Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மயங்க வைக்கும் மதுரை அரண்மனை – அழிந்தும் அழியாத கலைச் செல்வத்தின் வரலாறு காணொளிக் குறிப்பு, நான்கில் ஒருபகுதியே மிஞ்சியிருக்கும் எழில் கொஞ்சும் திருமலை நாயக்கர் அரண்மனையின் வரலாறுமயங்க வைக்கும் மதுரை அரண்மனை – அழிந்தும் அழியாத கலைச் செல்வத்தின் வரலாறு
54 நிமிடங்களுக்கு முன்னர்
தமிழ்நாட்டில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட பல அரண்மனைகளும் வேறு சில கட்டடங்களும் எஞ்சியிருந்தாலும், இந்த அரண்மனையின் எழில் பிற எல்லாவற்றையும்விட அற்புதமானது. திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட இந்த அரண்மனையின் நான்கில் ஒரு பகுதியே இப்போது எஞ்சியிருக்கிறது. இந்த அரண்மனை கட்டப்பட்ட காரணத்தைவிட, இதன் பெரும்பகுதி அழிக்கப்பட்டதன் காரணமும் அதற்குப் பிறகு நடந்த நிகழ்வுகளும் சுவாரஸ்யமானவை.
மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களிலேயே திறம்மிக்கவராக கருதப்படும் திருமலை நாயக்கர் எனப்படும், நாயக்க மரபின் ஏழாவது அரசராக கி.பி. 1623ஆம் ஆண்டில் பதவியேற்றார். இதற்குப் பிறகு பத்து முதல் பன்னிரண்டு ஆண்டுகள் வரை திருச்சிராப்பள்ளியே அரசின் தலைநகரமாக இருந்தது. அதன் பிறகு அவர் தன் தலைநகரை மதுரைக்கு மாற்றிக்கொண்டார். தலைநகரம் மதுரைக்கு மாற்றப்பட்ட பிறகு அந்நகரிலேயே தனக்கென ஒரு அரண்மனையைக் கட்ட ஆரம்பித்தார் திருமலை மன்னர். இந்த அரண்மனையின் பெரும் பகுதி கி.பி. 1636ல் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த அரண்மனை வளாகத்தின் பரப்பு சுமார் ஒரு சதுர மைலாக இருந்திருக்கலாம் என தனது Madurai Through the Ages நூலில் குறிப்பிடுகிறார் டாக்டர் டி. தேவகுஞ்சரி. இந்த அரண்மனை கட்டப்பட்டபோது சொர்க்கவிலாசம், ரங்க விலாசம் என இரு பகுதிகளைக் கொண்டிருந்தது. திருமலை நாயக்கர் சொர்க்க விலாசத்திலும் அவருடைய தம்பி முத்தியாலு நாயக்கர் ரங்க விலாசத்திலும் வசித்தனர். இது தவிர, இசைக்கருவிகள் இசைக்கும் இடம், பூஜைக்கான இடம், அரியணை மண்டபம், நாடகசாலை, மலர் வனங்கள், பணி செய்வோர் வசிக்கும் இடங்கள் ஆகியவையும் அரண்மனைக்குள் இருந்தன.
தற்போது அரண்மனையின் பிரதான வாசல், கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த அரண்மனை கட்டப்பட்ட காலத்தில் பிரதான வாயில், வடக்குப் பகுதியில் அமைந்திருந்தது. தற்போதுள்ள வாயில், 19ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. இப்போதுள்ள பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் மிகப்பெரிய முற்றமும் அதன் மூன்று பக்கங்களிலும் மிகப்பெரிய தூண்களால் தாங்கப்படும் வராண்டாவும் இருக்கின்றன. இந்த முற்றத்தைக் கடந்து உள்ளே சென்றால், இரண்டு குதிரைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் படிகளை அடையலாம். அந்தப் படிகளில் ஏறினால், இந்த அரண்மனையின் மிக முக்கியமான பகுதியை அடையலாம்.
இந்த அரண்மனையின் வடமேற்கில் மிகவும் அழகான, வேலைப்பாடுகள் மிகுந்த ஒரு அரங்கம் இருக்கிறது. இது நாடக சாலை எனக் குறிப்பிடப்படுகிறது. மாலை நேரங்களில் அரசர் இங்குதான் தன் தேவியருடன் அமர்ந்து நாடகங்களையும் கலை நிகழ்ச்சிகளையும் தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் ரசித்திருக்கக்கூடும் என்கிறது தேவகுஞ்சரியின் நூல்.
அரண்மனையிலிருந்து வடக்கில் சில மீட்டர்கள் தூரத்தில் ஒரு சந்துக்குள் மிகப் பெரிய அளவிலான பத்துத் தூண்கள் இருக்கின்றன. இவை இந்த அரண்மனையின் ஒரு பகுதியாக இருந்தவைதான். இந்தப் பகுதிதான் ரங்க விலாசம் என அழைக்கப்பட்ட பகுதி. இந்த பத்துத் தூண்களுக்குக் கிழக்கில்தான் இந்த அரண்மனையின் பிரதான நுழைவாயில் இருந்தது.
திருமலை நாயக்கருக்குப் பிறகு அவரது மகன் முத்து அழகாத்ரி என்ற முத்து வீரப்ப நாயக்கர் மதுரையின் மன்னரானார். ஆனால், அவர் சில மாதங்களே ஆட்சியில் இருந்தார். அவருக்குப் பிறகு முத்து வீரப்ப நாயக்கரின் மகனான சொக்கநாத நாயக்கர் மன்னரானார். அவர் தனது தலைநகரைத் திருச்சிராப்பள்ளிக்கு மாற்றினார். இது 1666ல் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தான் திருச்சிராப்பள்ளியிலேயே தொடர்ந்து வசிப்பதால், தனக்கென ஒரு அரண்மனையை அங்கே கட்ட விரும்பினார் சொக்கநாத நாயக்கர். செலவுகளை மிச்சப்படுத்தவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ, மதுரையில் இருந்த அரண்மனையை இடித்து அந்தப் பொருட்களை வைத்து திருச்சியில் அரண்மனையைக் கட்ட அவர் முடிவுசெய்தார். இதனால், இந்த அரண்மனையின் பெரும்பகுதி இடித்துத் தள்ளப்பட்டது. அதிலிருந்து பொருட்கள் திருச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. “ஆசியாவின் மிக அற்புதமான மாளிகை” என்று மதுரா கன்ட்ரி மேனுவலில் ஜே.ஹெச். நெல்சன் குறிப்பிடும் இந்த மாளிகையின் பெரும்பகுதி இப்படியாக அழிந்தது.
இதற்குப் பிறகு 18ஆம் நூற்றாண்டில் நடந்த சில போர்களில் எஞ்சியிருந்த கட்டடங்களும் பெரும் சேதமடைந்தன. இடிந்துபோன அரண்மனை பகுதிகளில் குடிசைகள் கட்டப்பட்டு, அதில் மக்கள் குடியேறினர். அப்போதும் சில சுவர்கள் இடித்துத் தள்ளப்பட்டன. 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்த அரண்மனை பெருமளவில் சேதமடைந்துவிட்டது. அப்படியே விடப்பட்டிருந்தால் இந்த அரண்மனை முழுமையாக அழிந்திருக்கக்கூடும்.
இந்த அரண்மனையில் உள்ள தூண்கள் பாதுகாப்புக்காக பல முறை சுண்ணாம்பால் பூசப்பட்டுவிட்டாலும், இரண்டு தூண்களில், நாயக்கர் காலத்திலேயே வரையப்பட்ட ஓவியங்கள் இன்னும் அழியாமல் கிடைத்தன. அவற்றை இப்போதும் பார்க்க முடியும். இந்த அரண்மனை புதுப்பிக்கப்பட்ட பிறகு, 1886வாக்கில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சில காலம் இங்கிருந்து செயல்பட்டது. இதற்குப் பிறகு மாவட்ட நீதிமன்றம் 1970 வரை இங்கிருந்து செயல்பட்டது. 1971ல் இந்த அரண்மனையை பாதுகாக்கப்பட்ட சின்னமாக மாநில தொல்லியல் துறை அறிவித்தது.
தயாரிப்பு: முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஒளிப்பதிவு: விக்னேஷ்
படத்தொகுப்பு: சாம் டேனியல்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு