போராட்டத்தில் மேலும் ஒரு கிராமம்: பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு புதிய சிக்கலா? பிபிசி தமிழ் கள ஆய்வு

படக்குறிப்பு, கோகிலாஎழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ் 28 ஜூலை 2025, 02:33 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

காஞ்சிபுரத்தில் உள்ள வளத்தூர் கிராம மக்களுக்கு அதிர்ச்சியூட்டக் கூடிய நாளாக கடந்த ஜூலை 24-ஆம் தேதி அமைந்தது.

‘பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்துக்காக கிராமத்தில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்த உள்ளதால், அசல் ஆவணங்கள் மற்றும் நகல்களுடன் நேரில் ஆஜராக வேண்டும்’ என நில எடுப்பு அதிகாரிகள் அனுப்பிய நோட்டீஸை இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கவில்லை.

புதிய விமான நிலையம் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியை ஒட்டி இக்கிராமம் அமைந்துள்ளது.

இங்குள்ள சுமார் 900 ஏக்கர் நிலங்களின் உரிமையாளர்களாக பட்டியல் சமூக மக்களே உள்ளனர்.

“470 ஏக்கருக்கும் மேல் நிலங்களை கையகப்படுத்த உள்ளதாக கூறுகின்றனர். ஆனால், நிலங்களை விட்டுக் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை” என்கிறார், கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரம் நாட்களைக் கடந்து ஏகனாபுரம் கிராம மக்கள் போராடி வரும் நிலையில், அவர்களின் போராட்டத்தில் வளத்தூர் மக்களும் இணைத்துக் கொண்டுள்ளனர்.

இதனால் திட்டம் செயல்படுத்தப்படுவதில் உள்ள சிக்கல் மேலும் தீவிரமடைந்துள்ளதா? பரந்தூரை சுற்றியுள்ள கிராமங்களில் என்ன நிலவரம்? என்பதை அறிய களத்துக்குச் சென்றது பிபிசி தமிழ்.

படக்குறிப்பு, “எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த நிலத்தை விட்டு வேறு எங்கும் செல்வதற்கு விருப்பப்படவில்லை” எனக் கூறுகிறார் செல்வி.5746.18 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த அனுமதி

சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம் அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 5746.18 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசின் தொழில்துறை அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1997ன்கீழ் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும் இதற்கென 1822.45 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உள்ளதாகவும் அரசு அறிவித்தது.

இதற்கான அரசாணை கடந்த 2023 அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. விமான நிலையம் அமைவதற்கு ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் ஆகிய வட்டங்களில் உள்ள கிராமங்களில் இருந்து நிலங்களைக் கையகப்படுத்தப்படும் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள், சிறப்பு துணை ஆட்சியர்கள், சிறப்பு தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் என 326 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பரந்தூரைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் விமான நிலையம் அமைவதற்கான திட்டமும் பிற பகுதிகளில் விமான நிலையத்தை அணுகுவதற்கான சாலைகளும் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகளை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) மேற்கொண்டு வருகிறது.

படக்குறிப்பு, பகுதியில் நெல் சாகுபடி பிரதான தொழிலாக உள்ளதுஏகனாபுரத்தில் என்ன நிலவரம்?

விமான நிலையம் அமைய உள்ளதாக அறிவிப்பு வெளியான நாளில் இருந்து சுமார் 1090 நாட்களைக் கடந்து ஏகனாபுரம் கிராம மக்கள் போராடி வருகின்றனர். இக்கிராமத்தில் சுமார் இரண்டாயிரம் பேர் வசிக்கின்றனர்.

“ஏகனாபுரத்தை அடிப்படையாக வைத்துப் போராட்டம் நடப்பதற்குக் காரணம், விமான நிலைய திட்டத்தில் ஊரையே முழுதாக எடுத்துக் கொள்ள உள்ளனர். ஒரு வீடு கூட மிஞ்சுவதற்கு வாய்ப்பில்லை” எனக் கூறுகிறார், இப்பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன்.

சில கிராமங்களில் குடியிருப்புகளை விட்டுவிட்டு நிலத்தை மட்டும் எடுப்பதாகக் குறிப்பிட்ட சுப்ரமணியன், “வரைபடத்தில் இருந்து ஏகனாபுரம் என்ற ஊரே இல்லாமல் போய்விடும் என்பதால் போராட்டத்தை முன்னெடுத்தோம்” என்றார்.

ஏகனாபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பிபிசி தமிழ் சென்றது. அங்கு விவசாயப் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தன. இப்பகுதியில் நெல் சாகுபடி பிரதான தொழிலாக உள்ளது. ஏகனாபுரத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் பட்டியல் சமூக மக்களும் வசிக்கின்றனர்.

“எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த நிலத்தை விட்டு வேறு எங்கும் செல்வதற்கு விருப்பப்படவில்லை” எனக் கூறுகிறார், ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வி.

இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்து வருகிறார்.

“எங்களுக்கு விவசாயம் மட்டும் தான் தெரியும். அதைக் கொடுத்துவிட்டு நாங்கள் எங்கே போவது?” எனக் கேள்வி எழுப்பிய செல்வி, “இந்த மண்ணில் உயிர் விடுவதற்கு தயாராக இருக்கிறோம். ஆனால், எங்கள் நிலங்களை விட்டுக் கொடுக்க மாட்டோம்” எனக் கூறுகிறார்.

நிலத்தை அரசு பறித்துவிடுமோ என்ற அச்சம் உள்ளதாகவும் இந்த ஊரை விட்டு எங்கேயும் போக தெரியாது எனவும் அவர் தெரிவித்தார்.

படக்குறிப்பு, சுப்ரமணியன்நீர்நிலைகளில் விமான நிலையம் – சர்ச்சையும் விளக்கமும்

“2021 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் விமான நிலையப் பணிகள் வேகம் எடுத்தன. நிலத்தை மாநில அரசு தேர்வு செய்ததாக மத்திய அமைச்சர்கள் கூறினர். நீர் நிலைகள் அதிகமுள்ள பகுதி என்பதால் இங்கு திட்டம் அமைவதில் உள்ள சவால்களைக் கூறினோம். அதிகாரிகள் கேட்கவில்லை” எனக் கூறுகிறார், சுப்ரமணியன்.

ஏழு கி.மீ தொலைவு வரை நீளும் கம்பன் கால்வாய், எண்பதுக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் ஆகியவற்றை அழித்துவிட்டு அதன் மீதே விமான நிலையம் அமைய உள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

நீர்நிலைகளில் விமான நிலையம் அமைவது தொடர்பான சர்ச்சைக்கு கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், ‘நீர்நிலைகளை சீர்செய்வது தொடர்பாக உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை அரசு கவனத்தில் கொள்ளும். வளர்ச்சி ஒருபுறம் என்றாலும் மக்களின் வாழ்வதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்’ எனக் கூறப்பட்டுள்ளது.

படக்குறிப்பு, நிலங்களை விட்டுக் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை” என்கிறார் மகேந்திரன்.”அறிக்கையை வெளியிடாதது ஏன்?”

விமான நிலையம் அமைவதற்கு மக்கள் எதிர்ப்பு காட்டியதால் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் கமிட்டி ஒன்றை மாநில அரசு அமைத்தது.

பரந்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு நடத்தி இக்குழு அறிக்கை அளிக்கும் எனவும் அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

“தற்போது வரை அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. ஊருக்குள் எந்த அதிகாரியும் வரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.” எனக் கூறுகிறார், ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணபதி.

ஏகனாபுரத்துக்குள் நுழையும் போது ஏராளமான தடுப்பரண்கள் போடப்பட்டிருந்தன. ஆனால், காவல்துறை பாதுகாப்பு என எதுவும் தென்படவில்லை.

கிராம மக்களில் பலரும் தங்களின் விவசாயப் பணிகளில் ஆர்வம் செலுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. ஊரில் உள்ள வயலூர் ஏரி அமைந்துள்ள சாலையில் விமான நிலைய எல்லைகளை வரையறுக்கும் கோடுகளை அதிகாரிகள் வரைந்துள்ளனர்.

படக்குறிப்பு, ஊருக்குள் எந்த அதிகாரியும் வரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் எனக் கூறுகிறார், ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணபதி.நிலங்களை மக்கள் ஒப்படைக்கிறார்களா?

இந்நிலையில், விமான நிலைய திட்டத்துக்காக கிராம மக்கள் பலரும் தங்களின் நிலங்களை பத்திரப்பதிவு செய்வதாக காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் செய்தி வெளியானது.

பரந்தூர், நெல்வாய், பொடவூர், அக்கமாபுரம், வளத்தூர் ஆகிய ஐந்து கிராமங்களில் இருந்து 19 பேர் தங்களின் நிலங்களை வழங்க சம்மதம் தெரிவித்ததாகவும் இவர்களின் 17 ஏக்கர் நிலங்களை பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்திடம் நிலங்களை ஒப்படைத்த மக்களுக்கு 9.22 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனை மறுக்கும் ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன், “எங்கள் ஊரில் உள்ள சுமார் 15 சதவீத நிலத்தின் உரிமையாளர்கள் வெளியூரை சேர்ந்தவர்கள். அவர்களில் சிலர் நிலத்தை ஒப்படைத்துள்ளனர். அதனையே எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் நிலத்தை தாங்களாகவே தந்தது போன்று அதிகாரிகள் தவறான தகவல் பரப்புகின்றனர்” என்றார்.

“பாதிப்பு வரும் எனத் தெரியாது” – வளத்தூர் மக்கள்

ஏகனாபுரம் பகுதி மக்களின் போராட்டத்துக்கு கடந்த சில நாட்களாக வளத்தூர் கிராம மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை 23-ஆம் தேதி போராட்டம் ஒன்றை நடத்தி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வளத்தூருக்கு பிபிசி தமிழ் சென்றது. விவசாயம் மற்றும் அவை சார்ந்த தொழில்களே இங்கு பிரதானமாக உள்ளது. பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் இக்கிராமத்தில் உள்ள நிலங்கள் அனைத்தும் அவர்களிடமே உள்ளன.

“இதுவரை எங்கள் கிராமத்துக்கு பாதிப்பு வரும் எனத் தெரியாது. பத்து நாட்களுக்கு முன்னர் ஒவ்வொரு வீட்டுக்கும் கடிதம் வந்தது. இந்தக் கடிதத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்கிறார், கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன்.

“பசுமை விமான நிலையம் அமைய உள்ளதாக அரசு கூறுகிறது. விவசாய பூமியில் பசுமையை அழித்துவிட்டு விமான நிலையம் நிலையம் கொண்டு வருவது சரியானதா?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

“அதிகாரிகளால் மன உளைச்சல்”

கடந்த 24 ஆம் தேதியன்று வளத்தூர் கிராம மக்களிடம் நேர்காணல் ஒன்றை நில எடுப்பு வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்தியுள்ளனர். ” பட்டா விவரம், ஆதார் கார்டு, பாஸ்புக் கொண்டு வருமாறு கூறினர். ஆனால், கையகப்படுத்தப்பட உள்ள சர்வே எண்களை அறிவிக்கவில்லை. நிலங்களை வலுக்கட்டாயமாக எடுக்க அரசு திட்டமிடுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது” என்கிறார், மகேந்திரன்.

அதிகாரிகள் நடத்திய நேர்காணலைத் தொடர்ந்து தங்கள் கிராம மக்கள் அதிக மனஉளைச்சலில் உள்ளதாகக் கூறினார், வளத்தூர் பகுதியில் பிபிசி தமிழிடம் பேசிய கோகிலா. இதே கிராமத்தில் 35 ஆண்டுகளாக வசித்து வருவதாகக் கூறும் அவர், “நிலத்தைக் கொடுப்பதற்கு யாரும் தயாராக இல்லை” என்கிறார்.

அரசின் அறிவிப்பால் வளத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களிடம் கொந்தளிப்பான மனநிலை நிலவுவதை நேரில் பார்க்க முடிந்தது.

“இழப்பீடு 60 லட்சம்… ஆனால், ஏக்கர் 3 கோடி”

” கிராம மக்களிடம், ‘பத்திரப்பதிவு செய்து நிலத்தை ஒப்படைக்கவில்லை என்றால் பணத்தை நீதிமன்றத்தில் கட்டிவிடுவோம் என அதிகாரிகள் மிரட்டுகின்றனர்” எனக் கூறுகிறார், ஏகனாபுரத்தைச் சேர்ந்த சுப்ரமணியன்.

