செல்போனை அடிக்கடி பார்ப்பதில் இருந்து விடுபடுவது எப்படி? சுவாரஸ்யம் தரும் தீர்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிபுணர்களின் கூற்றுப்படி, மொபைல் போன்களின் அதிகப்படியான பயன்பாடு நம்மை தனிமைக்கு இட்டுச் செல்கிறது (சித்தரிப்புப் படம்) எழுதியவர், ராஜ்வீர் கவுர் கில் பதவி, பிபிசி பஞ்சாபி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர்

உங்கள் மொபைல் போன் நன்றாக இருந்து, உங்களுக்கும் நேரம் இருந்து, நீங்கள் அதை பயன்படுத்தவில்லை என்றால் எப்படி இருக்கும்?

ஆரம்பத்தில் என்ன செய்வது என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், அப்படியான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால், நீங்கள் உங்களுக்கென நேரம் எடுத்து, நீண்ட காலமாக தள்ளிப்போட்டு வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். அது புத்தகம் வாசிப்பதாகவோ, முடிக்கப்படாத ஓவியத்தை முடிப்பதாகவோ அல்லது குடும்பத்தினருடன் பேசுவதாகவோ கூட இருக்கலாம். இதற்கு டிஜிட்டல் டீடாக்ஸ் என பெயர்.

மனித வாழ்க்கை மற்றும் வளர்ச்சியில் முன்பு முக்கிய அங்கம் வகித்த விஷயங்களின் முக்கியத்துவம் குறித்து மீண்டும் புரிந்துகொள்வதற்காக டிஜிட்டல் டீடாக்ஸ் செய்யப்படுகிறது.

டிஜிட்டல் சாதனங்களை அதிகம் சார்ந்திருக்கும் நமக்கு இப்போது அதிலிருந்து விலகி இருப்பதற்கான செயலிகள் தேவைப்படுகின்றன. அதனால் தான் டிஜிட்டல் டீடாக்ஸ் செயலிகள் குறித்து இப்போது விவாதிக்கப்படுகின்றன. இந்த செயலிகள் எப்படி செயல்படும், டிஜிட்டல் டீடாக்ஸுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

டிஜிட்டல் டீடாக்ஸ் செயலிகள் எவை?

பட மூலாதாரம், Getty Images

ஐஃபோன் மற்றும் ஆன்ட்ராய்டு போன்களில் இத்தகைய டிஜிட்டல் டீடாக்ஸ் செயலிகள் உள்ளன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

மொபைல்களை அதிக நேரம் பார்ப்பது மற்றும் டிஜிட்டல் சாதனங்களை அதிகம் சார்ந்திருப்பதை இத்தகைய செயலிகள் குறைக்க உதவுகின்றன. அதாவது, போன் திரைகளிலிருந்து உங்களை விலக்கி யதார்த்த வாழ்க்கையுடன் தொடர்புகொள்ள வைப்பதுதான் இந்த செயலிகளின் நோக்கம்.

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள டிஜிட்டல் டீடாக்ஸ் செயலி ஒன்றில், “உங்கள் போன்களில் இருந்து விலகி, உங்களுடன், மற்றவர்களுடன் மற்றும் உலகத்துடன் மீண்டும் இணையுங்கள்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

“உங்கள் போனிலேயே நீங்கள் மூழ்கியிருக்கிறீர்களா? உலகத்திடமிருந்து விலகி இருப்பதாக அச்சப்படுகிறீர்களா? அப்படியென்றால் இது டீடாக்ஸ் செய்வதற்கான நேரம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலிகள் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு உங்கள் போனை ‘ஷட்-டவுன்’ செய்கிறது. 10 நிமிடங்களிலிருந்து 10 நாட்கள், ஒரு மாதம் அல்லது அதற்கும் மேல் கூட இந்த நேரம் வேறுபடலாம்.

எவ்வளவு நேரம் நீங்கள் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்.

அந்த சமயத்தில் அனைத்து சமூக ஊடக செயலிகளும் செயல்படாமல் இருக்கும், அவசரகால தொலைபேசி அழைப்புகள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.

சில டீடாக்ஸ் செயலிகள் மொபைல் அழைப்புகளை அனுமதிக்கும், சில டீடாக்ஸ் செயலிகள் மொபைல் அழைப்புகளுக்கு நேர கட்டுப்பாட்டை கொண்டிருக்கும்.

ஆனால், இத்தகைய செயலிகளை தேர்ந்தெடுக்கும் போது எச்சரிக்கையாக இருப்பதும் முக்கியம்.

டிஜிட்டல் டீடாக்ஸ் செயலிகள் எப்படி செயல்படுகின்றன?

பட மூலாதாரம், Getty Images

ஏற்கெனவே சொன்னது போன்று, இந்த செயலிகள் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு உங்கள் மொபைல் போனை ஷட்-டவுன் செய்துவிடும். ஆனால், சில செயலிகள் எந்த சமூக ஊடகங்களை ஷட்-டவுன் செய்ய வேண்டும், எதை செய்ய வேண்டாம் என்பதை நாம் தேர்ந்தெடுக்க அனுமதிக்கும்.

இதை நானே தனிப்பட்ட ரீதியில் அனுபவித்துள்ளேன். விடுமுறை நாளன்று, மொபைலில் இருந்து சிறிது நேரம் ஏன் இடைவெளி எடுக்கக் கூடாது என நினைத்தேன். ஒரு செயலி உதவியுடன் என்னுடைய போனை மூன்று மணிநேரத்துக்கு டீடாக்ஸ் நிலையில் வைத்தேன்.

ஆனாலும், அந்த சமயத்திலும் என்னுடைய போனை ஒன்று அல்லது இருமுறை எடுத்துப் பார்த்தேன். அந்த சமயத்தில், ஆலோசனைகள் என்ற பெயரில் சுவாரஸ்யமான செய்திகள் திரையில் தோன்றின. அதாவது,

நீங்கள் நடைபயிற்சி செல்லலாம்.உங்களுக்கு பிடித்தமான உணவை சமைக்கலாம்.குடும்பத்துடன் அமர்ந்து, தேநீர் பருகி சுவாரஸ்யமாக உரையாடலாம்.இப்படியான பல செய்திகள் திரையில் தோன்றியதால், நான் என்னுடைய போனை தள்ளி வைத்துவிட்டேன். உண்மையில், இந்த மூன்று மணிநேரம் அன்றைய நாளின் மிகவும் அர்த்தமுடைய நேரமாக இருந்தது. என்னுடைய மனமும் மூளையும் கொஞ்சம் ஓய்வெடுத்தது, நான் மிகவும் ரிலாக்ஸாக உணர்ந்தேன்.

மொபைலை மிகவும் அத்தியாவசியமானவற்றுக்கு மட்டுமே பயன்படுத்த இந்த செயலிகள் உதவுகின்றன.

டிஜிட்டல் டீடாக்ஸ் ஏன் தேவை?

பட மூலாதாரம், Getty Images

தி இந்து ஆங்கில நாளிதழின்படி, இந்தியாவில் வயதுவந்த 86% பேரிடம் ஸ்மார்ட்போன்கள் உள்ளன, ஒவ்வொரு நாளும் 30% பேர் சுமார் ஆறு மணிநேரத்தை மொபைலில் கழிக்கின்றனர். நண்பர்கள் அல்லது சமூக ஊடகம் அல்லது யூடியூபில் பொழுதுபோக்கு அல்லது கேம் என எதுவாக இருந்தாலும் மொபைல் போன்களை சார்ந்து உள்ளனர்.

ரெட்சீர் ஸ்டிரேட்டஜியின் (RedSeer Strategy) 2024ம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ளவர்கள் சராசரியாக ஒருநாளைக்கு 7.3 மணிநேரம் (மொபைல் அல்லது கணினி) திரைகளை பார்க்கின்றனர்.

இது ஒருவரின் உடல் மற்றும் மனநல ஆரோக்கியத்துக்கு ஆபத்தானது என, நிபுணர்கள் கருதுகின்றனர்.

“நம்முடைய வீடுகளில் குடும்பத்தினருடன் இருக்கும் போது கூட நம்மை நாம் தனிமைப்படுத்திக் கொள்கிறோம்,” என்கிறார் குடும்ப மனநல ஆலோசகர் ஜஸ்லீன் கில்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”தனியாக வாழ்வது மனித இயல்பு அல்ல, மாறாக ஒரு சமூகமாக வாழ வேண்டும். மனிதர்கள் ஒன்றாக வாழ்வதிலிருந்து தான் சமூகம் என்பதே உருவாகத் தொடங்கியது. தேவையில்லாமல் (மொபைல் அல்லது கணினி) திரையை அதிகம் பார்ப்பது நம்மை கட்டுப்படுத்துகிறது. நம்முடைய அன்பானவர்களிடம் பேசுவதற்கு பதிலாக நாம் போனில் அதிக நேரம் செலவழிக்கிறோம்.” என்றார் அவர்.

ஜஸ்லீன் கூறுகையில், “தனிமையுடன் மூளை சம்பந்தமான பல நோய்களுக்கு தொடர்பு இருக்கிறது. உங்களின் துன்பங்கள் அல்லது பிரச்னைகளை யாருடனும் பகிராத போது அல்லது இந்த விஷயங்களுக்காக நீங்கள் ஏ.ஐ உதவியை நாடும்போது அது மனநல ரீதியிலான பிரச்னையாக மாறுகிறது” என கூறினார்.

அனுபவங்கள் மற்றும் யோசனைகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது தற்போது குறைந்துள்ளதாக அவர் கூறினார். ஆரோக்கியமான மனம் மற்றும் ஆரோக்கியமான உடல் குறித்தும் ஜஸ்லீன் பேசினார்.

அவர் கூறுகையில், “ஒரு ஆரோக்கியமான நபரை நோயாளியாக மாற்றுவதற்கான ஆற்றல் மூளைக்கு இருக்கிறது. ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால், அவரின் தனிப்பட்ட சக்தியின் மூலமாக மீண்டும் ஆரோக்கியமாக மாறவும் முடியும்” என்றார்.

“ஆனால், நீண்ட காலத்துக்கு தனிமை தொடர்ந்தால், மனநல பிரச்னைகளுடன் சேர்ந்து உடல்நல பிரச்னைகளும் ஏற்படுவதற்கு மனிதர்கள் ஆளாவதற்கான நாள் வெகுதூரத்தில் இல்லை.”

டிஜிட்டல் டீடாக்ஸ் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images

இந்தாண்டு ஜூன் மாதம் பள்ளி ஆசிரியர் அமர்ஜீத் கவுர் விடுமுறையில் இருந்தபோது, வழக்கமான நாட்களில் பள்ளி நிர்வாகம், குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடமிருந்து ஏராளமான அழைப்புகள் வரும், இதனால் தன்னுடைய குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியவில்லை என்பதை அவர் உணர்ந்தார்.

இந்த விடுமுறையை தன் குழந்தைகளுடன் முழுவதும் செலவிட அவர் முடிவு செய்தார். அவருடைய ஒரு குழந்தை 6ம் வகுப்பும் மற்றொரு குழந்தை 10ம் வகுப்பும் பயில்கின்றனர்.

ஆனால், இரு வாரங்கள் கழிந்தும் தன் குழந்தைகளுடன் அந்த ஆசிரியரால் நேரம் செலவழிக்க முடியவில்லை, ஏனெனில் அவர்கள் தங்கள் மொபைல் போன்களில் பரபரப்பாக இருந்தனர். அமர்ஜீத்தும் பெரும்பான்மையான நேரத்தை சமூக ஊடகங்களிலோ அல்லது உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் மொபைலில் பேசுவதிலோ செலவிட்டார்.

இதனால் போனை அதிக நேரம் உபயோகிப்பதை குறைக்க முயற்சி செய்தார். தன்னுடைய கவனம் பெரும்பாலும் போனை நோக்கி செல்வதால் அது கடினமான பணியாக இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

அவர் கூறுகையில், “குறிப்பாக எதையும் பார்க்க வேண்டும் என்ற தேவையில்லை என்றாலும், வாட்ஸ் அப்பை தொடர்ச்சியாக நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.” என்றார்.

இறுதியில், தன் நண்பரின் அறிவுரையின் பேரில் டிஜிட்டல் டீடாக்ஸ் செயலியின் உதவியை அவர் நாடினார்.

அவர் கூறுகையில், “அத்தகைய செயலி குறித்து நான் முன்பு கேள்விப்பட்டதில்லை. முதல் நாளில் நான் என் மொபைல் போனை இரண்டு மணிநேரம் அணைத்துவைத்தேன். அதையே என் குழந்தைகளை செய்யுமாறும் கூறினேன். அவர்களும் அதை செய்தனர்” என்றார்.

“அதன்பின் விடுமுறை தினங்களில் என்னுடைய போனை எட்டு மணிநேரம் அணைத்து வைத்தேன். இதனால் எனக்கு அதிக நேரம் கிடைத்தது, அமைதியான மனநிலையும் ஏற்பட்டது. நாங்கள் ஒன்றாக விடுமுறை நாட்களை கழித்தோம். நான் என் குழந்தைகளுடன் நேரம் செலவழித்தேன், அவர்கள் குறித்து நன்றாக புரிந்துகொண்டேன்.” என்றார்.

தற்போது டிஜிட்டல் டீடாக்ஸ் செயலிகள் தன் வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்டதாக கூறுகிறார் அவர்.

பள்ளி மற்றும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகிவரும் குழந்தைகளுக்கு இத்தகைய டிஜிட்டல் டீடாக்ஸ் மிகவும் முக்கியம் என்கிறார் ஜஸ்லீன் கில்.

அவர் கூறுகையில், “திரைகளில் இருந்து தம்மை விலக்கி வைப்பதன் மூலம் மாணவர்களால் அதிக கவனம் செலுத்த முடியும். கால தாமதம் செய்தல் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றை இதன்மூலம் குறைக்க முடியும்.” என்றார்.

தற்போது நம்முடைய பல முக்கியமான வேலைகள் போன் இல்லாமல் நின்று போகலாம், ஆனால் மனித பழக்கவழக்கங்கள் மற்றும் தேவைகள் குறித்து நாம் மறந்து போகக் கூடாது என்கிறார் ஜஸ்லீன்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு