பிரதமர் நரேந்திர மோதியின் இந்த இரண்டு நாள் பயணம், மாலத்தீவுக்கு மிகவும் முக்கியமானது என்று அமெரிக்க செய்தித்தாளான வாஷிங்டன் போஸ்ட் எழுதியது.

“இந்த பயணத்தின் போது, மோதி பொருளாதார உதவியை அறிவித்தார் மற்றும் முன்மொழியப்பட்ட தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்த முறையான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார்” என்று செய்தித்தாளின் வலைத்தளத்தில் ஒரு செய்தி தெரிவிக்கிறது.

“இந்தியப் பெருங்கடலில் கடல் வழித்தடங்களில் தனது பிடியை வலுப்படுத்தும் இந்தியாவின் லட்சியத்தைக் கருத்தில் கொண்டு இந்த இரண்டு நாள் பயணம் முக்கியமானதாகக் கருதப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் சீன சார்பு அதிபர் முகமது முய்சு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் எழுந்த ராஜீய ரீதியிலான பதற்றத்தைக் குறைப்பதற்கான அறிகுறியாக இந்தப் பயணம் அமைந்துள்ளது” என்றும் அந்த செய்தி கூறுகிறது.

“வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மாலத்தீவில் வளர்ச்சித் திட்டங்களை ஆதரிப்பதற்காக மாலத்தீவுக்கு 565 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியை மோதி அறிவித்தார்” என்று அச்செய்தி மேலும் கூறுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவதற்கான ஒரு முக்கியமான படியாக இந்த பயணம் கருதப்படுவதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி இன்டிபென்டன்ட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாலத்தீவு 1,200 தீவுகளைக் கொண்ட ஒரு குழு, இது உலகின் மிகவும் சிதறிய நாடு என்றும் அழைக்கப்படுகிறது.பிரிட்டிஷ் ஊடக நிறுவனமான தி இன்டிபென்டன்ட் தனது செய்தியில், மாலத்தீவின் உள் அரசியல், சீனா மீதான அதன் நாட்டம் மற்றும் சமீபத்திய நிகழ்வுகளை விரிவாக விளக்கியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மாலத்தீவின் வெளியுறவுக் கொள்கை பல ஏற்ற-இறக்கங்களைக் கண்ட நேரத்தில் மோதியின் வருகை நிகழ்ந்ததாக அறிக்கை கூறுகிறது.

“லட்சத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்த மோதி அரசு எடுத்த முடிவு மாலத்தீவில் கோபத்தை ஏற்படுத்தியது. இந்திய சுற்றுலாப் பயணிகளை தங்கள் நாட்டிலிருந்து விரட்டுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று மாலத்தீவு மக்கள் கருதினர். இதன் பின்னர், திரைப்பட நடிகர்கள் மற்றும் இந்திய பிரபலங்கள் பலர் மாலத்தீவில் சுற்றுலாவைப் புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்” என்று தி இன்டிபென்டன்ட் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தி கூறுகிறது.

“அதிபர் முய்சு முதலில் சீனாவுக்கும் பின்னர் இந்தியாவுக்கும் பயணம் செய்தபோது பதற்றம் மேலும் அதிகரித்தது. இதை இந்தியா ஒரு ராஜீய பின்னடைவாகக் கருதியது” என்று அச்செய்தி கூறுகிறது.

சீன பயணத்துக்குப் பிறகு, மாலத்தீவு சிகிச்சை, மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்துக்காக இந்தியாவை சார்ந்திருப்பதைக் குறைக்கும் என்று முய்சு அறிவித்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

“கடந்த ஆண்டு பிரதமர் மோதியின் பதவியேற்பு விழாவில் முய்சு கலந்துகொண்டதிலிருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் தொடர்பு அதிகரித்துள்ளது” என்று அச்செய்தி கூறுகிறது.

இந்த சம்பவங்கள் தற்போதைய சுற்றுப்பயணத்தின் பின்னணியின் ஒரு முக்கிய பகுதியாக அச்செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளன.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்

பிரதமர் மோதியின் இரண்டு நாள் பயணத்தின் முடிவில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு இந்த வருகை தீர்க்கமானது என்று அதிபர் முய்சு சமூக ஊடகங்களில் விவரித்ததாக, பாகிஸ்தானின் ஊடக நிறுவனமான தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் தனது வலைதளத்தில் எழுதியுள்ளது.

“மோதியின் இந்தப் பயணம் இந்தியா-மாலத்தீவு உறவுகளின் எதிர்காலத்துக்கு ஒரு தெளிவான திசையை அமைத்துள்ளது” என்று அச்செய்தி கூறுகிறது.

“எங்கள் உறவு தொடர்ந்து முன்னேறி வருகிறது. இது மக்களுக்கு இடையேயான உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று முய்சு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

“எங்கள் கூட்டாண்மை தொடர்ந்து வலுவடையும், மாலத்தீவு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் இந்தியா ஆதரவளிக்கும்” என்று மோதியின் சமூக வலைதள பதிவை ட்ரிப்யூன் செய்தி மேற்கோள் காட்டியது.

இந்த வருகையின் முடிவில் சமூக ஊடகங்களில் இரு தலைவர்களின் கருத்துகளுக்கு இச்செய்தி முக்கியத்துவம் அளித்துள்ளது. மோதியின் மாலத்தீவு பயணம், பொருளாதார ஒப்பந்தங்களுடன் மட்டுப்படுத்தப்படவில்லை, மாறாக மக்களிடையே அதிகரித்து வரும் உறவுகள் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாகவும் மாறியுள்ளது என்பதை இரு தலைவர்களின் கருத்துகள் சுட்டிக்காட்டுகின்றன என்று அச்செய்தி கூறுகிறது.

டாய்ச் வெல்

ஜெர்மன் ஊடக நிறுவனமான டாய்ச் வெல்லின் (Deutsche Welle) செய்தி , இந்த வருகையை அரசியல் நிகழ்வுகளின் பின்னணியில் மட்டுமல்லாமல், மாலத்தீவின் புவியியல் முக்கியத்துவத்தின் பின்னணியிலும் விளக்கியுள்ளது.

“இந்தியப் பெருங்கடலின் பல முக்கியமான கடல் வர்த்தக வழிகள் மாலத்தீவின் 1,192 தீவுகள் வழியாக செல்கின்றன, அவை பூமத்திய ரேகையின் 800 கிலோமீட்டர் நீளத்தில் பரவியுள்ளன” என்று எழுதியுள்ளது.

ஆடம்பர சுற்றுலாவுக்கு உலகில் பிரபலமானதாக இருந்தாலும், மாலத்தீவின் இந்தப் பகுதி மூலோபாய ரீதியாக மிகவும் உணர்திறன் வாய்ந்தது என்றும் இந்த செய்தி கூறுகிறது.

“இந்த அழகான கடற்கரைகள் மற்றும் ரிசார்ட்டுகளை கடந்து, மாலத்தீவு ஒரு புவிசார் அரசியல் மையமாக உள்ளது” என்று அச்செய்தி கூறுகிறது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டிக்கு இந்த புவியியல் இருப்பிடம் முக்கிய காரணமாக மாறி வருவதாக DW இன் செய்தி கூறியுள்ளது. இந்த பகுதி சுற்றுலாவின் மையம் மட்டுமல்ல, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பெரிய நாடுகளின் செல்வாக்குக்கும் மையமாக உள்ளது என்பதை அச்செய்தி வலியுறுத்துகிறது.

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாலத்தீவின் 60வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்2023 தேர்தலுக்குப் பிறகு, மாலத்தீவு ஆரம்பத்தில் ‘இந்தியா வெளியேறு’ பிரசாரத்தையும் சீனாவை நோக்கிய கொள்கையையும் ஏற்றுக்கொண்டது, ஆனால் ஒரு வருடத்துக்குள் நிலைமை மாறத் தொடங்கியது என்று, சிந்தனை மையமான ORF-இன் இணையதளத்தில் ஆய்வறிஞர் (associate fellow) ஆதித்யா சிவமூர்த்தி தன் பகுப்பாய்வில் எழுதியுள்ளார்.

“இந்தியப் படைகளை திரும்பப் பெறுதல் மற்றும் அதன் நெகிழ்வான நிலைப்பாடு, ஏப்ரல் 2024 தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் மக்கள் தேசிய காங்கிரஸின் (PNC) பெரும்பான்மை நிலை, உள்நாட்டு மட்டத்தில் பொருளாதார சிக்கல்கள் மற்றும் சீனாவிடமிருந்து எதிர்பார்க்கப்படும் ஆதரவு இல்லாதது, இவை அனைத்தும் மாலத்தீவை உள்நாட்டு அரசியலிலிருந்து புவிசார் அரசியலைப் பிரிக்க கட்டாயப்படுத்தியது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதித்யா சிவமூர்த்தி எழுதிய கட்டுரையில், “இந்தியாவும் மாலத்தீவும் தங்கள் வெளியுறவுக் கொள்கையை கட்சி அடிப்படையிலான விருப்பங்களிலிருந்து விலக்க முயற்சிக்கின்றன. பாரம்பரியமாக, மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (MDP) இந்தியாவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் PNC (மக்கள் தேசிய காங்கிரஸ்) சீனாவுடன் வலுவான உறவுகளை உருவாக்கியுள்ளது” என்று எழுதியுள்ளார்.

“ஆனால், முய்சு இந்தக் கட்சி அடிப்படையிலான கொள்கையை மாற்றியபோது, எல்லைகள் மற்றும் முக்கியமான பிரச்னைகளை மதிப்பதன் மூலம் இந்தியாவின் கவலைகளைக் குறைத்தார். அதற்கு ஈடாக, அவர் இந்தியாவிலிருந்து தேவையான பொருளாதார ஆதரவையும் உதவியையும் பெற்றார்.”

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு