முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாளை போர் வெற்றி நாளாக மகிந்த அரசு கொண்டாடியதற்கும்இ 1983 கறுப்பு யூலை தமிழின அழிப்பு நாளை ஜே.வி.பி.யின் தேசிய மக்கள் சக்தி அரசு நட்புறவு நாளாக கொண்டாடுவதிலும் என்ன வித்தியாசம்?

குசினியிலிருந்து குத்தாட்டம்வரை, வரி வசூலிலிருந்து வான்வழிப் பயணம் வரையான அனைத்துமே இன்று அரசியலாகி விட்டது என்று ஐரோப்பிய நாட்டு அரசியல் விமர்சகர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

உலக நாடுகளில் இலங்கை ஒரு குட்டித் தீவாக இருந்தாலும் மேற்கூறிய கருத்து நூற்றுக்கு நூறு இதற்கும் முற்றிலும் பொருத்தமானது. இதற்கு உதாரணமாக நிகழ்கால மூன்று விடயங்களை நோக்கலாம். 

அநுர குமரவின் தேசிய மக்கள் அரசாங்கம் முன்மொழிந்துள்ள புதிய கல்வித்திட்டம்இ தொடரும் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிகள்இ கறுப்புயூலை நினைவு நிகழ்வுகள் என அனைத்தும் அரசியலுடன் இணைந்தவைகளாக காணப்படுகின்றன. 

ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்குள் அமசடக்கமாக புதிய கல்வித்திட்டம் ஒன்றை கல்வியமைச்சராகிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தயாரித்துள்ளார். இதனை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியத்தை விளக்கி அருமையானதொரு உரையை ஜனாதிபதி அநுர குமர நாடாளுமன்றத்தில் நிகழ்த்தியுள்ளார். 

இளைய பரம்பரையினரின் கல்வியோடுட சம்பந்தப்பட்ட ஒரு திட்டத்தை தயாரிப்பதற்கு திறந்தவெளி ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். ஒரு பாடப்புத்தகத்தை தயாரிப்பதற்கே துறைசார் கல்வியாளர் குழுவை நியமிப்பது வழமை. ஆனால் இப்போது தயாரிக்கப்பட்டுள்ள கல்வித்திட்டத்தை உருவாக்கியவர்கள் யார்? ஆசிரிய சங்கங்கள், பாடசாலை அபிவிருத்திச் சபைகள் என்று எவரது ஆலோசனையும் பெறாது கல்வி அமைச்சர் இதனை தயாரித்துள்ளதாகத் தெரிகிறது. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்தவர் என்ற தகைமை மட்டும் உள்ள இவரால் எவ்வாறு மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும்? 

1931ல் இலங்கை சட்டசபையில் கல்வி அமைச்சராகவிருந்த சி. டபிள்யு. டபிள்யு. கன்னங்கரா அறிமுகம் செய்த இலவச கல்வித் திட்டமும்இ 1956ல் கல்வி அமைச்சராகவிருந்த டபிள்யு. தகநாயக்க (பணிஸ் மாமா) அறிமுகம் செய்த இலவச மதிய உணவு திட்டமுமே இதுவரை மாற்றமில்லாது இருப்பவை. பதியுதீன் மஹ்முத் கல்வி அமைச்சராக இருந்தபோது அறிமுகம் செய்த என்.சி.ஜி.இ.இ எச்.என்.சி.இ. கல்வித் திட்டங்களை பின்னர் அமைச்சராக வந்த ரணில் விக்கிரமசிங்க இல்லாமற் செய்தார். இப்படித்தான் சகல கல்வி அமைச்சர்களும் முன்னைய அமைச்சர்கள் அறிமுகம் செய்த திட்டங்களை மாற்றியமைத்தனர். 

இது, மாணவர்களின் கல்வியோடு அரசியல்வாதிகள் நடத்தும் விளையாட்டு. இப்போது ஹரிணி அமரசூரிய தயாரித்துள்ள கல்வித் திட்டத்தை அடுத்துவரும் அரசாங்கம் இல்லாமற் செய்யும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? மாணவர் கல்வி என்பது சிறுகதையோ குறுங்கதையோ அல்ல. தொடர்கதை போன்றது. ஒவ்வொரு ஆட்சியாளரும் மாணவர்களோடு தங்கள் வித்தையை காட்ட முனையக்கூடாது. 

கிருசாந்தி என்ற சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியின் படுகொலையுடன் ஆரம்பமான மனிதப் புதைகுழி நெடுங்கதையாகி, இப்போது சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பல எலும்புக்கூடுகளை வெளியே கொண்டு வருகிறது. யூலை 25 வரையான காலப்பகுதிக்குள் 90 எலும்புக்கூடுகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. குழந்தை ஒன்றுடன் அதன் பால் போச்சியும் காணப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பல சிறார்களின் எலும்புக்கூடுகளும் எச்சங்களும் அவர்களின் உடைகளும் பாடசாலை பைகளும் மீட்கப்பட்டுள்ளன. 

செம்மணி சித்துப்பாத்தி மயானம் நல்லூர் பிரதேச சபையின் நிர்வாகத்திலானது. இந்த வருட ஆரம்பத்தில் இங்கு எரியூட்டும் மயான மேடை அமைக்க நல்லூர் பிரதேச சபை 55 லட்சம் ரூபாவை ஒதுக்கியது. இதற்கான ஆரம்ப வேலையாக நிலத்தை தோண்டும்போதுதான் மனித எலும்புகள் காணப்பட்டன. இதனை மூடி மறைத்து எரியூட்டும் மேடையைக் கட்டுமாறு மயான சபைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. எனினும், துணிச்சலான இரண்டு உறுப்பினர்கள் பொலிசில் முறைப்பாடு செய்ததால் விவகாரம் நீதிமன்றம் சென்றது. இனவெறி படையினரின் அராஜகத்தை வெளிக்கொணர வழிவகுத்த அந்த இருவருக்கும் தமிழர் சமூகம் நன்றிக் கடப்பாடு உடையது. 

மனிதப் புதைகுழிக்கு நீதி விசாரணை நடைபெறுமென்று சில அமைச்சர்கள் கூறுகின்றனர். கடந்த வாரம் யாழ்ப்பாணம் சென்று பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் எவரும் புதைகுழிப் பக்கம் எட்டியும் பார்க்கவில்லை. 1971 முதல் 1989 வரையில் ஆயிரக்கணக்கான இவர்களின் தோழர்கள் படுகொலை செய்யப்பட்டவர்கள். அவர்களின் எலும்புக்கூடுகளின் மேல் நின்று தேர்தலை நடத்தி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு படுகொலைகளின் வலி தெரியாதிருக்க முடியாது. ஜனாதிபதி அநுர குமர இது தொடர்பாக அசாத்திய மௌனம் சாதிப்பது ஏனென்று புரியவில்லை. 

நீதியான விசாரணையையும் நியாயமான நீதியையும் இவரது தலைமையிலான அரசாங்கம் வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கிறார்கள். வசதி கருதிய மறதியாக இதனை ஆட்சித்;தரப்பு எடுத்துக் கொள்ளக்கூடாது. 

கறுப்பு யூலை வாரம் 42வது ஆண்டாக நினைவு கூரப்படுகிறது. 1983 யூலையில் இனப்படுகொலைக்கு ஆளானவர்களுக்கு எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. 

அகதிகளாக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் கிடைக்கவில்லை. தமிழர்களின் வணிக நிறுவனங்கள், சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதன் உரிமையாளர்கள் வெட்டியும் கொத்தியும் எரிக்கப்பட்டனர். 

தர்மிஷ்டர் என்று கூறப்பட்ட அன்றைய ஜனாதிபதி ஜே.ஆரின் ஆசிர்வாதத்துடன் மேற்கொள்ளப்பட்ட மோசமான இனஅழிப்பு இது. அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாச புத்தம் தர்மம் கூறிக்கொண்டு குண்டர்களுக்கு உதவி வழங்கினார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். 1983 யூலை 23 நள்ளிரவுக்கு பின்னர் ஜே.ஆர். அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட ஊழித்தாண்டவம் சுமார் ஒரு வாரத்துக்கு மேலாக நீடித்தது. 

இது ஆரம்பமாவதற்கு பன்னிரண்டு நாட்களுக்கு முன்னர், யூலை 11ம் திகதி லண்டன் ரெலிகிராப் பத்திரிகையின் செய்தியாளர் இயன் மார்ட் அவர்களுக்கு அளித்த செவ்வியில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன குறிப்பிட்ட வாசகம் சர்வதேச அளவில் பிரபல்யமானது. 

‘The more you put the pressure in the North, the happier the Sinhala people will be here. Really, if I starve the Tamils out, the Sinhala people will be happy” (வடக்குக்கு நான் மேலும் அழுத்தம் கொடுத்தால்; இங்குள்ள சிங்கள மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவர். உண்மையாக, தமிழர்களை நான் பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மேலும் மகிழ்வடைவர்) என்று கூறிய இவரது எதிர்பார்ப்பை இவரது அரசிலிருந்த அமைச்சர் சிறில் மத்தியு பொறுப்பேற்று நிறைவேற்றினார். 

ஆனால்இ 1983 இனஅழிப்புக்கு தாம் அவ்வாறு தெரிவித்ததோ அல்லது தமது ஐக்கிய தேசிய கட்சி அரசோ ஒருபோதும் காரணமில்லை என்றே ஜே.ஆர். தொடர்ந்து கூறி வந்தார். இதனை நிரூபிக்கும் வகையில் நாட்டு மக்களுக்கான தமது உரையையும் அவர் தயாரித்திருந்தார்ட தமிழ் மக்கள் மீதான தாக்குதல், படுகொலைகள், சொத்தழிப்புகளுக்கு இடதுசாரி கட்சிகளும் (சமசமாஜ கட்சிஇ கம்யுனிஸ்ட் கட்சி), ஜே.வி.பி.யினருமே காரணம் எனக்கூறி அவைகளைத் தடை செய்தார். இந்த வரலாறு ஜே.ஆரின் இனவாத பக்கங்களுக்கு முக்கிய பகுதி. 

இது இடம்பெற்று 41 வருடங்களின் பின்னர் ஜே.வி.பி.யின் மறுவடிவமான தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது. இவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் சந்தித்த முதலாவது கறுப்பு யூலை இந்த வாரத்திலானது. உண்மையாகவே தங்கள் அரசு இன மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்று தேர்தல் காலத்தில்; கூறியதை நிரூபிப்பதற்கு இவர்களுக்குக் கிடைத்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். குறிப்பாகச் சொல்வதானால், கறுப்பு யூலையை இவர்களும் சேர்ந்தே அனுஷ்டித்திருக்க வேண்டும். இதனை முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமர விசேட அறிக்கையைக் கூட வெளியிட்டிருக்கலாம். 

மாறாக, கறுப்பு யூலை நாளை நட்புறவு நாள் என்று நகைப்புக்கு இடமாகப் பிரகடனப்படுத்திஇ தமது தோழர்களை ரயிலில் யாழ்ப்பாணம் அனுப்பி குத்தாட்டம் நடத்தி, வலி சுமந்த மக்களை புண்படுத்தியிருக்கிறார் அநுர குமர. சிங்கள பௌத்த இனவாத வரலாற்றை மறைக்க எடுக்கப்படும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. 

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நாளை போர் வெற்றி நாள் என்று மகிந்த அரசு பிரகடனம் செய்து கொண்டாடியதற்கும், கறுப்பு யூலை இனப்படுகொலை நாளை நட்புறவு நாளென்று அறிவித்து தமிழர்களின் உணர்வை மலினப்படுத்தியதற்கும் என்ன வித்தியாசம்?

கறுப்பு யூலை தமிழின அழிப்புக்கு ஜே.வி.பி.யை குற்றஞ்சாட்டி அவர்களைத் தடை செய்ததை, நட்புறவு நாள் கொண்டாட்டத்தின் வாயிலாக ஜே.வி.பி.யின் ஆட்சி ஏற்றுக்கொண்டுள்ளதாக எடுத்துக் கொள்ளலாமா?