கருத்தரித்தல் மையத்தில் வேறொருவரின் குழந்தையை கொடுத்து மோசடி – தம்பதி உண்மையை கண்டுபிடித்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்எழுதியவர், அமரேந்திர யார்லகடாபதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

“அவர்கள் என் கருமுட்டையையும், என் கணவரின் விந்தணுவையும் எடுத்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுத் தருவதாகச் சொன்னார்கள். ஆனால், அவர்கள் எங்களுக்குக் கொடுத்த குழந்தை எங்களுடையது அல்ல என்பதையும், நாங்கள் ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்தோம்,” என்று கூறி, ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் ஹைதராபாத்தில் உள்ள யுனிவர்சல் சிருஷ்டி கருத்தரித்தல் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு எதிராகப் புகார் அளித்துள்ளனர்.

இந்தப் புகாரை விசாரித்த ஹைதராபாத் கோபாலபுரம் காவல்துறை, கருத்தரித்தல் மையம் விதிமுறைகளை மீறி நடத்தப்படுவதைக் கண்டறிந்தது.

வாடகைத் தாய் என்ற போர்வையில் குழந்தைகள் விற்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து, அந்த மையத்தின் அமைப்பாளர் மற்றும் மருத்துவர் நம்ரதா உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹைதராபாத் வடக்கு மண்டல துணை ஆணையர் ரஷ்மி பெருமாள் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இது தொடர்பாக, யுனிவர்சல் கிரியேஷன் சென்டரின் நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ள பிபிசி முயன்றது. அவர்கள் காவல்துறையின் காவலில் இருந்ததால் அவர்களிடம் பேச முடியவில்லை.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், HYDPolice

படக்குறிப்பு, யுனிவர்சல் சிருஷ்டி கருத்தரித்தல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதாக டி.சி.பி ரஷ்மி பெருமாள் தெரிவித்தார்.உண்மையில் என்ன நடந்தது?

செகந்திராபாத் பகுதியில் வசிக்கும் ராஜஸ்தானைச் சேர்ந்த (காவல்துறையினர் அவர்களின் பெயர்களை வெளியிட மறுத்துவிட்டனர்) ஒரு தம்பதியினர், செயற்கை முறை கருத்தரித்தல் (IVF) மூலமாக குழந்தை பெற்றுக் கொள்வதற்காக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் செகந்திராபாத்தில் உள்ள யுனிவர்சல் சிருஷ்டி ஃபெர்டிலிட்டி அண்ட் ரிசர்ச் சென்டரை (சிருஷ்டி டெஸ்ட் டியூப் சென்டர்) அணுகினர்.

“66,000 ரூபாய் பணம் செலுத்தி அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டோம். அந்தக் கருத்தரித்தல் மையத்தின் மேலாளரான மருத்துவர் நம்ரதா, வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ளுமாறு எங்களுக்கு அழுத்தம் கொடுத்தார். நாங்கள் தானம் செய்த முட்டைகள் மற்றும் விந்தணுக்களைப் பயன்படுத்தி ஒரு கருவை உருவாக்கி, வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர்கள் கூறினர்,” என ராஜஸ்தான் தம்பதியினர் காவல்துறையில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளனர்.

கருத்தரித்தல் மையத்தின் மேலாளர் 30 லட்ச ரூபாய் வரை செலவாகும் என்று கூறியதாக அந்தத் தம்பதியினர் தெரிவித்தனர்.

அதன் பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பரில், அந்தத் தம்பதியினர் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கருத்தரித்தல் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களின் கருமுட்டைகள் மற்றும் விந்தணுக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், HYDPolice

படக்குறிப்பு, யுனிவர்சல் சிருஷ்டி கருத்தரித்தல் மற்றும் ஆராய்ச்சி மையம்யுனிவர்சல் சிருஷ்டி கருத்தரித்தல் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு செகந்திராபாத், விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடாவில் கிளைகள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

செப்டம்பர் 23 ஆம் தேதி, ராஜஸ்தான் தம்பதியினருக்கு ஒரு வாடகைத் தாய் (குழந்தையை சுமக்க ஒப்பந்தம் செய்த ஒரு பெண்) கண்டுபிடிக்கப்பட்டதாக இந்த மையத்தின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

“பின்னர், கருத்தரித்தல் மைய மேலாளர்கள் பல்வேறு கட்டங்களில் பணம் வசூலித்தனர். இதனால், இந்த ஆண்டு மே மாதத்திற்குள், நாங்கள் 30.26 லட்ச ரூபாயை செலுத்திவிட்டோம்,” என்று பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

கருவின் வளர்ச்சி தொடர்பான ஸ்கேன்களையும் அவர்கள் அவ்வப்போது காண்பித்ததாகவும் அப்பெண் கூறினார்.

பட மூலாதாரம், HYDPolice

படக்குறிப்பு, யுனிவர்சல் சிருஷ்டி கருத்தரித்தல் மற்றும் ஆராய்ச்சி மையம்குழந்தை தங்களுடையது இல்லை என்பதை கண்டுபிடித்தார்கள் ?

அந்த மோசடி எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது என்பதை காவல்துறை ஊடக சந்திப்பில் வெளிப்படுத்தியது.

அவர்கள் அளித்த விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

குழந்தை பிறந்த பிறகு டி.என்.ஏ பரிசோதனை நடத்த கருத்தரித்தல் மையத்திற்கும் , ராஜஸ்தான் தம்பதியினருக்கும் இடையே ஒப்பந்தம் உள்ளது.

பிரசவத்திற்கு முன்பு டி.என்.ஏ பரிசோதனை செய்யக் கோரிக்கை வைத்திருந்தாலும், மருத்துவர் நம்ரதா அதைப் புறக்கணித்ததால் அந்தத் தம்பதியினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

பின்னர், வாடகைத் தாய் அதிக பணம் கேட்பதாக அந்த மையத்தின் நிர்வாகிகள் தொலைபேசியில் தெரிவித்ததை அடுத்து, தம்பதியினர் 2 லட்ச ருபாய் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.

பின்னர் அவர்களுக்கு புதிதாகப் பிறந்த குழந்தை வழங்கப்பட்டது.

டி.என்.ஏ அறிக்கைகள் இல்லாமல் குழந்தையை கொடுத்ததால் சந்தேகமடைந்த ராஜஸ்தான் தம்பதியினர் டி.என்.ஏ மாதிரிகளை எடுத்துள்ளனர்.

ஆனாலும், கருத்தரித்தல் மைய நிர்வாகிகள் அது தொடர்பான சோதனைகளைத் தவிர்த்தால் தம்பதியினருக்கு சந்தேகம் வலுப்பட்டுள்ளது.

பின்னர், அந்த தம்பதியினர் டெல்லிக்குச் சென்று, குழந்தை உட்பட மூவருக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்துள்ளனர்.

அதனையடுத்து உண்மை வெளிவந்தது.

குழந்தை தங்களுடையது இல்லை என்பது அவர்களுக்கு தெரியவந்தது.

வாடகைத் தாய் கொள்கை பின்பற்றப்படவில்லை

“இது தொடர்பாக விவாதிக்க, ஜூன் 24-ஆம் தேதி செகந்திராபாத்தில் உள்ள கருத்தரித்தல் மையத்திற்கு நாங்கள் சென்ற போது, மருத்துவர் நம்ரதா எங்களைச் சந்திக்காமலேயே சென்றுவிட்டார்” என்று ராஜஸ்தான் தம்பதியினர் தங்கள் புகாரில் தெரிவித்தனர்.

தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தம்பதியினர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

யுனிவர்சல் சிருஷ்டி கருத்தரித்தல் மையத்தின் மேலாளர் வாடகைத் தாய் கொள்கையைப் பின்பற்றவில்லை என்பது விசாரணையில் தெரியவந்ததாக டி.சி.பி ரஷ்மி பெருமாள் தெரிவித்தார்.

“யுனிவர்சல் சிருஷ்டி கருத்தரித்தல் மையத்தின் நிர்வாகிகள், ஹைதராபாத்தில் வசிக்கும் அசாமைச் சேர்ந்த முகமது அலி ஆதிக் மற்றும் நஸ்ரீன் பேகம் தம்பதியினருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். குழந்தை பிறந்தவுடன், அவர்கள் அதை ராஜஸ்தான் தம்பதியினரிடம் ஒப்படைத்து, அது அவர்களின் கருமுட்டை மற்றும் விந்தணுவிலிருந்து பிறந்ததாகக் கூறினர்” என்று ரஷ்மி பெருமாள் கூறினார்.

“குழந்தையைப் பெற்றெடுத்த பெண், ஹைதராபாத்திலிருந்து விசாகப்பட்டினத்திற்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு குழந்தை பெற்றெடுத்த பிறகு அவருக்கு 80-90 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாக எங்கள் விசாரணையில் தெரியவந்தது” என்று குறிப்பிட்ட ரஷ்மி பெருமாள்,

“வாடகைத் தாய் என்ற பெயரில் குழந்தைகளை விற்ற வழக்கில், அசாமில் இருந்து ஒரு தம்பதியினரையும், அவர்களுக்கு உதவிய ஒரு முகவரையும் நாங்கள் கைது செய்துள்ளோம்” என்றும் தெரிவித்தார்.

பிறகு அந்தக் குழந்தை ஒரு நர்சரிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ரஷ்மி பெருமாள் கூறினார்.

பட மூலாதாரம், HYDPolice

கைது செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள்

அத்தலூரி நம்ரதா என்ற பச்சிபாலா நம்ரதா என்பவர் தான் யுனிவர்சல் சிருஷ்டி கருத்தரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மேலாளர்.பச்சிபாலா ஜெயந்த் கிருஷ்ணா என்பவர் நம்ரதாவின் மகன். அவர் ஒரு வழக்கறிஞர் போல் நடித்து வந்துள்ளார். மையத்தில் உள்ள அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் அவரே கையாண்டு வந்துள்ளார். யாராவது கேள்வி கேட்டால், ‘சட்ட’ பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும் என அவர் மிரட்டி வந்திருப்பதாக டி.சி.பி கூறினார்.சி. கல்யாணி என்பவர் விசாகப்பட்டினத்தில் உள்ள யுனிவர்சல் கிரியேஷன் சென்டரில் மேலாளராகப் பணிபுரிகிறார்.கொல்லமண்டல சென்னா ராவ் எனும் நபர் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிகிறார்.நர்குலா சதானந்தம் செகந்திராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் மருத்துவராகவும், யுனிவர்சல் சிருஷ்டி மையத்தில் மயக்க மருந்து நிபுணராகவும் உள்ளார்.அசாம் தம்பதியினரின் வழக்கில் தனஸ்ரீ சந்தோஷி என்பவர் முகவராக இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.முகமது அலி ஆதிக்கும் நஸ்ரின் பேகமும் அசாமைச் சேர்ந்தவர்கள். அவர்கள் குழந்தையைப் பெற்றெடுத்து விற்றதாகக் காவல்துறை கூறியது.2021 இல் அனுமதிகள் ரத்து

பட மூலாதாரம், HYDPolice

படக்குறிப்பு, 2021 ஆம் ஆண்டில் செகந்திராபாத்தில் உள்ள மையத்தில் விசாரணை மேற்கொள்ளபட்டதாக ஹைதராபாத் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர் வெங்கடி தெரிவித்தார்.மருத்துவர் நம்ரதா 1995 ஆம் ஆண்டு தனது மருத்துவப் பயிற்சியைத் தொடங்கி, 1998 முதல் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைகளைச் செய்து வருவதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர்.

செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள யுனிவர்சல் ஸ்ரீஷ்டி கருத்தரித்தல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் அதிகாரிகளுடன் இணைந்து போலீசார் சோதனை நடத்தினர்.

ஐவிஎஃப் சிகிச்சை உட்பட முழு யுனிவர்சல் சிருஷ்டி மையமும் அனுமதியின்றி இயங்குவது கண்டறியப்பட்டு மூடப்பட்டது.

2021 ஆம் ஆண்டில் கருத்தரித்தல் மையத்திற்கு எதிராக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, செகந்திராபாத்தில் உள்ள மையத்தின் மீது தடை விதிக்கப்பட்டது என ஹைதராபாத் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர் வெங்கடி தெரிவித்தார்.

“இந்த மையம் கடந்த காலத்தில் தடை செய்யப்பட்டது. நம்ரதாவின் மருத்துவர் உரிமமும் 2021 இல் காலாவதியானது. அது புதுப்பிக்கப்படவில்லை. விசாரணையில் இப்போது அந்த மையம் வேறொரு மருத்துவரின் பெயரில் நடத்தப்படுவது தெரிய வந்துள்ளது,” என்று வெங்கடி கூறினார்.

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பிளாட்டை வாடகைக்கு எடுத்ததாகவும், பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் தொடர்பு கொண்டால் மட்டுமே அவர்கள் அங்கு வந்ததாகவும் வெங்கடி குறிப்பிட்டார்.

“நாங்கள் அதைப் பரிசோதிக்கச் சென்றபோது அது மூடப்பட்டிருந்தது. அதனால்தான் எங்கள் ஊழியர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதைத் தவிர, எந்த அலட்சியமும் இல்லை” என்று வெங்கடி பதிலளித்தார்.

ஹைதராபாத் நகரில் 158 செயற்கை கருத்தரித்தல் மையங்கள் (IVF & IUI) மற்றும் வாடகைத் தாய் மையங்கள் இயங்கி வருகின்றன என்று கூறுகிறது சுகாதாரத் துறை.

“நாங்கள் அனைத்து மையங்களிலும் ஆய்வுகளை மேற்கொள்வோம்,” என்கிறார் ஹைதராபாத் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர் வெங்கடி .

10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

விசாகப்பட்டினம், குண்டூர் மற்றும் கோபாலபுரத்தில் உள்ள யுனிவர்சல் சிருஷ்டி கருத்தரித்தல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மீது ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டி.சி.பி ரஷ்மி பெருமாள் தெரிவித்தார்.

இதில் மொத்தம் 50 பேர் ஈடுபட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த 2 முதல் 3 ஆண்டுகளுக்கான ஆவணங்கள் காவல்துறையினரின் சோதனைகளில் கைப்பற்றப்பட்டன.

“டஜன்கணக்கான சிகிச்சைகளும், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதற்கான நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டதற்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. விசாரணை நடந்து வருகிறது. வாடகைத் தாய் மூலம் கருத்தரித்தல் என்ற பெயரில் எத்தனை குழந்தைகள் விற்கப்பட்டன என்பது விசாரணையில் தெரியவரும்” என்று டி.சி.பி. கூறினார்.

காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை நடத்திய ஆய்வுகளில், யுனிவர்சல் சிருஷ்டி கருத்தரித்தல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பாலினத்தை கண்டுபிடிக்கும் சோதனை கருவிகள் இருப்பது தெரியவந்தது.

“பலர் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெற்று, பின்னர் டிஎன்ஏ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை” என்று குறிப்பிட்டார் டி.சி.பி ரஷ்மி பெருமாள் .

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான விதிகள் என்ன?

இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள கட்டுப்பாடுகள் உள்ளன.

மத்திய அரசு, வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) சட்டம், 2021-ன் கீழ் சில புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டம் 2022 ஜனவரி மாதத்தில் அமலுக்கு வந்தது.

இந்த சட்டத்தின் படி, வணிக ரீதியாக வாடகைத் தாய் மூலம், அதாவது பணத்திற்காக குழந்தைகளைப் பெறுவது சட்டவிரோதமானது.

தன்னலமற்ற வழிகளில் மட்டுமே குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள, சட்டம் அனுமதிக்கிறது.

“வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெறுவதற்கு யாராவது பணம் வசூலித்தால், அவர்கள் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும்” என்று டி.சி.பி ரஷ்மி பெருமாள் அறிவுறுத்தினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு