நிமிஷா பிரியா மரண தண்டனை நிறுத்தப்பட்ட பின் 10 நாட்களில் நடந்த முக்கிய மாற்றங்கள்

படக்குறிப்பு, நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டுமென அப்துல் ஃபத்தா மஹ்தி வலியுறுத்தியுள்ளார்.எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 5 நிமிடங்களுக்கு முன்னர்

தலால் அப்தோ மஹ்தி எனும் ஏமன் நாட்டு குடிமகனை கொலை செய்த வழக்கில், ஜூலை 16ஆம் தேதி நிமிஷா பிரியாவுக்கு நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை கடைசி நேரத்தில் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது, இந்தியாவில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது.

ஆனால் மஹ்தி குடும்பத்திற்கும் அவரது ‘வஸாபி’ (Wasabi) பழங்குடி இனத்திற்கும் அது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது சமூக ஊடகப் பதிவுகள் மூலம் இதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

‘நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டுமென’, தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்துல் ஃபத்தா மஹ்தி தனது முகநூல் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பாக, ஏமனில் நிமிஷாவின் வழக்கை கையாளும் அதிகாரம் பெற்றவரான சாமுவேல் ஜெரோம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஒரு பதிவை வெளியிட்டார் அப்துல் ஃபத்தா மஹ்தி. நிமிஷா பிரியாவின் பெயரில் சேகரிக்கப்பட்ட நிதியை ஜெரோம் முறைகேடாகப் பயன்படுத்தியதாக அதில் அவர் கூறியிருந்தார்.

மறுபுறம், சாமுவேல் ஜெரோம் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கமளித்தார். பின்னர் அந்தப் பதிவை அப்துல் ஃபத்தா நீக்கியதை பிபிசி உறுதி செய்தது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

மேலும், ‘சில மதகுருமார்களின் தலையீடு மூலம்தான் நிமிஷாவின் தண்டனை தள்ளிவைக்கப்பட்டது மற்றும் அவர்கள் மஹ்தியின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நிமிஷாவை விடுதலை செய்வார்கள், பணம் கொடுத்தால் நிமிஷாவை மீட்டுவிடலாம் போன்ற செய்திகள் மஹ்தி குடும்பத்தையும், பழங்குடியினரையும் கோபப்படுத்தியுள்ளன. அது நிமிஷாவிற்கான மன்னிப்பைப் பெறும் செயல்முறையை இன்னும் தாமதப்படுத்துகிறது’ என்று நிமிஷாவை மீட்க முயற்சிப்பவர்கள் கூறுகிறார்கள்.

இந்த வழக்கில் ஜூலை 16க்கு பிறகு இதுவரை நடந்துள்ளது என்ன?

மதத்தலைவர்களின் தலையீடு

பட மூலாதாரம், Abdul Fattah Mahdi/Facebook

படக்குறிப்பு, ஏமனைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை செய்த வழக்கில் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூலை 22-ஆம் தேதி, அப்துல் ஃபத்தா மஹ்தி தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

“மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மதத்தலைவர் காந்தபுரம் (கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார்) உடன் நிமிஷா விடுதலை குறித்து பேசியதாக கூறுபவர்களுக்கு எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் அவர்களை எந்த நேரத்திலும் அல்லது இடத்திலும் தொடர்பு கொள்ளவோ அல்லது சந்திக்கவோ இல்லை என்பதையும் நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.” என்று கூறியிருந்தார்.

மேலும், எங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் என்று பொய்யாக கூறிக்கொண்டு மதத்தலைவரை சிலர் சந்தித்து பேசியிருக்கிறார்கள். எங்கள் அனுமதியின்றி நடந்துள்ள இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

இதுகுறித்து நிமிஷாவை மீட்க உதவி வரும் ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் குழுவின்’ உறுப்பினர் பாபு ஜானிடம் பேசியபோது, “நிமிஷா விஷயத்தில் யார் உதவினாலும் எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், மஹ்தி குடும்பத்தின் மன்னிப்பு என்பதுதான் பிரதானம். அதை விடுத்து, தாங்கள் தலையிட்டால் உடனே நிமிஷா விடுதலை ஆகிவிடுவார் போன்ற செய்திகள் மஹ்தியின் குடும்பத்தையும், அவர்களது பழங்குடியையும் கோபப்படுத்தியுள்ளது” என்கிறார்.

படக்குறிப்பு, ஏ.பி. அபுபக்கர் முஸ்லியார்அதேபோல, ஆந்திராவைச் சேர்ந்த கிறிஸ்தவ சுவிசேஷகர் கே.ஏ.பால் என்பவர் கடந்த ஜூலை 22 தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார். அதில், ‘நிமிஷா விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்றும் அதற்கான முயற்சிகளை தான் எடுத்து வருவதாகவும்’ அவர் கூறியிருந்தார்.

இந்தக் காணொளியை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த அப்துல் ஃபத்தா மஹ்தி, “இப்படி பரப்பப்படும் அனைத்து பொய்யான செய்திகளும் உண்மையை மாற்றிவிடாது. எங்களின் ஒரே கோரிக்கை பழிவாங்கலை (Qisas- இஸ்லாமிய முறைப்படி கண்ணுக்கு கண் என்ற தண்டனை) அமல்படுத்துவதாகும். நாங்கள் நீதியைத் தவிர வேறு எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்துப் பேசிய சாமுவேல் ஜெரோம், “மஹ்தியின் குடும்பம் ஒரு உயிரை இழந்துள்ளது. நிமிஷாதான் அந்தக் கொலையைச் செய்தவர். அப்படியிருக்க அந்தக் குடும்பத்தின் நியாயத்தைப் புரிந்துகொள்ளாமல் சிலர் சுயலாபத்தோடு செயல்படுவது அவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்கிறார்.

மேலும், “ஷரியா சட்டத்தில் இடம் இருப்பதாலும், நிமிஷாவின் தாய் மற்றும் மகளைக் கருத்தில் கொண்டும் அவரைக் காப்பாற்ற நாங்கள் போராடி வருகிறோம். ஆனால், இது போல சிலர் சுயலாபத்திற்காக செயல்படுவதால், மஹ்தியின் குடும்பம் விரக்தி அடைந்து, பழிவாங்கல் முறையிலான மரண தண்டனை உடனடியாக வேண்டும் என கோருகிறார்கள்” என்கிறார் சாமுவேல்.

அதேசமயம் இந்தியாவிலிருந்து சிலர் உண்மையில் ஏமன் பிரமுகர்களிடம் இந்த வழக்கு குறித்து பேசியிருந்தாலும் கூட, அவர்களால் தான் நிமிஷாவின் மரண தண்டனை தள்ளிவைக்கப்பட்டது என்று கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் கூறுகிறார்.

அப்துல் ஃபத்தா மஹ்தி தனது மற்றொரு முகநூல் பதிவில், “ஏமனில் மரண தண்டனையை நிறுத்தி வைப்பது அசாதாரணமானது அல்ல. மாறாக, இது பல சந்தர்ப்பங்களில் நிகழும் ஒரு சாதாரண நடைமுறையாகும். சில தண்டனைகள் குற்றவாளியை மரண தண்டனை களத்திற்கு அழைத்துச் சென்ற பிறகும் கூட நிறுத்தப்பட்டன.

ஆனால், எது அசாதாரணமானது என்றால், நிமிஷாவுக்கான மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை நிர்ணயிக்காமல் வழக்கை நிறுத்தி வைப்பதுதான். எனவே, பழிவாங்கும் செயலை (கிஸா) நிறைவேற்றுவதற்கு ஒரு புதிய அதிகாரப்பூர்வ தேதியை நிர்ணயிக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

நிமிஷா வழக்கில் யார் நேரடியாக தலையிட முடியும்?

படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று ஏமன் சென்ற நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, சாமுவேல் ஜெரோமின் குடும்பத்துடன் ஏமனில் தங்கியுள்ளார்.இது குறித்துப் பேசிய ‘சேவ் நிமிஷா கவுன்சில்’ உறுப்பினர் மூசா, “இந்த வழக்கில் தொடக்கம் முதல் நான்கு தரப்புகள் மட்டுமே உள்ளது.

இந்திய தூதரகம் மற்றும் இந்திய அரசுஹூத்தி அரசாங்கம்நிமிஷா பிரியா குடும்பத்தினர் மற்றும் வழக்கை கையாளும் அதிகாரம் பெற்ற சாமுவேல்தலால் மஹ்தியின் குடும்பம் மற்றும் அவர்களின் பழங்குடி அமைப்புநிமிஷா பிரியாவின் விடுதலை இந்த நான்கு தரப்புகளின் ஒருங்கிணைப்புடன் மட்டுமே சாத்தியமாகும்.” என்கிறார்.

சேவ் நிமிஷா கவுன்சில் உறுப்பினர்கள், கிராண்ட் முஃப்தி என யாராக இருந்தாலும் இந்த நான்கு தரப்புகள் உதவி இல்லாமல், நேரடியாக நிமிஷா வழக்கில் தலையிட முடியாது என்கிறார் மூசா.

“மஹ்தி குடும்பத்துடனான பேச்சுவார்த்தைகளிலும் எங்களால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. இதுவே நிதர்சனமான உண்மை” என்று குறிப்பிடும் அவர், “தொடக்கம் முதலே இந்திய அரசு பல உதவிகளைச் செய்து வருகிறது. ஹூத்தி அரசும் ஒத்துழைப்பு அளித்து வருகிறது.” என்று கூறினார்.

சாமுவேல் ஜெரோம் மீது அப்துல் ஃபத்தா முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசிய மூசா, “மஹ்தி குடும்பத்தின் மன்னிப்பைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான செலவாக 40,000 டாலர்கள் (34 லட்சம் ரூபாய்) எங்களது அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இந்திய வெளியுறவுத் துறை கணக்கிற்கு அனுப்பப்பட்டது. அதன் பின்னர் இந்திய தூதரகம் ஏமன் வழக்கறிஞரிடம் பணத்தைக் கொடுத்து, எழுத்துப்பூர்வமாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு உத்தரவிட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ கடிதமும் உள்ளது” என்றார்.

படக்குறிப்பு, நிமிஷாவைக் மீட்க அவரது குடும்பத்தினர் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர் (புகைப்படத்தில் நிமிஷா- டோமி தாமஸ்)”இந்திய தூதரகம் மூலம் அனுப்பும் பணத்தை எப்படி ஒருவர் தவறாகப் பயன்படுத்த முடியும்.” என்கிறார் அவர்.

மேலும், “மன்னிப்பு வழங்குவது முற்றிலும் தலால் குடும்பத்தினரையும் அவர்களது பழங்குடியினரையும் பொறுத்தது என்றும், அதில் எந்த உத்தரவாதமும் இருக்க முடியாது என்றும் ஆரம்ப செலவுகளுக்கான பணத்தைக் கோருவது மன்னிப்புக்கான உத்தரவாதம் அல்ல என்றும் ஏமன் வழக்கறிஞர் தூதரகத்திற்கு எழுதிய கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.

செலவுகளுக்கான பணத்தை நாங்கள் வழங்கவில்லை என்றால், எல்லாம் முன்பே முடிந்திருக்கும். இன்று இந்த வழக்கில் நிமிஷா இன்னும் உயிரோடு இருக்கிறார் என்றார், அது அந்த நான்கு தரப்புகளின் தலையீடுகளால்தான்.” என்று கூறினார்.

ஏமன் மக்களின் பார்வை என்ன?

படக்குறிப்பு, கோப்புப் படம்ஏமனைச் சேர்ந்த நோமன் அல் பாகர் என்ற நபர் முகநூலில் நிமிஷா வழக்கு தொடர்பாக பல பதிவுகளை இட்டு வருகிறார்.

அவர் ஜூலை 17 வெளியிட்ட ஒரு பதிவில், “இந்த வழக்கில் மரண தண்டனை வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை, இந்தியா எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அல்லது உண்மைகளை மாற்ற முயற்சித்தாலும், நாங்கள் அதிலிருந்து பின்வாங்க மாட்டோம். நீதியைப் பெற ஏமன் மக்களும், வஸாபி பழங்குடியும் ஒன்றிணைய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

“இதுவே நிமிஷா வழக்கு குறித்த ஏமன் பொது மக்களின் மனநிலை” என்கிறார் சாமுவேல் ஜெரோம்.

“நிமிஷா ஒரு கொலைக் குற்றவாளி. நம் வீட்டில் ஒருவரைக் கொலை செய்துவிட்டு, பணம் தருகிறேன் அல்லது ஒரு மதத்தலைவரின் செல்வாக்கைப் பயன்படுத்தி விடுதலை பெறலாம் என குற்றவாளியின் தரப்பு கூறினால் நமக்கு எவ்வளவு கோபம் வரும்? எனவே ஏமன் மக்களின் கோபம் நியாயமானதுதான்” எனக் கூறுகிறார் சாமுவேல் ஜெரோம்.

“இதைப் புரிந்துகொள்ளாமல் இந்தியாவில் இருந்துகொண்டே யாராலும் நிமிஷாவை மீட்டுவிட முடியாது. நான் உள்பட எந்தவொரு தனிநபராலும் முடியாது. மஹ்தி குடும்பம் மன்னிப்பு அளிக்காவிட்டால், நிமிஷாவின் மரண தண்டனை நிறைவேற்றப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை.” என்கிறார்.

“மஹ்தி குடும்பத்தின் மன்னிப்பு மட்டுமே நிமிஷாவின் விடுதலைக்கான வழி. அது பணத்தின் மூலம் அல்லது அதிகாரத்தின் மூலம் கிடைக்காது என்பதால்தான் நாங்கள் பல நாட்களாக அதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.” என்கிறார் அவர்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.வழக்கின் பின்னணி என்ன?

கேரளாவின் பாலக்காடைச் சேர்ந்த நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார்.

அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். டோமி தாமஸும், நிமிஷாவின் மகளும் இப்போது கேரளாவில் வசித்து வருகின்றனர்.

நிமிஷா, 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். 2017ஆம் ஆண்டு, ஏமனின் அல்-பைதா நகரில், ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடல் தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து ஏமனின் மாரிப் எனும் நகரில் நிமிஷா கைது செய்யப்பட்டார்.

மஹ்திக்கு ‘அதிகப்படியான மயக்க மருந்து’ கொடுத்து கொலை செய்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது.

மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை எல்லாம் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.

இந்தக் கூற்றுகளை தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்தெல் ஃபத்தா பிபிசியிடம் மறுத்திருந்தார்.

தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்கவே, அவருக்கு நிமிஷா மயக்க மருந்து கொடுத்தார் என்றும் ஆனால் தவறுதலாக மருந்தின் அளவு கூடிவிட்டது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டில், சனாவில் உள்ள நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. 2023இல் ஏமன் உச்ச நீதிமன்றத்தால் அது உறுதி செய்யப்பட்டது. நிமிஷா பிரியா, தற்போது சனா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு