நகை வாங்குவது போல சென்று ஒரு கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்றதாக நான்கு பேரை பெருமாநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகதீஷ் (47). இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

பெருமாநல்லூரில் திருப்பூர் சாலையில் பார்வதி ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடை நடத்தி வரும் பிரகதீஷ் தனது மனைவியுடன் சேர்ந்து நகைக் கடையை நிர்வகித்து வருகிறார்.

நகைக்கடையில் நிவேதா மற்றும் ராமதாஸ் என இருவர் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி இரவு வழக்கம் போல கடையை பூட்டுவதற்கு முன் பிரகதீஷ் கணக்கு பார்த்துள்ளார். அப்போது வெள்ளி பொருட்களில் ஒரு கிலோ எடை குறைவாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் தனது கடையிலிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது, அன்று பிற்பகல் சுமார் 1.30 மணி அளவில் நான்கு பெண்கள் நகை வாங்குவது போல வந்து, நகை கடை பணியாளர்கள் கவனத்தை திசை திருப்பிவிட்டு வெள்ளி பொருட்களை திருடியது தெரிய வந்தது.

அதிர்ச்சியடைந்த பிரகதீஷ் உடனடியாக பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே டி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த கலைவாணி (37), ஜெயமாலா (42), தாரணி (21) மற்றும் கொங்கர் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஷோபனா (28) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ வெள்ளிப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இவர்கள் நால்வரையும் கோபிசெட்டிபாளையத்தில் வைத்து கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், கைது செய்யப்ட்ட ஜெயமாலா மீது ஏற்கெனவே ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் கவுந்தப்பாடி காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், நான்கு பெண்களும் நகைக்கடையில் பணியாளர்களின் கவனத்தை திசை திருப்பி விட்டு லாவகமாக வெள்ளி பொருட்களை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.