மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சோ.சேனாதிராஜாவின் ஆறாவது மாத நினைவஞ்சலி நிகழ்வு சங்கானை கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (27.07.25) நடைபெற்றது.

தந்தை செல்வா நற்பணி மன்றமும் வட்டுக்கோட்டை பகுதி மக்களும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில்,  ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மாவையின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நினைவுப் பேருரைகள் ஆற்றப்பட்டன. பின்னர் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மறைந்த மாவை சோ.சேனாதிராஜாவின் புதல்வன் மா.கலையமுதன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் ஈ.சரவணபவன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சபா குகதாஸ், திரு.கஜதீபன், யாழ். மாநகர சபையின் உறுப்பினர் தர்ஷானந், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், தந்தை செல்வா நற்பணி மன்றத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.