Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஆசிய கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி அறிவிப்பால் சர்ச்சை
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 2025 ஆசிய கோப்பையில் செப்டம்பர் 14 ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன (கோப்பு படம்)28 ஜூலை 2025, 04:56 GMT
புதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்
இந்தியா – பாகிஸ்தான் உறவில் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) 2025ஆம் ஆண்டு ஆசிய கோப்பைக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இந்தியா நடத்தும் இந்த ஆசிய கோப்பை போட்டித்தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது. இந்த முறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20 போட்டிகளாக நடத்தப்படும். செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கும் 2025 ஆசிய கோப்பை போட்டித்தொடர், செப்டம்பர் 28ஆம் தேதி நிறைவடையும்.
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளன. இரு அணிகளும் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறவிருக்கும் போட்டியில் களம் காண்கின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்கு வந்தால், இரு அணிகளும் மேலும் ஒரு போட்டியில் விளையாட வேண்டியிருக்கும்.
கடந்த மே மாதத்திற்குப் பிறகு, இரு நாட்டு கிரிக்கெட் அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன. காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, சமூக ஊடக பயனர்களில் பலரும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
“ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களின் நிலை என்ன?” என்று காங்கிரஸ் இளைஞரணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
2025ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையை நடத்தும் உரிமை இந்தியாவிற்கு உள்ளது. ஆனால் மே மாதம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு அந்த தொடர் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது.
சனிக்கிழமை, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருமான மொஹ்சின் நக்வி ‘CricketWins’ என்ற ஹேஷ்டேக்குடன் 17வது ஆசிய கோப்பைக்கான தேதிகளை அறிவித்தார். ஆனால் அட்டவணை குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்துக் கொள்ள பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லவில்லை (கோப்பு படம்)ஆசிய கோப்பையில் 8 அணிகள் பங்கேற்பு
ஏ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் , 17வது ஆசிய கோப்பை தொடரில் 8 நாடுகள் பங்கேற்கும். இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன.
‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தானைத் தவிர, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளும் உள்ளன.
‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன.
செப்டம்பர் 9ஆம் தேதி வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் ஆசியக் கோப்பை தொடர் தொடங்குகிறது.
இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த கட்டத்திற்குத் தகுதி பெறும். அடுத்த கட்டத்தில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், செப்டம்பர் 28-ஆம் தேதி இறுதிப் போட்டியில் மோதும்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர பொதுக் கூட்டம் டாக்காவில் வியாழக்கிழமை (2025, ஜூலை 24) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர் சந்திப்பில் பேசிய மொஹ்சின் நக்வி, போட்டி நடைபெறவிருக்கும் தேதிகள் அல்லது இடத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
ஜூலை 26 சனிக்கிழமை அவர் 17வது ஆசிய கோப்பைக்கான அட்டவணையை அறிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாட இந்தியா வந்த பாகிஸ்தான் அணி (கோப்புப் படம்)இந்த ஆண்டு தொடக்கத்தில் சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டிகள் துபையில் நடைபெற்றன.
அந்த நேரத்தில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடையே ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் பங்கேற்க வேண்டிய போட்டி திட்டமிடப்பட்டால், அது இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ நடத்தப்படாது, நடுநிலையான இடத்தில் நடத்தப்படும்.
ஆசியக் கோப்பையின் தற்போதைய சாம்பியன் இந்தியா, 2023ஆம் ஆண்டு நடைபெற்ற கடைசி ஆசியக் கோப்பைப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி பட்டம் வென்றது. கடைசி ஆசியக் கோப்பை போட்டிகள் ஒருநாள் போட்டி வடிவத்தில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், 2022ஆம் ஆண்டில், ஆசிய கோப்பை இருபது ஓவர் போட்டி வடிவத்தில் நடத்தப்பட்டது, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை பட்டம் வென்றது.
ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடுவது குறித்து சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
“ஆசிய கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை ஐசிசி அறிவித்துள்ளது” என்று இளைஞர் காங்கிரஸ் அணி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
“பயங்கரவாதமும் விளையாட்டும் ஒன்றாகச் செல்ல முடியாது என்று பிரதமர் கூறியிருந்தார், அப்படியென்றால் இது என்ன? மத்திய உள்துறை அமைச்சரின் மகன் ஜெய் ஷாதான் ஐ.சி.சி.யின் தலைவர். அதாவது எல்லாம் பரஸ்பர ஒப்புதலுடன் நடந்தது என்பது புரிகிறது. அப்படியென்றால், பஹல்காமில் கொல்லப்பட்டவர்களின் நிலை என்ன?” என்று அந்த பதிவு கேள்வி எழுப்புகிறது.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, மத்திய உள்துறை அமைச்சரின் மகன் ஜெய் ஷா ஐ.சி.சி.யின் தலைவர்காங்கிரஸ், சிவசேனா கேள்வி
சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதியும் மத்திய அரசு மற்றும் பிசிசிஐயிடம் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி தொடர்பான ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு பதிலளித்த அவர், “இந்தப் போட்டி நடந்தால் அது பிசிசிஐ-யின் தோல்வி மட்டுமல்ல, அரசாங்கத்தின் தோல்வியும் கூட. ஒருபுறம், கார்கில் தினத்தன்று, நமது ராணுவத்தின் வீர சாகசத்தை நினைவுகூருகிறோம். அதே நாளில், ஆசிய கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறப் போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வ ரியம் அறிவிக்கிறது” என்று கூறினார்.
“ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் நானும் இருந்தேன், பயங்கரவாதத்துடன் எந்தவித சமரசமும் இருக்கக் கூடாது என்று நாங்கள் கூறியிருந்தோம். பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகள் இன்னும் பிடிபடவில்லை. அந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பிசிசிஐ எவ்வாறு அனுமதிக்கிறது? நான் மட்டுமல்ல, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்தப் போட்டியை எதிர்ப்பார்கள்.” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
இந்தியா – பாகிஸ்தான் இடையில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாத போது, சர்வதேச போட்டிகளில் மட்டும் ஏன் விளையாடவேண்டும்? என முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான முகமது அசாருதீன் வினா எழுப்புகிறார்.
“எனது நிலைப்பாடு தெளிவாக உள்ளது, சர்வதேச போட்டிகளில் கூட நாம் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடக் கூடாது. அரசாங்கமும், கிரிக்கெட் வாரியமும் என்ன முடிவு செய்தாலும் அது நடக்கும்” என்று முகமது அசாருதீன் கூறினார் .
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்தியாவும் பாகிஸ்தானும் எவ்வாறு எதிர்வினையாற்றின?
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டிக்கு எதிராக சமூக ஊடகங்களில் பல இந்திய பயனர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நமிதா பல்யான் என்ற எக்ஸ் வலைதளப் பயனர், “கார்கில் விஜய் திவாஸில் ஆசிய கோப்பை 2025 அறிவிக்கப்பட்டது. நமது துணிச்சலான வீரர்களின் தியாகங்களுக்கோ அல்லது ஆபரேஷன் சிந்தூருக்கோ நிச்சயமாக மரியாதை இல்லை. ஏனென்றால், இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் மூலம் பெரும் தொகையை சம்பாதிப்பதே முன்னுரிமை என்பது வெட்கக்கேடு” என்று பதிவிட்டுள்ளார்.
தர்பண் என்ற பயனர் , “ஆசிய கோப்பை 2025 இல் இந்தியா-பாகிஸ்தான் போட்டி பற்றி கேள்விப்பட்டேன். இதை நீங்கள் (பிசிசிஐ) உண்மையில் அறிவிக்கிறீர்களா? அதுவும் காஷ்மீரில் நடந்த சமீபத்திய தாக்குதல்களுக்குப் பிறகு?” என்று கேள்வி எழுப்புகிறார் .
தாரியா என்ற எக்ஸ் தள பயனர், பாகிஸ்தானுடனான அனைத்து போட்டிகளையும் இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
“பி.சி.சி.ஐ.யும் இந்திய அரசாங்கமும் வெட்கப்பட வேண்டும். 2025 ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் இடையில் போட்டி நடைபெறுவது என்பது, பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை கேலி செய்வது போன்றது. பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து போட்டிகளையும் இந்தியா புறக்கணிக்க வேண்டும்” என்று அவர் கூறினார் .
இருப்பினும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் வரவேற்கின்றனர்.
சையத் முகமது உஸ்மான் என்ற பாகிஸ்தானிய பயனர், “அரசியலை விட கிரிக்கெட் முன்னுரிமை பெற்றிருப்பதைப் பார்க்க நன்றாக இருக்கிறது. இந்த விஷயத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு பிசிசிஐ பாராட்டப்பட வேண்டும்” என்று எழுதியுள்ளார்.
“ஆசியக் கோப்பை என்பது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி மட்டுமல்ல, நேபாளம், பூட்டான், ஹாங்காங் போன்ற சிறிய நாடுகளும் இந்த நிகழ்விலிருந்து பெறப்பட்ட வளங்களைக் கொண்டு தங்கள் கிரிக்கெட் அமைப்பை நடத்துகின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது” என்று அவர் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு