Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யுத்தம் நிலவிய காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து 2004 ஆண்டு பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) அமைப்பு என கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் மற்றும் அதன் முக்கியஸ்தராக செயற்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் பலர் செயற்பட்டிருந்தனர்.
இதில் அம்பாறை மாவட்டத்தில் அக்கால கட்டத்தில் பொறுப்பாளராக செயற்பட்ட இனிய பாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே. புஷ்ப குமார் பயன்படுத்திய அலுவலகங்கள் மற்றும் முகாம்கள் இன்று (28பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அணியினர் சோதனை மேற்கொண்டிருந்தனர்.
இதனடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஏலவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் வெள்ளை நிற ஆடை அணிந்து அவ்விடத்திற்கு இரண்டு வெவ்வேறு ஜீப் வண்களில் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
அந்த நபர்கள் இனங்காட்டியமைக்கு அமைய கடந்த காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகம் மற்றும் பிரதான முகாமாக செயற்பட்ட கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள தாளவெட்டுவான் சந்திக்கு அருகாமையில் உள்ள பாரிய வீடு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்களுடன் நீண்ட நேரமாக குறித்த வீட்டில் தரித்து நின்ற புலனாய்வு பிரிவினர் சோதனை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து அவர்கள் வெளியேறி சென்றதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.
தற்போது குறித்த வீட்டின் முன்பகுதி உணவகம் ஒன்றிற்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு கல்முனை வேப்பையடி மத்தியமுகாம் சொறிக்கல்முனை சம்மாந்துறை சேனைக்குடியிருப்பு அக்கரைப்பற்று திருக்கோவில் விநாயக பரம் காரைதீவு 40 ஆம் கட்டை தம்பட்டை பொத்துவில் கோமாரி காஞ்சிரங்குடா ஊரணி கஞ்சிகுடிச்சாறு என பல முகாம்களும் அலுவலகங்களும் செயற்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.