இந்திய பாஸ்போர்ட் இருந்தால் விசா இல்லாமல் எந்தெந்த நாடுகளுக்கு செல்லலாம் தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் எழுதியவர், சாரதா மியாபுரம்பதவி, பிபிசி செய்தியாளர்22 நிமிடங்களுக்கு முன்னர்

ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் (Henley Passport Index) சமீபத்திய தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் அமெரிக்க பாஸ்போர்ட்டை விட உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்த தரவரிசையில் இந்தியா 80-வது இடத்தில் இருந்தது, ஆனால் 2025-ல் 77-வது இடத்தை எட்டியுள்ளது.

விசா இல்லாமல் பயணிக்கக் கூடிய நாடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஹென்லி இந்த தரவரிசையை வழங்குகிறது.

இந்திய பாஸ்போர்ட் மூலம் 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளின் அடிப்படையில் ஹென்லி இந்த தர வரிசையை தயாரிக்கிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

தர வரிசை வழங்கப்படுவது எப்படி?

ஹென்லி இணையதளத்தின் படி, ‘ஹென்லி பாஸ்போர்ட்குறியீடு’ உலகளவில் உள்ள 199 வெவ்வேறு பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி 227 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணப்படும் வாய்ப்பை ஒப்பிடுகிறது.

விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கும் நாடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த பகுப்பாய்வு செய்யப்படுகிறது.

நுழைவு விசா (Visa on Arrival – VOA) அல்லது மின்னணு பயண அங்கீகார (Electronic Travel Authority – ETA) நடைமுறைகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

193 நாடுகளுக்கு (VOA மற்றும் ETA உட்பட) விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கும் சிங்கப்பூர் பாஸ்போர்ட் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

190 நாடுகளுக்கு செல்ல அனுமதிக்கும் ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் பாஸ்போர்ட்கள் அடுத்த இடத்தைப் பிடித்தன.

இந்த பட்டியலில் 77-வது இடத்தில் உள்ள இந்திய பாஸ்போர்ட், விசா இல்லாமல், நுழைவு விசா அல்லது மின்னணு பயண அங்கீகாரம் மூலம் 59 நாடுகளுக்கு பயணிக்க அனுமதிக்கிறது. இந்திய பாஸ்போர்ட் உள்ளவர்கள் முன்கூட்டியே விசா பெறாமல் இந்த நாடுகளுக்கு பயணிக்கலாம்.

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 28 நாடுகளுக்கு விசா இல்லாமலும், 28 நாடுகளுக்கு நுழைவு விசாவுடனும், 3 நாடுகளுக்கு மின்னணு பயண அங்கீகாரம் மூலமும் பயணிக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images

விசா இல்லாமல் எந்தெந்த நாடுகளுக்கு செல்லலாம்?

இந்திய பாஸ்போர்ட் இருந்தால் விசா இல்லாமலே அங்கோலா, பார்படாஸ், பூட்டான், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், குக் தீவுகள், டொமினிகா, ஃபிஜி, கிரெனடா, ஹைட்டி, இரான், ஜமைக்கா, மற்றும் கிரிபாட்டி ஆகிய நாடுகளுக்கு பயணிக்கலாம்.

இவை தவிர, மக்காவ், மடகாஸ்கர், மலேசியா, மொரிஷியஸ், மைக்ரோனேஷியா, மான்ட்செராட், நேபாளம், நியுவே, பிலிப்பைன்ஸ், ருவாண்டா, செனகல், செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், தாய்லாந்து, டிரினிடாட் மற்றும் டொபாகோ, கஜகஸ்தான், மற்றும் வனுவாட்டு ஆகிய நாடுகளும் இந்திய குடிமக்களை விசா இல்லாமல் நுழைய அனுமதிக்கின்றன.

நுழைவு விசா

உங்களிடம் இந்திய பாஸ்போர்ட் இருந்தால் நீங்கள் பொலிவியா, புரூண்டி, கம்போடியா, கேமரூன் தீவுகள், கேப் வெர்டே தீவுகள், ஜிபூட்டி, எத்தியோப்பியா, கினியா பிசாவ், இந்தோனேசியா, ஜோர்டான், லாவோஸ், மற்றும் மாலத்தீவுகளுக்கு ‘நுழைவு விசா’ முறையில் பயணிக்கலாம்.

இவை தவிர, மார்ஷல் தீவுகள், மங்கோலியா, மொசாம்பிக், மியான்மர், நமீபியா, பலாவு தீவுகள், கத்தார், சமோவா, சியாரா லியோன், சோமாலியா, இலங்கை, செயின்ட் லூசியா, தான்சானியா, திமோர் லெஸ்டே, துவாலு, மற்றும் ஜிம்பாப்வே ஆகியவை நுழைவு விசாவை வழங்குகின்றன.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.மின்னணு பயண அங்கீகாரம் (ETA)

கென்யா, செஷல்ஸ், மற்றும் செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகியவை மின்னணு பயண அங்கீகாரத்தை(ETA) அனுமதிக்கின்றன.

இதன் பொருள் இந்த நாடுகளுக்குள் நுழைய உங்களுக்கு விசா தேவையில்லை.

ஆனால், அங்கு செல்வதற்கு முன், டிஜிட்டல் மின்னணு பயண அங்கீகார செயல்முறைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு