செம்மணி மனிதப் புதைகுழியில், ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை ஊடுருவும் ராடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.

செம்மணிப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பகுதிக்கு மேலதிகமாக, செய்மதிப் படங்களை அடிப்படையாக வைத்து துறைசார் நிபுணர் சோமதேவா அடையாளப்படுத்திய இடத்திலும் என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டிருந்தன. 

இதையடுத்து, செம்மணியில் குறிக்கப்பட்ட பகுதிக்குள் மட்டும் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்காமல், பரந்துபட்ட அகழ்வுகள் இடம்பெற வேண்டும் என்று உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வலியுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்தே, வெளிநாட்டில் இருந்து ஜி.பி.ஆர். ஸ்கான் இயந்திரம் கொண்டுவரப்பட்டு அங்கு விரிவான ஆய்வு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. 

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளை ஆய்வு செய்வதற்கு இலங்கையில் இதுவரை ஏ.எம்.ரி. ஸ்கானரே பயன்படுத்தப்பட்டன. 

இந்த நிலையில், தரையை ஊடுருவும் ராடர் (ஜி.பி.ஆர்.) என்று அழைக்கப்படும் ஸ்கானர் மூலம் இலங்கையின் மனிதப் புதைகுழியொன்று ஆய்வு செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பமாக செம்மணிப் புதைகுழியே பதிவாகியுள்ளது.  

தரையை ஊடுருவும் ராடர் (ஜி.பி.ஆர்.) அமைப்பு, கொங்கிரீட்களையும் ஊடுருவி நிலத்துக்குக் கீழ் இருக்கும் விடயங்களை திரையில் வெளிப்படுத்தும் நவீனத்துவம் கொண்டது. 

கனடா போன்ற நாடுகளில் கட்டடங்களின் கீழ் இருந்த மனிதப் புதைகுழிகளை அவதானிப்பதற்கு இந்த ஸ்கானரே பயன்படுத்தப்பட்டது.  

ஆய்வுப் பணிகளுக்காக செம்மணிப் புதைகுழிக்கு அருகாக உள்ள பல பகுதிகள் துப்புரவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்கான் ஆய்வில் பல பகுதிகளில் என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகின்றது. 

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டதும், இந்த ஆய்வு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது