நூற்றாண்டு பழமையான சிவன் கோவில் கம்போடியா – தாய்லாந்து மோதலின் மையமாக இருப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கம்போடியா மற்றும் தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள ப்ரே விஹார் கோயில்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தாய்லாந்து – கம்போடியா எல்லைப் பகுதியில் நடைபெற்று வரும் ராணுவ மோதலில் இதுவரை குறைந்தது 16 பேர் இறந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர்.

வியாழக்கிழமை (2025, ஜூலை 25) காலை முதல் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கிடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. கம்போடியாவின் ராணுவ தளத்தின் மீது வான்வழி குண்டுவீச்சு நடத்தியதாக தாய்லாந்து தெரிவித்துள்ளது.

அண்டை நாடுகளான தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் இடையிலான சர்ச்சை பல நூற்றாண்டுகளுக்கும் முந்தையது. கம்போடியா பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்தபோது, இரு நாடுகள் இடையே எல்லை வகுக்கப்பட்டபோது, இந்த சச்சரவு தொடங்கியது.

இந்த சிக்கலானது, 2008ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையிலான சர்ச்சைக்குரிய பகுதியில் அமைந்துள்ள 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில் ஒன்றை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக கம்போடியா பதிவு செய்ய முயன்றபோது பதற்றமாக மாறியது.

சிவாலயத்தை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக மாற்றுவதற்கு தாய்லாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதன் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையே பல மோதல்கள் ஏற்பட்டதில், இரு தரப்பிலும் பல வீரர்களும் பொதுமக்களும் இறந்தனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

கடந்த மே மாதத்தில் நடைபெற்ற மோதலில் கம்போடிய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டபோது இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்கள் மேலும் அதிகரித்தன.

கடந்த இரண்டு மாதங்களில், இரு நாடுகளும் பரஸ்பரம் எல்லைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. தாய்லாந்திலிருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை இறக்குமதி செய்வதை கம்போடியா தடை செய்துள்ளதுடன், மின்சாரம் மற்றும் இணைய சேவைகளையும் துண்டித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக, இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் படைபலத்தை அதிகரித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

காணொளிக் குறிப்பு, சிவாலயத்தின் புராதன வரலாறு

கம்போடியாவின் சமவெளிகளில் உயரமான பீடபூமியின் விளிம்பில் அமைந்துள்ள ப்ரே விஹார் கோயில், சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்கிறது யுனெஸ்கோ. இந்தக் கோவில் கம்போடிய மக்களின் நம்பிக்கைக்குரிய முக்கியமான மதத் தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

11ஆம் நூற்றாண்டில் இந்த ஆலயத்தின் பிரதான கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் ஒன்பதாம் நூற்றாண்டில் அங்கு உருவாக்கப்பட்ட துறவி மடம் ஒன்றே பிற்காலத்தில் மிகப்பெரிய ஆலயமாக கட்டப்பட்டது என்று ஆலய வரலாறு கூறுகிறது.

தொலைதூர இடத்தில் அமைந்துள்ள இந்த யுனெஸ்கோ பாரம்பரிய தளம் நன்கு பாதுகாக்கப்படுகிறது. மிகச்சிறந்த கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் செதுக்கப்பட்ட கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ப்ரே விஹார் கோவில் தகராறில் சர்வதேச நீதிமன்றம் 1962 ஜூன் 15 அன்று தனது தீர்ப்பை வழங்கியது .

தனது பிரதேசத்தில் ப்ரே விஹார் கோவில் இடிபாடுகள் இருக்கும் ஒரு பகுதியை தாய்லாந்து ஆக்கிரமித்துள்ளதாக, சர்வதேச நீதிமன்றத்தில் கம்போடியா புகார் அளித்திருந்தது.

இந்த இடம், கம்போடிய மக்களின் நம்பிக்கைக்குரிய முக்கியமான மதத் தளம் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்தக் கோவில் யாருக்கு சொந்தம் என்பது குறித்து முடிவெடுக்கவும், 1954 முதல் அங்கு நிறுத்தப்பட்டுள்ள தாய்லாந்து படைகளை திரும்பப் பெற உத்தரவிட கோரியும் சர்வதேச நீதிமன்றத்தை அணுகியது கம்போடியா.

நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு எதிராக தாய்லாந்து முதற்கட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்தது, அவை நீதிமன்றத்தால் 1961 மே 26 அன்று நிராகரிக்கப்பட்டன.

1962 ஜூன் 15 அன்று அதன் இறுதித் தீர்ப்பில், 1904 ஆம் ஆண்டு பிராங்கோ-சியாமிஸ் ஒப்பந்தம் சர்ச்சைக்குரிய பகுதியை நீர்நிலைக் கோட்டின்படி வரையறுத்ததாகக் கூறியது. மேலும் கூட்டு எல்லை நிர்ணய ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட வரைபடம், கம்போடியாவின் எல்லைக்குள் கோயிலைக் காட்டியது.

இந்த வரைபடத்தை ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று தாய்லாந்து வாதிட்டது. மேலும், ”இந்த வரைபடத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவேளை வரைபடத்தை ஏற்றுக்கொண்டிருந்தாலும், அது தவறான எண்ணத்திலேயே செய்யப்பட்டிருக்கும்” என்று தாய்லாந்து வாதிட்டது

இருப்பினும், தாய்லாந்து உண்மையிலுமே அந்த வரைபடத்தை ஏற்றுக்கொண்டதாகவும், கோயில் கம்போடிய எல்லைக்குள் அமைந்துள்ளது என்றும் நீதிமன்றம் முடிவு செய்தது.

அத்துடன், அங்கு நிறுத்தப்பட்டுள்ள ராணுவ அல்லது காவல்துறை துருப்புக்கள் அனைத்தையும் தாய்லாந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், 1954க்குப் பிறகு ஆலயத்தில் இருந்து அகற்றப்பட்ட அனைத்தையும் கம்போடியாவிற்குத் திருப்பித் தர வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தற்போதைய மோதல் போராக மாறக்கூடும் என்று தாய்லாந்து எச்சரிக்கிறதுஎச்சரிக்கை விடுத்த தாய்லாந்து – காரணம் என்ன?

எல்லையில் ஏற்பட்ட கண்ணிவெடி வெடிப்பில் தாய்லாந்து ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து, கம்போடியாவிலிருந்து தனது தூதரை தாய்லாந்து திரும்ப அழைத்துக் கொண்டதால் இரு நாடுகளுக்கும் இடையே தற்போது பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன் பிறகு வியாழக்கிழமை, தாய்லாந்தும் கம்போடியாவும் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டிக் கொண்டன.

எல்லைக்கு அருகே தாய்லாந்து துருப்புக்களைக் கண்காணிக்க கம்போடிய ராணுவம் டிரோன்களை நிறுத்தியபோது மோதல் தொடங்கியதாக தாய்லாந்து கூறுகிறது.

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான மோதல் ‘போராக உருவெடுக்கக்கூடும்’ என தாய்லாந்து எச்சரித்துள்ளது. இந்த மோதலால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது கம்போடியா ஷெல் தாக்குதல் நடத்தியதாக தாய்லாந்து குற்றம் சாட்டியுள்ளது. ராக்கெட்டுகள் வீசப்படும் எல்லைக்குள் உள்ள அனைத்து கிராமங்களையும் காலி செய்துள்ளது.

பொதுமக்கள் மீது கிளஸ்டர் வெடிமருந்துகள் ஏற்படுத்தும் தாக்கத்தின் காரணமாக உலகின் பெரும்பாலான பகுதிகளில் கிளஸ்டர் வெடிமருந்துகளைப் பயன்பாட்டிற்கு தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனால் தாய்லாந்து கிளஸ்டர் வெடிமருந்துகளை பயன்படுத்துவதாக கம்போடியா குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தாய்லாந்து பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.அமைதியை காக்க வேண்டுகோள் விடுக்கும் சர்வதேச நாடுகள்

“விரோதப் போக்கை உடனடியாக நிறுத்தவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும், மோதலை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும்” என இரு நாடுகளையும் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

“தாய்லாந்து-கம்போடியா எல்லையில் வன்முறை அதிகரிப்பது குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம், பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்த செய்திகள் கவலைகளை அதிகரிக்கின்றன” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகோட் வழக்கமான ஊடக சந்திப்பு ஒன்றில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

கம்போடியா மற்றும் தாய்லாந்துடன் அரசியல் மற்றும் உத்தி ரீதியிலான உறவுகளைக் கொண்டுள்ள சீனா, மோதல் குறித்து “ஆழ்ந்த கவலை” கொண்டிருப்பதாகக் கூறியது.

இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலம் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வார்கள் என சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இரு நாடுகளிடமும் அமைதிக்காக வேண்டுகோள் விடுத்துள்ளன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு