யாழ்ப்பாணத்தில் தீயில் எரிந்த நிலையில் வயோதிபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த மணியாஸ் சேவியர் (வயது 84) என்பவரே இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வயோதிபரின் வீட்டில் இருந்து புகை வெளிவருவதை அவரது உறவினர் அவதானித்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வயோதிபர் படுக்கையில் தீயில் எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில்  காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை , சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக குறித்த முதியவர் நடக்க முடியாத நிலையில் தனது வீட்டில் தனிமையில்  வாழ்ந்து வந்ததாகவும், புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவராக காணப்பட்டமையால் , அவர் புகைப்பிடிக்கும் போது மெத்தையில் நெருப்பு பட்டு இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.  சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.