Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கடந்த இருபதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் “டில்கோ” விருந்தினர் விடுதியில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. சந்திப்புக்கான அழைப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் எடுத்திருந்தார். குறிப்பாக கருத்துருவாக்கிகளை அழைக்கும் பொழுது அவர் அனைத்துலகை விசாரணைப் பொறிமுறை தொடர்பாகக் கதைக்கப் போகின்றோம் வாருங்கள் என்று அழைத்திருந்தார். அதோடு கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி ஐநாவுக்கு அனுப்பப்பட்ட கூட்டுக்கடிதத்தின் தொடர்ச்சியாகவும் கதைக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.
எண்பதுக்கும் குறையாதவர்கள் வந்திருந்தார்கள்.தமிழ்த்தேசியப் பேரவையைச்சேர்ந்த கட்சித்தலைவர்கள்,பிரமுகர்கள்,குடிமக்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்,காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காப் போராடும் அமைப்புகளை சேர்ந்தவர்கள், அணையா விளக்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தவர்கள்,மத குருக்கள்…என்றிவ்வாறாக பலதரப்பட்டவர்களும் அங்கே வந்திருந்தார்கள். முதலில் கஜேந்திரக்குமார் பேசினார்.தொடர்ந்து அங்கு வந்திருந்தவர்கள் பேசினார்கள்.
ஒரு கட்டத்தில் கஜேந்திரகுமார் அந்தக் கூட்டத்தின் நோக்கம் ஜெனிவாவுக்கு கடிதம் அனுப்புவது என்று சொன்னார். வரும் செப்டம்பர் மாதம் வர இருக்கும் கூட்டத்தொடரை முன்னிட்டு ஒரு கடிதத்தை அனுப்ப வேண்டும். அந்தக் கடிதம் நான்கு ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்ட கடிதத்தின் தொடர்ச்சியாகவும், அந்தக்கடிதத்தில் ஏற்கனவே கூறப்பட்டவற்றை வலியுறுத்தியும் எழுதப்பட வேண்டும் என்று கஜேந்திரகுமார் கூறினார்.அவரைத் தொடர்ந்து உரையாற்றிய கலாநிதி குருபரனும் அதே கருத்தைக்கூறி அந்த நோக்கத்துக்காகத்தான் அந்த சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது என்று கூறினார்.ஆனால் அழைக்கப்பட்ட ஒரு பகுதியினருக்கு அது பொதுவாக சர்வதேசப் பொறிமுறையைக் குறித்து ஆராய்வதற்கு என்றுதான் கூறப்பட்டது. ஜெனிவாவுக்கு கடிதம் எழுதுவதற்காக என்று தெளிவாகக் கூறப்படவில்லை.
அதனால் அந்தச் சந்திப்பில் சர்வதேசப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கான பரந்துபட்ட வேலைத்திட்டம் தொடர்பாக ஆழமாக உரையாடப்படவில்லை.இக்கட்டுரை ஆசிரியரும் உட்பட சுரேஷ் பிரேமச்சந்திரன்,சிறீகாந்தா, காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்பு ஒன்றின் முக்கியஸ்தர்..போன்றவர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கும் அப்பால் சந்திப்பு பெருமளவுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு எழுதப்போகும் கடிதத்தை நோக்கியே குவி மையப்படுத்தப்பட்டது.
இந்த இடத்தில் அதற்கு முன் அதாவது நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கடிதத்தைப்பற்றிச் சுருக்கமாகக் கூறவேண்டும்.அந்தக் கடிதத்தைத் தயாரிக்கும் வேலையை முதலில் தொடங்கியது மன்னாரைச் சேர்ந்த சிவகரன்.அதன்பின் அவர் இக்கட்டுரை ஆசிரியரும் உட்பட வேறு சிலரையும் அதற்குள் ஈர்த்துக் கொண்டார்.முதலாவது சந்திப்பு கிளிநொச்சியில் இடம்பெற்றது.இரண்டாவது சந்திப்பு வவுனியாவில். மூன்றாவது சந்திப்பு கிளிநொச்சியில்.இந்த மூன்றாவது சந்திப்பின் விளைவாக ஒரு கூட்டுக்கடிதம் தயாரிக்கப்பட்டது.அந்தக்கூட்டுக் கடிதத்தில் பிரதான அம்சங்கள் இரண்டு.ஒன்று,பொறுப்புக்கூறலை மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்பது.அதாவது இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை பொறுப்புக்கூற வைப்பதற்கான அந்தப் பொறிமுறையை ஐநா மனித உரிமைகள் பேரவை என்ற மட்டுப்படுத்தப்பட்ட ஆணையைக் கொண்ட ஒரு கட்டமைப்புக்குள் வைத்துக் கொண்டிருக்காமல் ஐநா பொதுச் செயலர் பொறுப்புக்கூறலை மனித உரிமைகள் பேரவையிடமிருந்து தன்னிடம் எடுத்துக்கொண்டு,அதனை பன்னாட்டு நீதிமன்றங்களுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பது முதலாவது கோரிக்கை.
இரண்டாவது கோரிக்கை,போர்க்களத்தில் நிகழ்ந்த குற்றங்களை விசாரிப்பதற்காக ஒரு பொறிமுறையை உருவாக்குமிடத்து அதற்கு கால வரையறை இருக்க வேண்டும் என்பது. அதன்படி கஜேந்திரக்குமார் 6 மாத காலம் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கேட்டார்.ஆனால் ஏனைய கட்சிகள் குறைந்தது ஒரு வருடமாவது வழங்கவேண்டும் என்று கேட்டன.முடிவில் இந்த இரண்டு கோரிக்கைகளையும் முன்வைத்து கூட்டுக்கடிதம் எழுதப்பட்டது. 12 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து அவ்வாறு உலக நிறுவனம் ஒன்றுக்கு ஒற்றுமையாக ஒரு கூட்டுக்கடிதம் எழுதியமை என்பது அதுதான் முதல் தடவை.
ஆனால் அந்த கடிதத்திற்கு ஐநா பெருமளவுக்கு சாதகமாக பதில் வினையாற்றவில்லை.பொறுப்புக்கூறலை அவர்கள் தொடர்ந்தும் மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்கியதோடு, சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்பும் மனித உரிமைகள் பேரவையின் ஆணைக்கு உட்பட்டதாக, அணையாளருடைய அலுவலகத்துக்குள் இயங்கும் ஓர் அலுவலகமாக உருவாக்கப்பட்டது. அதற்குரிய கால எல்லையும் நிர்ணயிக்கப்படவில்லை. இன்றுவரை அது செயல்படுகிறது.
அதாவது அந்த கடிதத்தில் முன் வைக்கப்பட்ட இரண்டு கோரிக்கைகளையும் ஐநாவானது தமிழ் மக்கள் திருப்திப்படத்தக்க விதத்தில் நிறைவேற்றவில்லை. இந்நிலையில் இந்த செப்டம்பர் மாதம் வரவிருக்கும் ஐநா கூட்டத் தொடருக்கு முன்னதாக தமிழ்க் கட்சிகள் மீண்டும் ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்புவதே டில்கோ சந்திப்பின் நோக்கம் என்று கூறப்பட்டது.
ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வந்து போயிருக்கும் ஒரு பின்னணியில்,அவர் கொழும்பில் வைத்துத் தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மக்களின் கோரிக்கைகளோடு உடன்படாதவைகளாகக் காணப்படும் ஒரு பின்னணியில்,கொழும்பில் உள்ள ஐநா அலுவலகம் தெரிவிக்கும் கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டத் தவறியிருக்கும் ஒரு பின்னணியில்,இலங்கை அரசாங்கமானது சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம் ஒன்றை உருவாக்கவிருப்பதாக கஜேந்திரகுமார் அந்தச் சந்திப்பில் தெரிவித்தார்.
அந்தக் கட்டமைப்பானது நாட்டின் உள்நாட்டுப் பொறிமுறையின் நம்பகத்தன்மையைப் பலப்படுத்தும் நோக்கத்தை கொண்டது.இது ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் உள்நோக்கத்தை கொண்டுள்ளது.இலங்கை அரசாங்கத்தின் சட்டமா அதிபர் திணைக்களமானது அரசாங்கத்தின் ஓர் அங்கமாக இருப்பதனால் அதன் சுயாதீனப் பண்பு குறித்து கேள்விகள் உண்டு.எனவே உத்தேச சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகமானது சுயாதீனமானது என்ற ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முயற்சிக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்,அதுபோன்ற உள்நாட்டுப் பொறிமுறைகளை பலப்படுத்தும் கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தவேண்டும் என்றும் கஜேந்திரக்குமார் கேட்டுக்கொண்டார்.
சந்திப்புக்குத் தமிழரசுக் கட்சி அழைக்கப்பட்டிருந்த போதிலும் அது வந்திருக்கவில்லை. அண்மையில் அக்கட்சியின் பதில் தலைவர் சிவஞானம், ஐநாவுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் அங்கு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.எனினும் சில நாட்களின் பின் சிவஞானம் நடத்திய ஊடகச் சந்திப்பில்,தமது கட்சி அனுப்பிய கடிதம் உள்நாட்டுப் பொறிமுறையைக் கேட்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
ஐநாவுக்கு கடிதம் எழுதவேண்டும்.அதில் சந்தேகம் இல்லை.தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளை பேசுவதற்கு திறக்கப்பட்டிருக்கும் ஒரே அனைத்துலக அரங்கம் அதுதான்.அது பலவீனமானது.காஸாவில் மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலைத் தடுக்க முடியாத ஐநா தமிழ் மக்களுக்கு எப்படிப்பட்ட ஒரு நீதியைப் பெற்றுத்தரும் என்ற கேள்விக்கு இங்கு விடை முக்கியம்.
எனினும், தமிழ் மக்கள் ஐநாவுடன்தான் ”என்கேஜ்” பண்ணவேண்டும். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால், ஐநா பொறுப்புக்கூறலை அனைத்துலகை நீதிமன்றங்களிடம் பாரப்படுத்த வேண்டும் என்று ஒரு கடிதத்தைக் கூட்டாக எழுதுவதால் மட்டும் அது நடக்கப் போவதில்லை என்பதைத்தான் கடந்த நான்கு ஆண்டுகளும் நிரூபித்திருக்கின்றன.
டில்கோ சந்திப்பில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அம்மா ஒருவர் தெரிவித்ததுபோல தமிழ் மக்கள் ஐநாவில் முடிவுகளை எடுக்கும் நாடுகளை நோக்கி லொபி செய்ய வேண்டும். ஈழத் தமிழர்கள் நீதிக்கான தமது போராட்டத்தில் அனைத்துலக அரங்கில் தமக்கு ஆதரவான சக்திகளைத் திரட்டிக்கொள்ள வேண்டும்.அவ்வாறு அனைத்துல சமூகத்தைத் தம்மை நோக்கித் திரட்டிக் கொள்வது என்றால், அதற்கு முதல் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே திரட்டிக் கொள்ள வேண்டும். இது டில்கோ சந்திப்பில் இக்கட்டுரை ஆசிரியரால் சுட்டிக்காட்டப்பட்டது.ஆனால் அத்தகைய பரந்துபட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் அச்சந்திப்பில் பெரிய அளவுக்கு விவாதிக்கப்படவில்லை.அவை ஒரு சந்திப்பில் மட்டும் கூடி முடிவெடுக்கக்கூடிய விடையங்கள் அல்ல.
முன்னைய கடிதத்தின் தொடர்ச்சியாக கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்த் தரப்பு தாயகத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு உழைத்திராத ஒரு பின்னணிக்குள்,ஐநா தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டா விதத்தில் விடயங்களை நகர்த்திக் கொண்டுவரும் ஒரு பின்னணியில், மீண்டும் ஒரு கடிதம் எழுதுவதை எப்படிப் பார்ப்பது?
அதிலும் குறிப்பாக அக்கடிதத்தில் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சி கையெழுத்துப் போடவில்லை என்றுசொன்னால் அந்த கடிதத்துக்கு ஒப்பீட்டளவில் பெரிய அங்கீகாரம் இருக்காது.தமிழரசுக் கட்சி அவ்வாறு ஒரு கூட்டுக்கடிதத்தில் கையெழுத்து போடக்கூடிய நிலைமைகள் இல்லை என்பதைத்தான் டில்கோ சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு சிவஞானம் கூறிய பதிலுக்கூடாக உணரக்கூடியதாக உள்ளது.ஆயின், தமிழ்த் தரப்பு இரண்டாக நிற்கிறது என்று பொருள். இவ்வாறு தமிழ்த் தரப்பு இரண்டாக நிற்பது என்பது தமிழ் மக்களைப் பிரித்துக் கையாள விரும்புகின்ற வெளிச் சக்திகளுக்கு வாய்ப்பானது.
ஏற்கனவே நான்கு ஆண்டுகளுக்கு முன் எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து அனுப்பிய கடிதத்திற்கே ஐநாவின் பதில்வினை சாதகமாக இல்லாத ஒரு பின்னணிக்குள், மீண்டும் ஒரு கடிதத்துக்கு, அதிலும் உள்ளதில் பெரிய கட்சி கையெழுத்திடாத ஒரு கடிதத்துக்கு ஐநாவின் பதில்வினை எப்படியிருக்கும்?.
அதிலும் குறிப்பாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு நிகராக அரசாங்கத்துக்கும் ஏழு ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. எனவே தமிழ் மக்களின் விவகாரங்களைக் கையாள்வதற்குத் தனக்கும் ஆணை உண்டு என்று அரசாங்கம் கூறக்கூடிய நிலைமைகள் அதிகமுடைய அரசியல் மற்றும் ராஜீயச் சூழலில், தமிழ்த் தரப்பில் பிரதான,பெரிய கட்சியை இணைத்துக் கொள்ளாமல் ஒரு கடிதத்தை எழுதினால், அது அனைத்துலக அரங்கில் எப்படிப் பார்க்கப்படும்?
முதலாவது கடிதத்தின் பின் கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த கடிதத்தில் எழுதப்பட்டவற்றை நோக்கி அனைத்துலக சமூகத்தை உந்தித்தள்ளும் விதத்தில் தாயகத்தில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய நிர்ணயகரமான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.அதன் விளைவாகவே ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் கொழும்பில் வைத்து அரசாங்கத்துக்கு நோகாமல் கருத்துக் கூறிவிட்டுப் போயிருக்கிறார்.இந்நிலையில்,மீண்டும் ஒரு கடிதத்தை தமிழ்த் தரப்பு எழுதப் போகிறது. கடிதம் எழுத வேண்டும்.ஆனால் அதோடு மட்டும் நிற்கமுடியாது.அனைத்துலக சமூகத்தில் ஆதரவு சக்திகளைத் திரட்ட வேண்டும்.இதுதான் முன்னைய கடிதத்திற்குப் பின்னரான கடந்த நான்கு ஆண்டுகளில் பெற்றுக்கொண்ட பாடம்.