நிலங்களை ஒப்படைக்கும் மக்களுக்கு ஏக்கருக்கு சுமார் 60 லட்ச ரூபாய் வரை அரசு இழப்பீடு கொடுப்பதாகக் கூறும் அவர், “விமான நிலையம் அமைய உள்ளதாகக் கூறும் இடத்துக்கு அருகே ஏக்கர் 3 கோடி ரூபாய்க்கு விற்பனையாகிறது. முன்பு சதுர அடி 200 ரூபாயாக இருந்தது. தற்போது 2 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது” என்கிறார்.

சில தனிநபர்களின் நலன்களுக்காக மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டுவதாக சுப்ரமணியன் குற்றம்சாட்டினார்.

படக்குறிப்பு, பரந்தூர் பகுதியில் தினந்தோறும் பத்திரப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது என்கிறார் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ்வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுவது என்ன?

கிராம மக்களின் அச்சம் தொடர்பாக, புதிய பசுமைவெளி விமான நிலையத் திட்ட சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் வெற்றிவேலை பிபிசி தமிழ் நேரில் சந்தித்து விளக்கம் கேட்டது.

“நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தான் பதில் அளிக்க வேண்டும்” என்று மட்டும் பதில் அளித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்திப்பதற்கு பிபிசி தமிழ் சென்றது. அலுவல் பணிகளில் இருப்பதால் மாவட்ட வருவாய் அலுவலரை சந்திக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷிடம் பிபிசி தமிழ் பேசியது. “பரந்தூர் பகுதியில் தினந்தோறும் பத்திரப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. இன்று கூட 5 பத்திரப் பதிவுகள் நடந்துள்ளன” எனக் கூறினார்.

“ஏக்கருக்கு அதிக இழப்பீடு கொடுக்கப்படுகிறது. சில பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக இழப்பீடு கேட்பதால் சற்று தாமதம் ஏற்படுகிறது” எனக் கூறினார்.

“இழப்பீடு அதிகம் வேண்டும் என ஏகனாபுரம், வளத்தூர் பகுதி மக்கள் கூறவில்லையே?” என்றோம்.

“ஏகனாபுரம் பகுதியில் மட்டுமே எதிர்ப்பு உள்ளது. மற்ற கிராமங்களில் எதிர்ப்பு இல்லை. அவர்களின் மறுகுடியமர்வுக்கு தலா 10 சென்ட் வரை அரசு வழங்குகிறது” எனத் தெரிவித்தார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”குற்றச்சாட்டில் உண்மையில்லை”

“விமான நிலையம் அமைய உள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் உள்ள நிலங்களை யாருக்கும் விற்க முடியாது” எனக் கூறிய வெங்கடேஷ், “வேறு நபர்களுக்கு விற்க முடியாத அளவுக்கு பத்திரப்பதிவு முடக்கப்பட்டுள்ளது. பட்டா மாறுதலும் செய்ய முடியாது. அங்கு திட்டம் வருவதில் மாற்றுக் கருத்தில்லை” என்கிறார்.

சில தனி நபர்களின் நலனுக்காக வருவாய்த்துறை அதிகாரிகள் செயல்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்துக் கேட்டபோது, ” அநத குற்றச்சாட்டில் உண்மையில்லை” என்று மட்டும் பதில் அளித்தார்.

பரந்தூர் விமான நிலையம் குறித்து கடந்த ஜனவரி 19-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, டெல்லி, கொல்கத்தால், ஐதராபாத், பெங்களூரு ஆகிய விமான நிலையங்களுடன் ஒப்பிடும்போது சென்னை விமான நிலையம் மிகச் சிறியதாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஆண்டுக்கு 2 கோடிப் பேர் சென்னை விமான நிலையத்தைப் பயன்படுத்துவதாகக் கூறிய தங்கம் தென்னரசு, “அடுத்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 8 கோடியாக உயரும்” எனத் தெரிவித்தார்.

பயணிகளின் வசதி என்பதைத் தாண்டி தொழில் வளர்ச்சிக்கும் பரந்தூர் விமான நிலையம் தேவையாக உள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

அதேநேரம் விவசாய நிலங்களுக்கும் நீர்நிலைகளுக்கும் பாதிப்பில்லாமல் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு அரசு முன்வர வேண்டும் என்பதே பரந்தூரைச் சுற்றியுள்ள கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு